Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #39

Published on 20/11/2021 | Edited on 22/11/2021

 

marana muhurtham part 39

 

"எஸ்.கே.எஸ். சார் உங்க கூடவே இரண்டு ஆடுகள் இருக்கு. இதுல எது கருப்பு ஆடுன்னு கண்டுபிடிங்க" இஸ்ன்பெக்டரின் அந்த சொற்கள், வெடிகுண்டு வீசியது போன்ற அதிர்ச்சியை அங்கே ஏற்படுத்தியது. 

 

வாழ்க்கையை வெல்வதற்கும், கொல்வதற்கும்  ஒரு சொல் போதும். காந்தியடிகளின் 'அகிம்சை' என்ற சொல் அவர் உலகை வெல்ல காரணமாக இருந்தது. 

 

இதைக்கேட்டதும் எஸ்.கே.எஸ். முகம் வெளிறிப் போனார்.

 

கவியும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தாள். அசகாய சூரனான ராமிடமும் ஹைவோல்ட்  அதிர்ச்சி தெரிந்தது.

 

’ராமும், கவியும் தான் என் கூடவே இருக்கிறவர்கள். இதுல யார் எனக்கு துரோகம் செய்கிற கருப்பு ஆடு?’ அவர் முகத்தில் குழப்பம் என்ற சொல்லுக்கான பொருள் அப்படியே ’காபி பேஸ்ட்’ ஆகியிருந்தது..

 

அங்கு வந்ததில் இருந்து அனைவரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்த இன்ஸ்பெக்டருக்கு...  ராம் மற்றும் கவியில் நடவடிக்கைகள்தான் எமர்ஜன்ஸி லைட்டை ஆன் பண்ணியிருந்தது. அவர்களை மைக்ரோ மில்லி மீட்டரில் வாட்ச் பண்ணியதில் இன்ஸ்பெக்டருக்கு  அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் பெருவனமாய் மண்டியது. அதே நேரம் அவர்கள், ஏதோ ஒன்றிற்காகப் போராடுகிறார்கள் என்பதையும் அவரது மூளை அவருக்கு சைலண்ட் மோடில் உணர்த்தியது.

 

அந்த ஒன்று எஸ்.கே.எஸ்.சிடம் இருந்து கிடைக்கவேண்டிய  நியாயமாகக் கூட இருக்கலாம். அதனால் தான் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.எஸ்.சின் கழுத்தில்  ’கருப்பு ஆடு’ என்ற கொக்கியை மாட்டி, இழுத்தார். இதன் பிறகு எஸ்.கே.எஸ். .எப்படி நடந்துகொள்கிறார் என்று  பார்க்கலாம் என நினைத்தார். 

 

இன்ஸ்பெக்டர் வீசிய வலையில் இருந்து தப்பிக்க,  எஸ்.கே.எஸ், ராம், கவி மூவரும் மெளனம் என்னும்  வளைக்குள் ஒளிந்து கொண்டனர்.

 

ஆனாலும் சுதாரித்துக்கொண்ட எஸ்.கே.எஸ்.  “என்ன சார் சொல்றீங்க?’ என்று திகைப்பாய்க் கேட்டார். அந்த நேரம்  பார்த்து... இன்ஸ்பெக்டர் விசாரிக்க விரும்பிய ப்ளஸ் டூ மாணவி ஹரிணி, பிரின்ஸ்பல் அறையில் காத்திருப்பதாக, ஒரு ஆசிரியர் சொல்ல, அவர்கள் பிரின்சிபல் அறை நோக்கி நடந்தனர்.

 

இன்ஸ்பெக்டரை பார்த்ததும் அந்த மாணவி, கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள். அவளை பயம் குத்தகைக்கு எடுத்திருந்தது..

"உன் பேர் என்னம்மா?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும்,

"ஹரிணி" என்று ஏழு ஊருக்கு அப்பால் இருந்து பேசுவது போல், சொன்னாள்.

"காலைல சாப்டியா? இல்லையா? சாப்ட்டு நாளு நாள் ஆனா மாதிரி  பேசறயே" என்று பிரின்சிபல் சத்தம் போட்டார்.

"நாங்க பேசிக்கறோம். நீங்க அமைதியாக இருங்க" என்று இன்ஸ்பெக்டர் கறார்க் குரலில் கூறினார்.

"இந்தப் பொண்ணு ஜெய்பீம் படம்  பார்த்திருக்கு போல. எங்கே இன்ஸ்பெக்டர் தன்மேல பொய் கேஸ் போட்ற போறாரோன்னு  பயப்படுதுன்னு  நினைக்கிறேன்” என்று ராம் கிண்டலாகச் சொன்னான்.

 

இன்ஸ்பெக்டர் அதைக் கண்டுகொள்ளாதது போல் இருந்தாலும் பிரின்ஸிலபுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டார்.

”லில்லி மேடத்தால உனக்கு ஏதாவது பிரச்சனையாம்மா?” என்று  தேங்காயை அந்த பொண்ணு தலையில் நேரடியாகப் போட்டு உடைத்தார்  இன்ஸ்பெக்டர்.

 

ஏற்கனவே குளிர் ஜூரத்தில் நடுங்கும் அந்த மாணவியின் தலையில் ஐஸ் வாட்டர் ஊற்றியது போல இந்தக் கேள்வி இருந்தது. மேலும்  நடுங்கினாள். 

 

எல்லாரையும் பயத்துடன் பார்த்தாள்.தேர் நிலைக்கு வருவது போல் ஹரிணியின் கண்கள் பிரின்சிபலிடமே நிலைபெற்றது. புரிந்து கொண்ட  இன்ஸ்பெக்டர்,  அறையை விட்டு  வெளியில் வந்து சுற்றிப் பார்த்தார். பிரின்சிபல் அறைக்கு பக்கத்து வகுப்பு அறை காலியாக இருப்பதைப் பார்த்து ஹரிணியை அந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

 

ஹரிணியை தனியே அழைத்துச் சென்றதும், பிரின்சிபல்  அறையில் இருந்தவர்கள் விசா இல்லாமல் அண்டார்டிகா குளிர் பிரதேசத்துக்கு சென்றதைப் போல உறைந்து இருந்தனர்.

"ஹரிணி, நீ யாருக்கும் பயப்படாம என்ன நடந்ததுன்னு உண்மையை மட்டும் சொல்லுமா" என்று அன்புடன் கேட்டார்.

 "சார் நான் +2 படிக்கிறேன்.அது மட்டும் இல்லாமல் நான் ஸ்போர்ட்ஸிலும் இருக்கேன், என் அப்பா ஆட்டோ ஓட்டுறாரு, எப்படியாவது கஷ்டப்பட்டு +2 வரைக்கும்  பணம் கட்டிப் படிக்க வைக்கிறேன், அதுக்கு பிறகு என்னால  முடியாதுன்னு சொல்லிட்டாரு. பி.டி டீச்சர் தான் ஸ்போர்ட்ஸில் நிறைய சர்ட்டிபிகேட்  இருந்தால்,  அதற்கான  காலேஜில் சேர்ந்து படிக்கலாம்ன்னு ஆர்வமூட்டினாங்க. ஸ்போர்ட்ஸ்ல நான் மாவட்ட லெவல்ல நிறையப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். அடுத்து ஸ்டேட் லெவல்ல  என் திறமையை நிரூபிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். எனக்கு பி.டி.மேம் சாதனா,  சப்போர்ட்டா இருந்தாங்க. ஆனால், லில்லி டீச்சர் கிரவுண்டுக்கே போகக் கூடாதுன்னு என்னை டார்ச்சர் பண்ணுவாங்க சார்.” கொஞ்சம் மூச்சு வாங்கிய ஹரிணியே தொடர்ந்தாள்... 

”கெமிஸ்ட்ரியில  100 மார்க்கில்  75 மார்க் தான் தியரி.. மீதி 25 மார்க் பிராக்டிகல்ல வாங்கியாகணும்.  லில்லி டீச்சர் போட வேண்டிய 25 மார்க்கில் எனக்கு 15 மார்க் தான் போடுவாங்க. கேட்டதுக்கு நான் நல்லா பண்ணலை, என் ரெக்கார்டு நோட்டு நீட்டாக இல்லைன்னு ஏதேதோ காரணம் சொன்னாங்க. எனக்கு இந்த 10 மார்க் என் கட் ஆஃப்புக்கு ரொம்ப முக்கியம் சார். அப்ப அவங்க நான் சொன்னதை எல்லாம் செஞ்சா உனக்கு முழு மார்க் கொடுப்பேன். இல்லைன்னா, இன்னும் குறைப்பேன்னு சொன்னாங்க.  சரிங்க டீச்சர்ன்னு சொன்னேன். என் ஃபோன் நம்பரை வாங்கிக்கிட்டாங்க...”

”ம்... சொல்லும்மா.. எதா இருந்தாலும் பயப்படாம சொல்லு”

”ஒருநாள்  என் நம்பருக்கு புது நம்பரில் இருந்து கால் வந்ததுங்க சார், லில்லி மேடம் தான் இந்த நம்பர் தந்தாங்கன்னு அசிங்கமா பேச ஆரம்பிச்சார் ஒருத்தர்...  நான் அழகா இருக்கேன்னு சொல்லி என்னைத் தப்புத் தப்பா பச்சையா வர்ணிச்சார் அந்த ஆள்..  அப்புறம் நான் பாத்ரூமில் இருந்து என் செல்பியை எடுத்து அனுப்பணும்ன்னும் அவர் மிரட்டினார் சார்.... ” என்று ஹரிணி அழத்தொடங்கினாள்.

“அப்புறம் என்ன  சொன்னான் அந்த ஆள்? அது யாரோட குரல்ன்னு உனக்குத் தெரியுமா? இதுக்கு முன்னாடி அந்தக் குரலைக் கேட்ருக்கியா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு, அழுகை மட்டுமே அவளிடமிருந்து பதிலாகப் பொங்கி வந்தது.

 

இதற்கு மேல் அந்த வில்லங்க நபர் என்ன பேசியிருப்பான் என்பதைப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், பேச்சைத் திசை திருப்பினார். 

"வீட்டில் அப்பா, அம்மாவிடம் சொல்ல வேண்டியது தானே"என்று கேட்டார்.

"அவர்களிடம் சொன்னால் பிரச்சனை வேண்டாம்.  படிப்பை நிறுத்திடுன்னு சொல்றாங்க சார்.  அதைவிட உயிரை விட்டிடுவேன்" என்று குரலில் மிச்சமிருந்த கண்ணீருடன் சொன்னாள்.

"நான் அவங்க  பேச்சை கேட்கலைன்னு என்னை அத்லெட்டிக் பிராக்டிஸ் பண்ண அனுப்பலைங்க சார். நான் ஸ்போர்ட்ஸ் காலேஜில் சேருவதற்கு எனக்கு அதலெடிக்கில் வாங்கும் புள்ளிகள் ரொம்ப முக்கியம், ஞாயிற்றுகிழமைகளில் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்னா வேணும்ன்னே அன்று தான் லில்லி மேம் டெஸ்ட் வைப்பாங்க,. 

 

சார் . .நாங்க  சாதிக்கணும்னு  நினைச்சு இறக்கை விரிக்கிறோம், அதை பிய்த்துவிட்டு, பறக்க முடியாமல் தரையில் புரள்வதை ரசிக்கும் கூட்டம் சார் இவங்க" என்று கோபமும் அழுகையும் பொங்கக் கூறிவிட்டு, உட்கார்ந்திருந்த டெஸ்க்கில் தலையைக் கவிழ்ந்து தேம்பி..தேம்பி அழதாள் ஹரிணி.

 

அழுகை சத்தம் கேட்டு உள்ளே வந்த கவிநிலாவைப் பார்த்ததும் ஆதரவுடன் அவள் தோளில் சாய்த்துக்கொண்டாள் ஹரிணி. அந்த அறையில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் கோபமாக பிரின்சிபலிடம் பேசினார்.

"மேடம் நீங்க மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர், ஆனால் சில ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருக்கீங்க ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் கிடைச்சா, உங்க மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்" என்று கோபமாகக் கூறினார் இன்ஸ்பெக்டர். 

"என்னாச்சுங்க சார்.?”- என்று  கேட்ட எஸ்.கே.எஸ்.சிடம்... சார், கேஸ் வேற ரூட்ல போய்கிட்டு இருக்கு. நான் கிளம்பறேன். நாளைக்கு லேப் ரிசல்ட் வந்ததும், மீதி விசாரணையைத் தொடர்வேன். உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிக் கிளம்பினார்.

 

’அப்பாடா... இன்றைய பிரச்சினை இதோடு முடிந்ததே’ என்று அங்கிருந்த அத்தனை பேரும் நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில்... 

 

கிளம்பிய ஜீப், கிரவுண்டிலேயே யூ டர்ன் போட்டு சீறியபடி திரும்பி வந்தது. 

 

( திக் திக் தொடரும் )
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #38

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #50. நிறைவுப் பகுதி!

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Marana Muhurtham - The End 

 

'கால் நனையாமல் கூட கடலைக் கடக்கலாம். ஆனால் கண் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது.’ பித்தனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஏதோ ஒன்று நினைவில் அகலாமல்  இருந்து விழிகளை ஈரம் செய்துவிடும். கவியின் நினைவில், தியாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி கனைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது.


 
கோபமோ, சோகமோ எந்த உணர்வாக இருந்தாலும் உறக்கம் என்பது அந்த உணர்விற்கு இடையே கிடைக்கும் சிறிய வலி நிவாரணி ஆகும். உறக்கம் சில நேரங்களில் அந்த உணர்வின் தீவிரத்தையும் வலியையும் தடுக்கும். ஏன் சில நேரங்களில் அந்த உணர்வையே இல்லாமல் செய்யும்.


 
உறங்கி எழுந்த பிறகுதான் தெரியும் திலகாவின் மனநிலை. அதனால்தான் கவி, சரியாக உறங்கவில்லை போல. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் கவிக்கு மீண்டும் விழிப்பு வந்து விட்டது.  முதலில் சிந்தனைதான் விழித்தது.  அம்மாவின் முடிவு என்னவாக இருக்கும்? உறங்கி எழுந்ததும் கணவன் மீதான சென்டிமென்ட் விழித்துக் கொள்ளுமா? அம்மாவைப் பற்றி நினைக்கிறோமே, ‘எனக்கும் அப்பான்னா  ரொம்ப பிடிக்குமே, டாடி என் மீது அதிக பாசம் வைத்திருக்கிறாரே. ஒரு நல்ல அப்பாவாக இருக்கும் அவரால்  ஒரு நல்ல மனிதராக நடந்து கொள்ள முடியவில்லையே?"- என்று அப்பாவின் மீது வருத்தப்பட்டாள்.


 
'இதுவரைக்கும் நான் பார்த்த அப்பா எனக்கு ஹீரோவாக தானே தெரிந்தார். காற்று கூட புகமுடியாத கண்ணாடிக் கதவில், கண்ணுக்கு தெரியாத மெல்லிய கீறல் எப்படி டாடி வந்தது?’ கவியின் கண்முன் எஸ்.கே.எஸ்.ன் உருவமும் அவர் அம்மாவையும்  தன்னையும் தவிர  பிற பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமும் நினைவில் வந்தது. அதுபோல், வீட்டு வேலைக்காரி முதல் ஷாப்பிங் மால், பள்ளி என்று அனைத்து இடங்களிலும் அவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதங்களை மனத்திரையில் 70 எம்.எம்.-ல் ஓட்டி பார்த்தாள்.  அது, ஐந்து நிமிட டாக்குமென்டரி படம் மாதிரி இருந்தாலும் விருது பெறும் படமாக இருந்தது. அந்த அளவுக்கு அப்பா, இத்தனை வருட வாழ்வில் கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறார். பிறகு ஏன் தியா, அடிக்கடி "நிர்வாகியும் தப்பு பண்றாரு, அவர் நல்லவர் இல்லை. அவரை எல்லாம் சும்மா விட்டு விடக் கூடாது" என்று சொன்னாள். கவி குழம்பி கொண்டிருக்கும் நேரத்தில் போன் அலறியது.

 

நேரம் கடந்து இரவு 11 மணிக்கு மேல், விடியும் வரை இந்த ரிங் டோன்களைக் கேட்டாலே, ஏதோ சாத்தானின் குறுஞ்ச்செய்தி போல எண்ணிவிடுகிறது மனம். அப்போது உடல் எல்லாம் வியர்த்து விறுவிறுத்துவிடும். இதயத்தின் "லப் டப்" ஓசையும், கடிகாரத்தின்" டிக் டிக்" ஓசையும் போட்டி போட்டுக்கொண்டு இதயத்திற்குள் மாயக்கால்களாய் ஓடும். அப்படிதான் கவியைப் பொறுத்தவரை இப்போதும்...

 

அதிகாலை நேரத்தில் போன் அலறியதும் பதட்டத்தோடு பார்த்தாள். யார் அழைத்து இருப்பார்கள்? போன் என்ன காரா?  நாம சென்று ஏறும் வரை காத்திருந்து அழைத்து செல்வதற்கு. கவி ஆன் செய்வதற்குள் நின்றுவிட்டது. யாராக இருக்கும் என பார்ப்பதற்குள் மீண்டும் அலறியது. இந்த முறை யார் என்று பார்க்காமல் போனை ஆன் பண்ணி விட்டாள்.


 
"கவி ..கவி .."என்று எதிர்முனையில் பதட்டமான ஆண் குரல் கேட்டது. அந்தக் குரல், சில மணி நேரங்களுக்கு முன் கேட்ட ராமின் குரல். ராம் தான் அழைத்தான்.

 

"என்னாச்சு ராம்? இந்த நேரத்தில். ஏன் பதட்டமா இருக்க?” 

 

"கவி... .அப்பா... அப்பாவுக்கு... ஹார்ட் அட்டாக்" என்று அவன் தேம்பலுடன் சொல்லி முடிப்பதற்குள்... 

 

"என்னடா சொல்ற? இப்ப நீ எங்க இருக்க? இங்கதான் இருக்கியா? -என்று போனில் அதிர்ச்சியும் அழுகையுமாகக் கேட்டுக்கொண்டே, அவசரமாக கவி அப்பா எஸ்.கே.எஸ்.ன் அறைக்கு ஓடினாள்.  அங்கே அப்பா நிம்மதியாக மெல்லிய குறட்டையுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.

 

கவியின் நினைவு முழுவதும் அப்பாவை சுற்றியே இருந்தது. கெட்டவர். அவருக்கு தண்டனை தர வேண்டும் என்று நினைத்த இந்த அப்பாவுக்கு, ஏதோ ஆகி விட்டதோ என்று ஏன் இப்படி பதறவேண்டும்? குற்றவாளியாகவே இருந்தாலும் அவர்களிடமும் பாசத்தைத் தேடுவதுதான் மகள்களின் மனநிலை. பெண்களின் இந்த பலவீனம் தான் ஆண்களின் தவறுக்கு அனுசரணையாக  அமைந்து விடுகிறது. இந்த ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்கள் கவிக்கு வந்துவிட்டன. 


 
சுதாரிப்பு வந்து போனை மீண்டும் காதருகே வைத்து, ”ராம் என்னடா?” என்றாள்... அதே பதட்டத்துடன். 

 

"கவி, நான் இங்க எங்க வீட்லதான் இருக்கேன். உன் பெரியப்பாவுக்கு தான் ஹார்ட் அட்டாக்.” 

 

“டேய் என்னடா சொல்ற? பெரியப்பாவுக்கா? ஆஸ்பிடல்....?”

 

“அதுக்கு தேவையில்லாத படி  அவர், நம்மளை எல்லாம் விட்டுட்டுப் போயிட்டார் கவி" என்று தழுதழுத்த குரலில் சொன்னான்.

 

"ராம்.... என்னடா சொல்ற? ஐயோ, இதை என்னாலயே தாங்கமுடியலையே... அப்பா எப்படி தாங்குவார்? சரி, அழாதே... இதோ இப்பவே அங்க வர்றோம்” என்ற கவியிடம் அடக்க முடியாமல் அழுகை வெடித்தது.

 

பேச்சு சத்தத்தில் விழித்துக்கொண்டார் எஸ்.கே.எஸ். அழுகையுடன் கவி நிற்பதைப் பார்த்துப் பதறியவர்...

 

“என்னம்மா கவி? யாருக்கு என்ன?” -அவரிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

 

"அப்பா,  பெரியப்பா.. பெரியப்பா நம்மளை விட்டுட்டுப் போயிட்டாராம்  பா" என்று கதறினாள் கவி.

 

பதறி எழுந்து உட்கார்ந்த எஸ்.கே.எஸ். “அட ஈஸ்வரா...” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். “அண்ணா... அண்ணா... ”என்று தேம்ப ஆரம்பித்தார். 


 
அந்த வீடு ஒரே நிமிடத்த்தில் தீப்பிடித்த மாதிரி ஆனது. அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டு எஸ்.கே.எஸ். முதல் ஆளாக கண்ணீருடன் கிளம்பிவிட்டார். கலங்கிய விழிகளுடன்  திலகா, அறைகளையெல்லாம் பூட்டிக்கொண்டு, கவியுடன் ராம் வீட்டுக்குக் கிளம்பினார்.

  

ராம் வீடு துக்கத்தில் மூழ்க ஆரம்பித்திருந்தது. விடிந்தால் பெருங்கூட்டம் கூடிவிடும். செய்தி இன்னும் வெளியே போகாததால் குடும்ப உறுப்பினர்களும் வேலையாட்களும் மட்டுமே அங்கே கண்ணீருடன் இருந்தனர்.

 

“ஏங்க.. என்னங்க.. இப்படி எல்லோரையும் விட்டுட்டுப் போயிட்டீங்களே....” -ராமின் அம்மா அழுது புரண்டுகொண்டிருந்தார்.  ராம் அப்பாவின் பக்கத்தில் நின்று கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தான்.

 

சென்ற வேகத்தில் அவன் தோளில் சாய்ந்துகொண்ட கவி அழுது கொண்டே "என்னாச்சு  ராம்"என்று கேட்டாள். 

 

"நல்லாதான் தூங்கினார். திடீட்ன்னு அப்பாவின் அறையில் சத்தம். என்னன்னு போய்ப் பார்த்தால் ஹார்ட் அட்டாக். நெஞ்சை பிடித்துக் கொண்டு வலியில் துடித்துக்கொண்டிருந்தார். நானும் பர்ஸ்ட் எய்டு மூலம் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன்... ”என்று கலங்கினான்.

 
 
ராம் சொல்லச்  சொல்ல  ராமின் கண்களையே கூர்ந்து பார்த்தாள். அவன் விழிகள் அவளிடம் ஏதோ ஒன்றைச் சொன்னது. நடக்க வேண்டிய காரியம் எல்லாம் நடந்து முடிந்தது.

 
 
ஒரு சோகத்திற்கு இன்னொரு சோகம் தீர்வா? இல்லை தள்ளிவைப்பா? என்பது கவிக்கு புரியவில்லை. தியாவின் மரண நினைவுகளுக்கு சிலமணி நேரம் திரையிட்டிருந்தது பெரியப்பாவின் மரணம்.

 

ராம் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில்... 

 

"ராம்,  என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. பெரியப்பாவுக்கு உண்மையில் ஹார்ட் அட்டாக் தானா? என்று கேட்டாள். 

 

" ஒரு டாக்டர் எனக்கு தெரியாதா கவி?” 

 

"அதை ஒத்துக்கிறேன். அட்டாக் இயற்கையா? செயற்கையா??” என்று நேரடியாக கேட்டதும்... ராம் மௌனமாக வேறெங்கோ பார்த்தான். 

 

"உண்மையை சொல்லு  ராம்" -என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.  மெதுவாக சட்டையில் இருந்து அவள் கை விரல்களை விடுவித்தவன்... 


 
"கவி ஒன்னைப் புரிஞ்சிக்க, செத்துப்போன தியா... தனக்கு தொல்லை கொடுத்த நிர்வாகின்னு சொன்னது நம்ம சித்தப்பாவை இல்லை. என் அப்பாவை.  அப்பாவையும் நிர்வாகின்னுதானே, எல்லாரும் சொல்றாங்க. யார் குற்றவாளின்னு தியா தெளிவுபடுத்தாததால்தான், நீ இவ்வளவு மன உளைச்சலுக்கும் எதையும் செய்யும் மன நிலைக்கும் ஆளாகி இருக்கே. அந்த ஸ்கூலைப் பொறுத்தவரை, ஆவணங்கள்ல கையெழுத்துப் போடும் அதிகாரம் உன் அப்பாவிடம் இருந்தது. அதேபோல் என் அப்பா, பள்ளியை நிர்வாகம் செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் என் அப்பாவையும் நிர்வாகின்னுதானே அழைப்பார்கள். என் அப்பாவின் அனைத்து அயோக்கியத்தனமும் எனக்கு தெரியும். அவர் ஆரம்பத்தில் இருந்தே சபலவாதிதான். மாணவிகளின் உயிர் போகும் அளவிற்கு அவர் காரணமாக ஆவார்ன்னு  எனக்குத் தெரியாது. தியா இறந்த பிறகுதான் அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிஞ்சிக்கிட்டேன். தியாவின் மரணத்துக்காக அவர் கொஞ்சம் கூட வருந்தாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் இருந்ததை பார்த்தப்பதான் எனக்கு, அவர் மேல் கோபம் அதிகமாச்சு. எப்படியாவது போலீஸ் அவரைக் கண்டுபிடிச்சி தண்டனை கொடுக்குன்னு நினைச்சேன். ஆனால் போலீஸும் உங்க அப்பாவை மட்டும்தான் சந்தேகப்பட்டுச்சு. பிறகு அவர் நிரபராதின்னு தெரிஞ்சி, அவரை விட்டுடுச்சி. 

 

போலீஸ் மட்டும் உடனடியா எங்க அப்பாவைக் கைது செய்திருந்தா, ஒரு சில மரணமும் இல்லாமப் போயிருக்கும். எல்லாரும் கைதாகி இருப்பாங்க. நீயும் உன் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்திருப்ப.  ஆனா, வழக்கு வேறுவேறு பக்கம் திசை திரும்பியதால்தான், நீ களமிறங்கு படியா ஆச்சு. இதுக்கப்புறமும் எங்க அப்பாவை விட்டுவச்சிருந்தா, நீ அநியாயமா... பண்புமிக்க மனிதரான எங்க சித்தப்பாவை, அதான் உங்க அப்பாவின் கதையும் முடிய நீ காரணமா இருந்திருப்ப. அதனால்தான், இனியும் சும்மா இருக்கக் கூடாதுன்னுதான், இப்படியொரு முடிவை நான் எடுத்தேன்” என்று விரிவாக அவன் பேசப் பேசத் திகைத்து நின்றாள் கவி.

 

“கவி, உன் நியாய உணர்ச்சியை மதிக்கிறேன். வியக்கிறேன். பாராட்டறேன். அதே சமயம், நீ உயிருக்கு உயிரா நேசிக்கும் உன் அப்பாவையே, அவர் குற்றவாளியான்னு உறுதிப்படுத்திக்காமலே, அவரை அதிகபட்சமா தண்டிக்கனும்ன்னு நினைச்சது தப்புதான்.” என்றான் அழுத்தமாக.

 

கண்ணீர்ப் பெருக்கோடு அவனைக் கைகூப்பிக் கும்பிட்ட கவி.. “நான் அப்பாவை தவறா எடைப்போட்டுட்டேன். என் கண்ணை, தவறான மதிப்பீடு மறைச்சிடுச்சி. அதே சமயம் பெரியப்பா இப்படிப்பட்டவர்ன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை. அதுக்காக நீ ஏன்டா அவரை இப்படி செஞ்சே?” என்றாள்...  

 

“நான் அதை செய்யலைன்னா, எங்க சித்தப்பாவை நான் இழந்திருப்பேன். அதுக்குதான் எங்க அப்பாவை வாழ்விலிருந்து ஓய்வு பெறவச்சேன். அதன் மூலம் அவரால் இனியும் அத்துமீறல்கள் அரங்கேறுவதைத் தடுத்திட்டேன். மனசு கேட்கலைதான். என்னை மார்பிலும் தோளிலும் வைத்து தாலாட்டியவர்தான். ஆனால் அந்த மார்பும் தோளும் சுத்தமானதில்லைங்கிற போது, என் அத்தனைப் பெருமையும், அவர் மீதான அத்தனை மதிப்பும் கரைஞ்சி போயிடிச்சி. அதனால் அவர் தூங்கிக்க்கிட்டு இருக்கும் போது, வெறும் சிரஞ்சில்  காற்றை நிரப்பி அவர் நரம்புகள்ல செலுத்தினேன். அதனால் ஹார்ட் அட்டாக் வந்து அவர் போய்ட்டார். அது இயற்கை மரணம் என்றாகிவிட்டது. அப்பாவின் பாசம் ஒருபுறம் இருந்தாலும் தியாவின் அண்ணனாக மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டிருக்கு கவி” என்று ராம் சொன்னதும் அழுது கொண்டே அவன் காலடியில் சரிந்தாள்.   நடந்தவற்றை திலகாவிடம் சொன்னாள் கவி.

 

*ஒரு மாதம் கழித்த நிலையில், அன்று காலை 8 மணிக்கு கவிநிலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன் ஒரு கார் வந்து நின்றது. சினிமாவில் காட்டுவது போல கார், கதவைத் திறந்து கொண்டு ஒரு கால் தரையைத் தொட்டது. கேமராவை முழு ஆங்கிளில் வைக்கும்போது காட்டன் சாரி, கொண்டை, கூலிங்கிளாஸ் சகிதம் கெத்தாக மரண மாஸாக திலகா அதிலிருந்து இறங்கினார். பள்ளி நேரத்தில் மைதானத்தில் ஒரு மாணவன் கூட விளையாடவில்லை. மதில் சுவர் ஓரங்களில் மூலிகை தோட்டம் அமைத்துக் கொண்டிருந்தனர்.  ஆசிரியர்கள் அதற்கு உதவி செய்து கொண்டிருந்தனர். கழிவறைகளில் சில ஆசிரியர்கள் கழிவறை சுத்தமாக இருக்கிறதா? என மேற்பார்வை இட்டனர். மாணவர்களுக்கு குடிநீர் சுத்தமாக கிடைக்கிறதா என சில ஆசிரியர்கள் குடிநீர் தொட்டியை பராமரித்து கொண்டிருந்தனர்.  திலகா இதையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.  திலகாவின் மனம் மட்டும் ராமிற்கு  நன்றி சொல்லியது. ராம்  தான் எஸ்.கே.எஸ்.சிடம் ராம்தான் சண்டை போட்டு பள்ளி நிர்வாகத்தை திலகா பெயரில் மாற்றினான். திலகாவிற்கும் பள்ளியைத் திறம்பட நிர்வாகம் செய்வதில் பெருமிதமாக இருந்தது. 

 

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களைச் சந்திப்பதற்காக ஒரு தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4 மணிக்கு மேலும் அந்த அறையில் வந்து ஆசிரியர்களை சந்திக்கலாம் என்று பெற்றோர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. திலகாவின் அறை வாசலில் "மாணவர் மனசு" என்ற பெட்டி இருந்தது. அதில் மாணவர்கள் தங்கள் குறைகளை எழுதிப் போடலாம். அந்தப் பெட்டி வாரத்திற்கு ஒரு முறை "பெற்றோர் ஆசிரியர் குழு"வின் முன்னிலையில் திறக்கப்பட்டு மாணவர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களின் வருமான சான்றிதழின் அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.


 
ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சம்பளம் வழங்கப்பட்டது. அதனால் ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிந்தனர். மாணவிகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில், பள்ளியே பாதுகாப்பான சோலைவனமாக மாறியிருந்தது. கவி பள்ளி பேருந்தில்  வந்து இறங்கினாள். பேருந்தையும்  மாணவர்களையும் கையில் விசிலுடன் ஒழுங்கப்படுத்திக் கொண்டிருந்தார் பி.இ.டி.டீச்சர் சாதனா. அவர் அருகில் சென்ற கவி" டீச்சர் இன்று நாம் முதல் முதல் சந்தித்த ஹோட்டலில் சந்திக்கலாமா?" என் தோழிகளுக்கு உங்களை அறிமுகப்படுத்துகிறேன். அப்பறம் நீங்க பர்தா போட்டுகிட்டு வர வேண்டிய அவசியம் இல்லீங்க, நாம  தான் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டோமே"?என்று கவி சொன்னதும், சிரித்து விட்டு  மாணவர்களை ஒழுங்குபடுத்துவதில் கவனத்துடன் இருந்தார் சாதனா. 

 

கவியின் நீட் தேர்வு லட்சியம் பல டாக்டர்களை  உருவாக்க வேண்டும் என்று மாறி இருந்தது. அதனால் அந்த பள்ளியிலேயே மீண்டும் மாணவியாக பள்ளிக்கு வந்தாள். நகரத்தில் மிகப்பெரிய கல்லூரியைக் கட்டவேண்டும். தான் ஒரு சிறந்த கல்வியாளராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பள்ளியில் கவி ஏற்படுத்திய இந்த மாற்றங்கள் கல்லூரியிலும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. 


 
அன்று மாலை, பள்ளியின் ஆண்டுவிழா கொரோனா நெருக்கடி காரணமாக, அதிக ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடந்தது. பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு என பலவும் முடிந்த நிலையில், நிறைவாகப் பேச எழுந்தார் பள்ளியின் புதிய தாளாளரான திலகா. பார்வையாளர் வரிசையில் கவியின் அருகே அமர்ந்திருந்தார் எஸ்.கே.எஸ். கவியின் தோழி ஷாலு உள்ளிட்டவர்களும் தியாவின் பெற்றோரும் கூட அந்த  நிகழ்ச்சிக்கு  சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி பளீரிட்டது. தன் கணவரை, மெல்லிய புன்னகையோடு பார்த்துவிட்டு பேசத் தொடங்கிய  திலகா, 

 

"அனைவருக்கும் என் புன்னகை வணக்கம். நான் அதிகம் பேச விரும்பவில்லை. சிறந்த பேச்சு என்பது, உயர்ந்த செயல் என்பது என் எண்ணம். விவசாயிகளுக்குத் தெரிஞ்சிருக்கலாம். சைனீஸ் மூங்கில்ன்னு ஒரு வகை மூங்கில் இருக்கு. அது  விதை போட்டவுடன் அது முளை விடாது. வளர்வதற்கு நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதுவும் மாதக்கணக்கில் அல்ல; ஆண்டுக் கணக்கில். அது தளிர் விட்டு பூமிக்கு மேல் எட்டிப் பார்க்கவே 5 ஆண்டுகள் வரை ஆகும். அதுவரையிலும் பொறுமையாக விவசாயி, நிலத்தில் நீர் தெளிக்கவேண்டும். ஐந்து ஆண்டுகள் கழித்து அது பசுமையாக வளர ஆரம்பிக்கும். ஆறு வாரங்களில் அது 60 அடிவரை வளர்ந்துவிடும். ஐந்து ஆண்டுகள் அந்த விதையானது தனது வேரை பூமிக்கடியில் நன்றாக திடமாக வளர்த்துக்கொள்ளும். அந்த வேர்கள்தான் அதன் பலம். அது தாங்கிப் பிடிப்பதில் தான், அது குறுகிய காலத்தில் வேகமாக வளர்கிறது. அது போலத்தான் மாணவப் பருவம். 15 வயதிலிருந்து 20 வயது வரை அவர்கள் எதிர்காலத்திற்கான வேர்களை நன்றாக பரவலாக ஊன்றவேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்கவேண்டிய கடமை ஆசிரியர்களுக்கானது." என்று திலகா பேசப் பேச, அனைவரும் கைதட்டினர்.  

 

அம்மாவா? இப்படி எல்லாம் கம்பீரமாகப் பேசுகிறாள்? கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, கவி தன் அம்மாவைப் பெருமிதத்துடன் பார்த்தாள். அருகிலிருந்த எஸ்.கே.எஸ்., அதே பெருமிதத்துடன் தன் தோளில் சாய்ந்திருந்த கவியின் தலையை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார்.  

 

(நிறைவு) 

 

முந்தைய பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

marana muhurtham part 49

 

கன்னத்தில் விழுந்த அறை, ஆவேசம் கொண்ட புலி ஒன்றின் அறைபோல் இருந்தது கவிக்கு.

 

கவியின் அம்மா அப்படி ஒன்றும் பெரிய பலசாலி அல்ல. மென்மையானவர் தான். அவர்களிடம் எப்படி இப்படி ஒரு வலிமை? கோபம்  அப்படி ஒரு வலிமையைக் கொடுத்ததா..? 

 

சில நிமிடங்கள் அந்த இடத்தில் காற்றில்லா ஏதோ ஒரு கிரகத்திற்குச் சென்றது போன்ற உணர்வுடன் ஒருவித மௌனம் நிலவியது. கவி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்கள் சிவக்க கண்ணீருடன் செய்வதறியாது தவித்த மனநிலையில் நிலைதடுமாறி நின்றுகொண்டிருந்தாள். மதுரையை எரித்தும்,  ஆவேசம் அடங்காத கண்ணகி மாதிரி காட்சி தந்தார் அம்மா திலகா.

 

ராம், கவியின் அருகில் சென்று அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். அவ்வளவுதான் திறந்துவிட்ட வீராணம் ஏரி போல, அழுகை வெள்ளமாய்ப் பொங்கியது. "விடு கவி,  யார் அம்மா தானே அடிச்சாங்க" என்று ஆறுதலாகத் தலை கோதினான்.

"அளவுக்கு அதிகமான நம்பிக்கையாலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின்மையாலும், தான் சில தவறுகள் நடைபெறுகின்றன" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராம். 

 

பொங்கி அடங்கிய பாலென திலகா மகளின் அருகில் சென்று அணைத்துக் கொண்டு "சாரிடா என் செல்லம்" என்று கொஞ்சினார். விடுபட்ட கம்பிச்சுருள் போல விருட்டென்று விலகினாள் கவி.

"அம்மா... உனக்கு வேண்டுமானால் அப்பா நல்லவராக இருக்கலாம். ஆனால் பள்ளி மாணவிகளிடம் கொடூரனாக நடந்து கொண்டிருக்கிறார்". 

 

அவர் வாயிலிருந்து கூரிய அம்பாய் சொற்கள் வெளியேறின. " வாயை மூடு. என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியும்.   நிலவுக்குக் கூட வளர்பிறை தேய்பிறைன்னு இருக்கு. உங்க அப்பாவைப் பொறுத்தவரை அவர் கருணை மனதுக்கு கொஞ்சமும் தேய்மானம் இருக்காது. அவர் நம் குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பை, திருமணம் ஆன முதல் நாள் எப்படி காட்டினாரோ, அப்படிதான் இந்த நிமிடம் வரை காட்டிக்கிட்டு இருக்கார். பெண் குழந்தைகளுக்கு நடக்குற கொடுமைகள் பத்திக் கேள்விப்படும் போதெல்லாம், அவர் தனிமையில் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துறது எனக்குத் தான் தெரியும். ஏன் தியாவுக்காக அவர் எத்தனை வேளை சாப்பிடாமல் இருந்தாருன்னு உனக்குத் தெரியுமா? " என்று கணவரின்  அன்பில் உருகினார்.

"பெண்களின் மிகப் பெரிய பலவீனமே தன் கணவன் ராமன் என்று நம்புவதுதான்" என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள் கவி. 

"அப்பா.. தவறானவர் என்ற உறுதியில் இருக்கிறாயா கவி?”. "அம்மா, அப்பா தவறு செய்யமாட்டார் என்ற உறுதியில் நீங்க இருக்கிறீர்கள் தானே...?" 

"அப்பாவே வந்து  நான் தவறானவன்" என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்” என்று அழுத்தமாகச் சொன்னார்  திலகா.

"அம்மா ஒரு பொண்ணு இந்த விசயத்தில் பொய் சொல்வாளா..?"

" சரி.. உன் வாதப்படி அப்பா தான் தவறு செய்தவர்ன்னா, அதற்கு என்ன ஆதாரம்?"
 

"தியா.. மனநல மருத்துவரிடம் பேசி இருக்காளே..மா.  பள்ளியின் நிர்வாகியும் தவறாக நடக்கிறார்ன்னு தெளிவாகச் சொல்லி இருக்காளே... தியாவுக்கு அம்மா ஸ்தானத்தில் இருக்கிற நீ, கொஞ்சம் யோசித்துப் பாரும் மா.  உன் கையால உணவு ஊட்டிய மகளான நான் பொய் சொல்வேனா.?” கவி பேசப் பேச அம்மா அமைதியானார்.  

"அம்மா என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டால் சும்மா இருப்பியா..? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்க" என்று மகள் பாசத்தைக் கையில் எடுத்தாள் கவி.

"வெட்டி வகுந்திடுவேன். அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்றார் ஆவேசமாக திலகா.

“வாய்நிறைய உன்னை அம்மா என்றுதானே மா தியா கூப்பிடுவா. வாழ வேண்டிய அந்த ஜீவன் அஸ்தியா கரையும் போது உன் மனசு கரையலையா” என்று ஆலம் விழுதெனப் பெண்மையின் தாய்மையை பிடித்துக் உலுக்கிக்கொண்டாள்  கவி.

"மனசு ரொம்ப வலிக்குதுதாம்மா. இருந்தாலும் அப்பாவை என்ன பண்றது?

"பெண்களின் இந்த குணம்தான் ஆண்களை தப்பு பண்ண வைக்கிது. எத்தனையோ பாலியல் வன்கொடுமைகளை மீடியாக்களில் பாக்கறோம். ஒரு இடத்தில் கூட அந்த தப்பான ஆண் மீது அவன் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் கோபப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியலையே.?  ஒரு பெண் தெருவில் இறங்கி அந்த ஆணை தண்டித்திருந்தால் மற்ற ஆண்களுக்கும் பயம் இருக்கும் இல்லையா?" என்று ஆவேசமாகப் பேசினாள் கவி. 

 

கவி சொன்னதும் திலகாவின் மனதிற்குள் இருந்த பெண்மையின் வீரம் விழித்தெழுந்தது. 

“என்ன பண்ணலாம்னு சொல்லு கவி, நீ என்ன சொன்னாலும் செய்றேன்." பொறுப்பை கவியிடமே ஒப்படைத்தாள். 

"அம்மா.. தியா மரணத்தில் மற்ற இருவருக்கும் என்ன தண்டனை கிடைத்ததோ, அதே தண்டனை தான் அப்பாவிற்கும் கிடைக்கணும்" என்று கவி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னாள்.

 

இதைக் கேட்டதும் ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் திலகா.

" என்னால் இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியலை. உங்களுக்கு இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் என் மனதில் சம்மட்டியால் அடிக்கிது.  நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி, வேகமாக அங்கிருந்து வெளியேறினான் ராம்.

 

திலகாவும் கவியும் அழுது கொண்டே இருந்தனர். 'பெண்மை வரமா..? சாபமா..? கருவறையில் கடவுளாக வணங்கும் பெண்மைதான், கயவர்களால் சூறையாடப்பட்டு மரணம் வரை கொண்டுசெல்கிறது’ என்று மனதிற்குள் கலங்கினாள் கவி.

 

இந்த உணர்வுப் போராட்டங்களுக்கு இடையில், ரெண்டு நாளில் இது பற்றி முடிவெடுக்கலாம் என்ற தீர்மானத்துடன், படுக்கைக்குச் சென்றார்கள் கவியும் திலகாவும். 

 

இதையெல்லாம் அறியாத  கவியின் அப்பா எஸ்.கே.எஸ்., ரெண்டு பெக் ஒயின் சாப்பிட்டுவிட்டு, இளையராஜாவின் ரிதத்தை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு, படுக்கையில் சாய்ந்துகொண்டு, லெபனான் கவிஞன் கிப்ரானின் ‘கண்ணீரும் புன்னகையும்’ நூலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
ஒரு பெரிய மரணச் செய்தியுடன் மறுநாள் விடியப்போகிறது என்பதை, மகள் அறையிலேயே உறங்கத் தொடங்கிய திலகா அப்போது அறிந்திருக்கவில்லை.

 

( அடுத்த பகுதியுடன் நிறைவுறும் )

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #48