Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #32

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

marana muhurtham part 32

 

ராம் சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு நிதானமாகவும் அழுத்தமாகவும் கேட்டான்....

“இப்ப லில்லி டீச்சரை மரணத்தின் விளிம்புக்கு அனுப்பிட்ட. அவங்க பொழைக்கிறது கஷ்டம். அடுத்து நீ, உங்க அப்பாவையே குறிவைச்சிருக்கே... அதாவது உன் அப்பாவையே நீ கொல்லத்துடிக்கிற... அப்படித்தானே?” -இந்தக் கேள்வி அவளை, கீழே அடித்துத் தள்ளி, அவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்தது.

 

எனினும் அவள் மனம், ’இவன் டேஞ்சரஸ் ஆள். நம் ரகசியங்களைப் பின் தொடர்கிறான். என் அடுத்த இலக்கு யார் என்பதை, நான் தீர்மானிப்பதற்குள்ளாகவே அவன் தீர்மானித்துவிட்டான். அப்போ தியாவின் அத்தனை விவகாரங்களும் இவனுக்கு அத்துப்படி. குற்றவாளிகள் யார் என்பதும் இவனுக்குத் தெரியும். அதனால்தான் அவன், அடுத்த குறி அப்பாவா என்று கேட்கிறான்? ஆமாம் என்று ஒத்துக்கொண்டால், நம் சேப்டரே க்ளோஸ். அதனால் லில்லி மேட்டரை கூட இவனிடம் ஒத்துக் கொள்ளக்கூடாது. எல்லாவற்றையும் அழுத்தமாக மறுத்து அவனையே குழப்பியடிக்கவேண்டும்’ என்று ஒரே கணத்தில் முடிவெடுத்தாள். சட்டென திகைப்பையும் அதிர்ச்சியையும் மறைத்துக்கொண்டு...

”முட்டாள் ராம். என்ன கேள்வி கேட்கறே?” -அவளிடமிருந்து துணிச்சலான பதில் நிமிர்ந்த பார்வையோடு வந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை.

 

அந்தக் கேள்விக்கு அவள் பயந்து நடுங்குவாள் என்று அவன் எதிர்பார்த்ததுக்கு மாறாக, சண்டைக்காளையாக நின்றாள் கவி.

"அப்படி என்ன கேட்டுட்டேன், உண்மையைத்தானே சொன்னேன். நீ தான் லில்லி மிஸ்ஸை கொலை பண்ண பார்த்த, இப்ப உங்கப்பாவை கொல்வதற்கும் சூழ்நிலையை எதிர்பார்த்துகிட்டு இருக்கே?” என்று பதிலுக்கு ராமும்  கத்தினான். 

 

அதைக் கேட்டு சிரித்த கவி... “அந்த லில்லி டீச்சரை நான் கொல்லப் பார்த்தேனா.. என்ன உளர்ற? நீயே உன் மனசுக்குள்ள ஒரு தப்பான கதையை எழுதி, அதில் என்னை கேரக்டரா ஆக்கப்பார்க்கிறியா? தியாவின் மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியலைதான். அந்த மரணம் குறித்து சில தடயங்களை நான் சேகரிச்சி வச்சிருக்கேன் என்பது உண்மைதான். அதனால், அவள் மரணத்துக்குக் காரணமானவன் யார்ன்னு தெரிஞ்சா... ஏன் அது நீயாகாவே இருந்தாலும் அப்படியே கழுத்தை நெரிச்சிக் கொன்னுடுவேன். அதுக்கு மனசுல தெம்பு இல்லாட்டியும் நேரா போலீஸுக்குப் போவேன். உன்னை மாதிரி விசயத்தைப் போட்டுக் குழப்பிக்க மாட்டேன். போயும் போயும் லில்லியை நான் ஏன் குறிவைக்கணும். மாணவியான தியாவை லில்லி என்ன பண்ணியிருக்க முடியும்? இதில் எங்க அப்பாவை வேற நீ இழுக்கற... என் அப்பாவைப் பத்தி என்னைவிட உனக்கேத்  தெரியும். அவர் அம்மாவைத் தவிர எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்காதவர். என் உயிருக்கு நிகரான அப்பாவை இந்த விவகாரத்தில் இழுக்காதே?” என்றவள், தான் பேசிய ஜோடனை வசனத்தை, தானே மனதுக்குள் மெச்சிக்கொண்டாள். கவியின் பேச்சு, ராமை யோசிக்க வைத்தது.

 

திரும்பத் திரும்ப ஒன்றைச் சொன்னால், அது பொய்யாகவே இருந்தாலும், அது சொன்னவனையே நம்ப வைக்கும். இதுதான் மனித உளவியல்.  

 

கவி, இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி, ராமின் மனதைக் கலைத்தாள். நம் கவியைத் தவறாக எடைபோட்டுவிட்டோமோ? என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது.

 

அவனை அறியாமலே.. “சாரி, கவி” என்றான். அவன் குழப்பத்தில் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

 

அவன் மனம் மாறுவதை உணர்ந்த கவி, அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாமா? என ஒரு கணம் நினைத்தாள்.

 

நொடி நேரச் சலனத்திடம் இருந்து சுதாரித்துக்கொண்டாள். ’தியாவின் வாக்குமூலம் குறிப்பின் படி, உயிராய் நினைத்த அப்பாவே  கெட்டவராக இருக்கும் போது, ராமை எப்படி நம்புவது?’ என்ற எண்ணம் வந்ததும், மனதளவில் "சிங்கப் பெண்ணாக மாறினாள்". 

 

தன் தவறை மறைப்பதற்குக் கோபம் என்னும் முலாம் பூசினாள். இது தான் 90% மக்கள் செய்யும் செயல். கவி மட்டும் விதிவிலக்கா என்ன?.

 

மீண்டும் அவள் "எப்படி ராம்  என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்ப?" என்றாள் காரமாக.

 

அதே நேரம் ராமோ, வேறுவிதமாக ஒரு கணக்கைப் போட்டான். அவன் தியாவின் தற்கொலையை அறிவான்.

 

தன் அப்பாவோடும், பெரியப்பாவோடும் அந்தப் பள்ளியில் அவன் அதிகம் இருந்திருக்கிறான். அப்போது தியாவை அவன்  பார்த்திருக்கிறான். சூட்டியான பெண். புன்னகையோடு குட்மார்னிங் சொல்வாள். அவள் தற்கொலைக்கு பள்ளியில் இருக்கும் சிலர்தான் காரணம் என அரசல் புரசலாக செய்தி வந்ததால், அது குறித்து அவனும் ஆராயத் தொடங்கினான். அதற்கான சில ஆதாரக் குறிப்புகள் அவனுக்கு கவி மூலம் கிடைத்திருக்கிறது. இது கவிக்கே தெரியாது. 

 

அவனுக்கும் தியா விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம். ஆனால், அதற்கு திடமான ஆதாரமில்லை. இதைக் கவியிடம் சொன்னால், அவள் வேறுமாதிரி இயங்க ஆரம்பித்துவிடுவாள்.

 

கவி குற்றமற்றவள் என்று நம்பத் தொடங்கிய ராம், சட்டென நெகிழ்ந்தான்.

"கவி, அதர்மத்தின் வாழ்வுதனையும் சூது கவ்வும்.  நிச்சயம் உண்மை ஒருநாள் வெளிய வரும்" என்றான் .

"அது தான் அதர்மம் அழியுது ராம்" என்று தோசையைத்  திருப்பிப் போட்டாள் கவி. 

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, லில்லியை சேர்த்திருந்த ஆஸ்பிட்டலில் இருந்த ஒரு நர்ஸ் கவிக்கு ஃபோன் பண்ணினார்.   ரிங் அடித்ததும் ”ஹலோ” சொல்வதற்கு முன் கவி, நர்ஸிடம் அவசரத்து கால் பண்ணுங்கன்னு சொல்லி நம்பர் கொடுத்தது  நல்லதா போச்சுன்னு  நினைத்துக் கொண்டே ,"ஹலோ."  என்றாள்.

 

எதிர்முனை " மேடம் லில்லி மிஸ்சுக்கு லேசாக நினைவு திரும்புது, போலீஸ் வாக்குமூலம் வாங்குவதற்கு ரெடியாக இருக்காங்க" என்று  பதற்றமாகவும், அவசரமாகவும் சொன்னது.  

"ரொம்ப  தேங்க்ஸ். 10 நிமிடத்தில் அங்கே இருக்கேன்”னு சொல்லிவிட்டு இணைப்பை நிறுத்தினாள். 

"என்னாச்சு கவி"  

 

நர்ஸ்  சொன்னதை  அப்படியே அவனிடம் காபி பேஸ்ட் பண்ணினாள் கவி.

 

பிறகு ”ராம். நல்ல வேளை, லில்லி மிஸ்சுக்கு நினைவு திரும்புதாம். அவங்களுக்கு ஒன்னு ஆச்சுன்னா... ஸ்கூல் பேர் ரிப்பேர் ஆகும். அதை அப்பா தாங்க மாட்டார்” என்றாள் நடிப்பாய்.

"கவி நானும் ஆஸ்பிட்டல் வரேன்" என்று கிளம்பினான் ராம். 

 

ஒரு விதத்தில் அப்பாவை சமாளிப்பதற்கு ராம் தேவைதான் என்று நினைத்துக்கொண்டு சரி  என்று தலையாட்டினாள்.

 

இருவரின் உடல்கள் மட்டும்தான் காரில் பயணம் செய்தது. நினைவுகள் அவரவர் பாதையில் சென்றது.

 

போலீஸ் எஃப்.ஐ.ஆர். போடாமல் எப்படி வாக்குமூலம் வாங்குவார்கள்? இந்த மாதிரி நிகழ்வுகளுக்கெல்லாம் தனியார் மருத்துவமனையில் அனுமதி இல்லையே?  அரசு மருத்துவமனையில் தானே சேர்க்க வேண்டும்? எப்படியும் நியூஸ் பேப்பரில் வருமே? அப்பா எப்படி சம்மதிப்பார்? என்ற விடையறியத் துடிக்கும் வினாக்கள் அவளிடம் இருந்து மலர்ந்துகொண்டே இருந்தன.

 

அங்கே கவி எதிர்பார்க்காத ஒரு திருப்பம் காத்திருந்தது. 

 

(திக் திக் தொடரும் )
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #31