’எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது? இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது...’ காரில் லில்லியின் வீட்டிற்குச் செல்லும்போது இன்ஸ்பெக்டர் கண்ணன் இந்தப் பாடலை ஹம் பண்ணிக்கொண்டே இருந்தார். அதென்னவோ தெரியவில்லை. காதலாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் கண்ணதாசன் பாடல்கள் எல்லா இடத்துக்கும் பொருத்தமாக அமைந்துவிடுகின்றன.
லில்லி மரணத்தின் விசாரணைப் பாதை, பள்ளியில் ஆரம்பித்து அவள் வீடு நோக்கிச் செல்கிறது. இன்ஸ்பெக்டரின் கார் முருகுநகர் எக்ஸ்டென்ஷன் தாண்டி பத்மாவதி நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. அங்கு சினேகா அபார்ட்மெண்டில் லில்லியின் வீடு இருந்தது. அந்தக் காம்பவுண்டுக்குள் நுழைந்த கார், வாட்ச்மேன் சொன்ன இடத்தில் சென்று ஓய்வெடுத்தது. அபார்ட்மெண்ட்டின் வசதியைப் பார்த்ததும், "மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு ஆசிரியரால் எப்படி இங்கு வசிக்க முடியும்..?" என்ற யோசனை வந்தது.
அப்பார்ட்மெண்ட் அவ்வளவு ஆடம்பரமாக இருந்தது. இப்போதெல்லாம் மனிதனின் வாழ்க்கையானது குடியிருக்கும் இடத்திற்குத் தகுந்தார்போல் மாறுகிறது. பார்க் உடன் இருக்கும் அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் காருடன்தான் இருக்க வேண்டும். அப்பதான் அபார்ட்மெண்டுக்கு கௌரவம் என்ற நிலை இருக்கிறது.
மழை வந்தால் கார் மேம்பாலத்தின் மீது வரிசைகட்டி நின்றிருக்கும் அளவிற்கு ஏரியில் வீடுகள் இருக்கும். இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், நல்ல வசதிகளுடன்தான் இருக்கும். அந்த இடத்தைப் பார்த்ததும் அசந்து போனார் கண்ணன்.
"மாத வாடகையே லில்லியின் சம்பளத்திற்குச் சரியாக இருக்கும். லில்லியின் கணவர் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவராக இருப்பார்" என்று நினைத்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர். லில்லியின் வீட்டு அழைப்பு மணியில் கை வைத்தார். கை வைத்தவுடன் அது ஆசையாய்ச் சிணுங்கியது. உள்ளே இருந்து உருவம் நடந்துவரும் நிழல் தெரிந்தது. கதவை முழுவதும் திறக்காமலே ஒரு பெண்ணின் விசாரணை. அவர் யார் என்பதை அறிந்ததும் உள்ளே அழைத்தார் பெண்மணி.
உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தார். மெத்தென்ற சோபாவும் இதமாய் பதமாய் அவரைத் தாங்கியது. அந்தப் பெண்ணின் அழைப்பின் பேரில் லில்லியின் கணவர் பாலு வெளியே வந்தார்.
"வணக்கம்.. வாங்க சார்" எதிரில் சோபாவில் அமர்ந்தார் பாலு.
"வணக்கம். உங்க மனைவி விபத்து கேஸை நான்தான் டீல் பண்றேன். உங்க மனைவிக்கு எதிரிங்க யாராவது இருக்காங்களா?" என்று அதே பழைய மாவில் இட்லி சுட்டார் இன்ஸ்பெக்டர்.
"அப்படி இருக்க வாய்ப்பில்லை சார். லில்லி எல்லார்கிட்டயும் அனுசரித்துத்தான் செல்வாள். என் அம்மாவிடம் ஒருமுறை கூட சண்டை வந்தது இல்லைங்க சார்" என்று லில்லியின் குணத்திற்கு மறுக்க முடியாத உதாரணம் காட்டினார்.
"ஆமாங்க ரொம்ப நல்ல பொண்ணு. இப்படி அல்பாயிசுல போயிட்டாங்க. கடவுளுக்கே கண்ணில்லைங்க" என்று இயலாமையைக் கடவுளிடம் காட்டினார் லில்லியின் மாமியார்.
"அடப்பாவிங்களா... கண்ணாத்தான்னு பேர் வைக்கிறதும் நீங்கதான் கண்ணில்லைன்னு திட்டுவதும் நீங்க தான்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.
"நீங்க எங்க வேலை பார்க்கிறீர்கள்?"
"மருந்து தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். என் மனைவியின் கேஸ் எந்த அளவுக்குப் போய்கிட்டிருக்கு. விபத்திற்குக் காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தானே?” என்று கேள்விகளை அடுக்கினார் பாலு.
"இதுவரைக்கும் இது தற்செயல் விபத்து மாதிரிதான் தெரியுது. போகப்போகத்தான் தெரியும்”
"பாலு உங்க மருந்து கம்பெனியில் பிக்ரிக் அமிலம் எதற்காவது பயன்படுமா?"
"ஆமாம் சார். டிரைனிட்ரோ பென்செலால் கூட்டுக் கலவையில் தீக்காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது" என்று பொறுப்பாகப் பதிலளித்தார் பாலு.
"பாலு.. இதை வெப்பப்படுத்தினா என்னாகும்"?
"இது நைட்ரேட் மாதிரியே வெடிக்கும் சார். அதனால்தான் இது வெடிபொருள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தறாங்க. இந்த விவரமெல்லாம் எதுக்குன்னு தெரிஞ்சுகலாமா சார்" என்று தயங்கினார்.
"ஒன்னுமில்லை பாலு, என் மகள் +2 படிக்கறா. அவ கேட்டா. பாடத்தில வருதுன்னு. அவளுக்குச் சொல்றதுக்குதான் கேட்டேன்" என்று உண்மையை மறைத்தார்.
"அந்தக் கம்பெனியில் நீங்க எந்தப் பிரிவில் வேலை செய்றீங்க?”
"ரா மெட்டீரியல் வாங்கற பிரிவில் இருக்கேன்" என்று என்னவோ அரிச்சந்திரனின் அடுத்த வாரிசு மாதிரி கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் பாலு.
பேசிக்கொண்டே கண்ணனின் கண்கள் அந்த அறையை சைட் அடித்தன. எல்லா பொருள்களின் மீதும் ஜொள்ளுவிட்டன. ஷோகேஸில் விலையுயர்ந்த பொம்மைகள், ஒவ்வொரு பொருளும் பிராண்ட் ஐட்டமாக மின்னின.
"சரி அப்ப நான் கிளம்பறேன்" என்ற கண்ணனிடம்,
"சார்..ஒரு சின்ன வேண்டுகோள்” என்று தயங்கினார் பாலு.
என்ன என்பது போலப் பார்வையை உயர்த்தினார் இன்ஸ்பெக்டர்.
"இந்தக் கேசைப் பள்ளி நிர்வாகத்தின் மீது திருப்பிவிட்டு நஷ்ட ஈடாகக் கொஞ்சம் கணிசமான தொகையை வாங்கிடலாம் சார்" என்று தன் கிரிமினல் புத்தியைக் காட்டினார் பாலு.
"இப்படி கூடச் செய்யலாமே பாலு... கேசை உங்க பக்கமே திருப்பிடலாமே. இன்னும் ஸ்ட்ராங் எவிடன்ஸா இருக்கும்" என்று கோபமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் இன்ஸ்பெக்டர்.
காரில் வரும்போதெல்லாம் மனம் லில்லியையும், பாலுவையுமே நினைத்தது.
"இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு இவர்கள் பெறும் பணம் பத்தாது. இவர்கள் இருவருமே சட்டவிரோதமாக என்னவோ பண்றாங்க..
லில்லி பள்ளியிலிருந்து எடுத்துவரும் பிக்ரிக் அமிலம் பாலு மூலமாக மருந்து கம்பெனியில் பணமாக்கப்படுகிறது. எஸ்.கே.எஸ். பள்ளி நிர்வாகத்தில் சரியாகத் தலையிடாமல், கண்காணிக்காமல் இருப்பதால்தான் இப்படி நடக்கிறது. அப்ப லில்லி சேர்மனுக்கு சாதகமாக என்னவோ வேலை செய்துகிட்டிருக்கணும். அந்த தாரணி சொன்னதுபோல, மாணவிகளை சேர்மனிடம் பேச சொல்லியிருப்பாங்களோ? நிச்சயம் இருக்கும்.
லில்லி ஆசிரியர், மான்களை வேட்டையாடும் சிறுத்தைக்குத் தோழியான நரி என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.
லில்லியால் பாதிக்கப்பட்ட யாரோதான் இப்படி விபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். யார் அந்தப் பரிதாபத்துக்குரிய ’எக்ஸ்’ என்ற குழப்பத்திலேயே வீட்டிற்கு வந்த கண்ணன், அந்தப் பள்ளியைப் பற்றியும் லில்லியைப் பற்றியுமே நினைத்துக்கொண்டிருந்தார். மனித மனமானது விநோதம் நிறைந்தது. எங்கேயோ யாருக்கோ நடந்த கொடுமையைக் கேள்விப்பட்டாலே நமக்கு நடந்தது போல வருந்தும். நம் கண்ணெதிரே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அது கண்டுகொள்ளாமல் கடந்து போகச் சொல்லும். அந்த நேரத்தில் சூழ்நிலைதான், நம் உதவும் தன்மையை நிர்ணயிக்கிறது. இன்ஸ்பெக்டரின் மூளை அந்த விபத்து பற்றியே குடைந்துகொண்டிருந்தது.
லில்லி பயன்படுத்துவதற்கு நீரை பீக்கரில் ஊற்றி வைத்திருக்கலாம், அந்த நேரம் பார்த்து சாதனா, பிரின்சிபல் அழைக்கிறார்கள் என்று சொன்னதும் அப்படியே வைத்துவிட்டுப் போய்விட்டார். திரும்பி வந்ததும் பிரின்சிபல் அட்வைஸ் பண்ணதையே நினைத்து மனம் குழம்பியிருப்பாள். அந்த மனநிலையில் பீக்கரில் என்ன இருக்கிறது என்பதை யோசிக்காமல் அதை வெப்பப்படுத்தியிருக்க வேண்டும்.
லில்லி லேப்பை விட்டுச் சென்ற நேரத்தைப் பயன்படுத்தி யாரோ ஒரு எக்ஸ் நீரைக் கொட்டிவிட்டு, பிக்ரிக் அமிலத்தை மாற்றியிருக்கிறார்கள். அந்த எக்ஸ் யாரென்று கண்டுபிடிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்ட்டரின் போலீஸ் மூளை சுறுசுறுப்பானது.
அந்த எண்ணத்துடன் உடல் மட்டும் உறங்கச் சென்றது. விடியலில் இன்ஸ்பெக்டரின் மனதில் இல்லீகல் நடவடிக்கை கொண்ட லில்லிக்கு ஏற்பட்டது சரிதான் என்ற எண்ணம் தோன்றுமா? இல்லை சட்டம்தான் முக்கியம் என்ற கடமை, எக்ஸைத் தேடி விலங்கிடுமா? புரியாத புதிராய் தொடரும் இரவு நீண்டுகொண்டிருக்கிறது, ஒரு பரபரப்பான தீர்வை நோக்கி.
(திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #42