Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #25

 

marana muhurtham part 25

 

நல்லதோ, கெட்டதோ நாம எதிர்பார்த்தது நடக்கும்போது அது சாதாரணமாகத்தான் நம் மனதுக்குத் தெரியும். அதுவே நாம் எதிர்பார்க்காத நிலையில் அந்த செயல் நடக்கும்போது நமக்கு மனதளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

 

கவியும் மனதளவில் நொந்து நூடுல்ஸ் ஆனாள். தினம், தினம் அவள் எதிர்பார்க்காத நிகழ்வுகள். எப்படி காய் நகர்த்தினாலும் கேட் போட்டுக்கிட்டே இருக்காங்களே..? என்று கவியின் மனம் எண்ணெய்யில் சுருளும் இறால் போல வேதனையில் சுருண்டது. 

 

அந்த நேரம் பார்த்துக் கதவை யாரோ தட்டினார்கள். கவி அவசரமாக லேப்டாப்பை எடுத்து வைத்துவிட்டு, நீட் தேர்வுக்குரிய புத்தகத்தைப் படிப்பது போல செட் பண்ணிவிட்டு கதவைத் திறந்தாள்.

"ஹாய்...டா" என்று அழைத்தபடி அப்பா உள்ளே வந்தார்.

"என்ன  டாடி,  எனிதிங் ஸ்பெஷல்!" என்று ஆச்சரியமாகக் கேட்டாள் கவி.

 

அவ்வளவாகக் கவியின் அறைக்கு வராத அப்பா இன்று வருவதைப் பாசமாக எடுத்துக்கொள்வதா..? சந்தேகமாக எடுத்துக்கொள்வதா..? என்று புரியாமல் பொதுவாக ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தாள்.

"சும்மாதான் டா வந்தேன். படிப்பு எப்படி போகுது..? எக்ஸாமுக்கு நல்லா படிக்கிறயா..?” என்று ஏதேதோ பேசினார். கண்கள் மட்டும் அறையை சல்லடையிட்டன.

"டாடி... எல்லாம் சூப்பரா போகுது. ஏதாவது ஹெல்ப் வேணுமா டாடி" என்று பட்டென்று போட்டுடைத்தாள்.

"எப்படிம்மா.. இப்படி ஒரு புரிதல்?” என்று மழுப்பிவிட்டு,

"உன் லேப்டாப்பை கொஞ்சம் கொடும்மா. என்னுடையது சில சாஃப்ட்வேர் சப்போர்ட் பண்ண மாட்டேங்குது” என்று மர்மப் புன்னகையோடு கேட்டார்.

"டாடி, ஹேக் பண்ணதும் இல்லாம நான் அதுல ஏதாவது ரகசியம் வச்சிருப்பனோன்னு லேப்டாப் கேட்கறீங்களா", நல்ல காலம் அதில் தியாவின் சம்மரியை சேவ் பண்ணலை. தேங்க் காட் என்று நினைத்துக்கொண்டாள்.

"ஒகே.. டாடி நீங்க எடுத்துக்கோங்க" என்று உதட்டளவில் சொல்லிவிட்டு லேப் டாப்பை எடுத்து அவரின் கைகளில் கொடுத்தாள்.

"தேங்க்ஸ் டா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

 

குழப்பம் அதிகமாகும்போது அப்படியே விட்டால் தன்னால் தெளியும். கவியும் காலையில் யோசிக்கலாம் என்று சாப்பிடாமல் தூங்கச் சென்றாள்.

 

மீண்டும் கதவு தட்டப்பட்டது. எரிச்சலுடன் போய் திறந்தாள். 

"கவி சாப்பிடலையா..?" என்று அம்மா அன்புடன் கேட்டார்.

அப்பா மேல் இருந்த கோபம் அம்மாவிடம் டேக் டைவர்ஷன் ஆகியது.

"எனக்கு வேணாம் பசிக்கலை" என்றாள் எரிச்சலுடன்.

"சாப்பிடாமல் தூங்கக் கூடாதும்மா" என்று அம்மா முடிப்பதற்குள்,

"பிளீஸ், என்னைக் கொஞ்சம் தனியா விடும்மா" என்று கோபத்தின் படியேறினாள் கவி.

 

வேறுவழியின்றி திரும்பிய திலகா மனதில், எப்போதும் கதவை தாழிடாதவள் இப்போது மட்டும் ஏன் கதவை தாழிட்டுக்கொள்கிறாள் என்ற சந்தேக முடிச்சு இறுகியது.

 

விடியும் விடியலாவது வில்லங்கம் இல்லாமல் இருக்கட்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டே கண்விழித்தாள் கவி.

 

கண்விழிக்கும்போதே பென்டிரைவை எப்படி ஓப்பன் பண்ணுவது.? என்ற சிந்தனையும் விழித்துக்கொண்டது. என்ன காரணம் சொல்லி வெளியில் போவது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள்.

 

அப்போது அவளுடைய அலைபேசி சிணுங்கியது. இவ்வளவு காலையில் வேலை வெட்டி இல்லாமல் யார் எனக்கு ஃபோன் பண்ணுவது என்று நினைத்துக்கொண்டே ஃபோனை எடுத்தாள்.

 

ராம்தான் அலறிக்கொண்டிருந்தான்.

 

ஆஹா தூண்டில் போடாமலே மீன் தானா வந்து மாட்டுதே என மகிழ்ந்துகொண்டே, "சொல்லுடா.. இப்பதான் நான் இருப்பது நினைவுக்கு வந்ததா" என்று உரிமையுடன் பேசினாள் கவி.

 

தொடரும்....

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #24