மனசுக்குள்ள இருக்கிற மிருகத்தன்மையை மறைத்து, வெளியில் இருக்கும் மனிதத் தன்மையைக் காப்பாற்ற, நிறைய பேர் வேடம் போடுகிறார்கள். அந்த வேடம் கலையாமல் இருப்பதற்கும், தன்னைப் பற்றிய இமேஜ் உடையாமல் இருப்பதற்கும் அவர்கள் நிறைய போராடவேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட போராட்டத்தைத் தான் இப்போது எஸ்.கே.எஸ். நடத்திக் கொண்டிருக்கிறாரோ?
டாக்டர் ராஜேஷ், அங்கே பேஷண்டாகி அமர்ந்திருந்தார்.
ஆம். அந்த அறையில் டாக்டர் ராஜேஷ், காலின் பாதத்தில் பெரிய கட்டாகப் போட்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்து போன எஸ்.கே.எஸ்.
"என்னாச்சுங்க டாக்டர்".? என்றார்.
"வாங்க எஸ்.கே.எஸ்” என்று அழைத்துவிட்டு, அடிப்பட்ட கதையைச் சொல்ல ஆரம்பித்தார் டாக்டர்.
“அதை ஏன் கேட்கறீங்க எஸ்.கே.எஸ்., இங்க படியில் இறங்கிக் கொண்டிருந்தேன். அப்ப, திடீர்ன்னு ஒரு பெண் படியில் வேகமாக ஓடிவந்தாள். வந்த வேகத்தில் அவளுடைய கால்ல என் கால்பட்டு இடறிவிட்டது. நான் படியில் நிலை தடுமாறி இரண்டு, மூன்று ஸ்டேப்ஸ்ல உருண்டுட்டேன். நல்லவேளை தலையில் எதுவும் அடிபடலை. அந்தப் பெண்ணே, மோசமாக அடிபடாதபடி மின்னல் வேகத்தில் என்னை, மேலும் உருளாமல் தடுத்துத் தூக்கிவிட்டு விட்டாள். கால் இடறி விழுந்ததில், பாதத்தில் பலமா அடிபட்டுடுச்சு. ரத்தக்கட்டும், தசை பிசகலும் ஏற்பட்டுடுச்சு. அதான் கட்டுப் போட்டு,இரண்டு நாளைக்கு பெட் ரெஸ்ட் எடுக்கலாம்னு இங்கயே..." என்று விளக்கமாகச் சொல்லிப் புன்னகைத்தார்.
எஸ்,கே.எஸ்.ஸோ, ராஜேஷ் சொன்னதை நம்பமுடியாமல், ஒரு வேளை இது கவியோட வேலையாக இருக்குமோ? என்று மனதிற்குள் ஒரு கணம், புள்ளி வைத்துக் கோலம் போட ஆரம்பித்தார்.டாக்டரின் காலை டேமேஜ் செய்வதால், கவிக்கு என்ன லாபமிருக்கப் போகிறது? சே...சே.. இது கவியின் திட்டமாக இருக்காது’ என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
இருந்தாலும் கவி மீது இனம்புரியாத சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
திடீரென்று எஸ்.கே.எஸ்.சின் மனக்கண் முன், அந்த பர்தா பெண் ஒருநொடி வந்து போனாள். காலை இடறி விட்ட பெண் அந்த பர்தா போட்ட பெண்ணாக இருக்குமோ? என்ற எண்ணம் வந்தவுடன்,
"ராஜேஷ்.. உன் காலை இடறிவிட்டப் பெண் பர்தா போட்ட பெண்ணா..?” என்றார் பரபரப்பாக.
"இல்லைங்க எஸ்.கே.எஸ். என் காலில் இடறிய பெண் சுடிதார் தான் போட்டிருந்தார். இது சூழ்நிலை காரணமாக நடந்த தற்செயல் விபத்துதான். இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை" என்று டாக்டர் சமாதானப்படுத்தினார்.
"எப்படி காலில் இடறியதும் நீங்க விழுவீங்க? அதான் கைப்பிடி இருக்குமே.. அதை பிடித்துக்கொண்டிருக்கலாமே?” என்று எஸ்.கே.எஸ், மீண்டும் வார்த்தைகளில் ஜவ் இழுத்தார்.
"சொல்றேன்னு சிரிக்காதீங்க எஸ்.கே.எஸ், உடலுக்கு வயசாகறது மனசுக்குத் தெரிய மாட்டேங்குது. எனக்கு இன்னும் இளமை ஊஞ்சலாடுதுங்கற நினைப்பு மனசுக்குள்ள இருக்கு. அதனால படிகளில் இறங்கும் போது நடுவில் கைப்பிடியைப் பிடிக்காமல் துள்ளிக் குதித்து இறங்கினேன்.அந்த சின்னப் பொண்ணும் அப்படி இறங்கி வரும்போது கால் இடறிட்டா. எப்படியோ நான் ஸ்லிப் ஆனேன். அந்தப் பெண்ணும் சாரி சொல்லி ரொம்ப ரொம்ப வருத்தப்பட்டாள்.” டாக்டர் ராஜேஷ் இவ்வளவு தூரம் விளக்கிச் சொன்ன பிறகுதான் எஸ்.கே.எஸ் ,சமாதானமானார்.
நல்லகாலம் அவர் கேமரா ஃபுட்டேஜ் கேட்கலை.
அப்படி அவர் கேட்டிருந்தால், அந்த பர்தா பெண் யார் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். கவியால் மேற்கொண்டு தியாவைப் பற்றியும், அந்தப் பள்ளியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியும் அறிந்திருக்க முடியாது. வாழ்நாள் வினாவாக தியாவின் மரணம் மரணித்துப் போயிருக்கும்.
டாக்டரின் சறுக்களில்தான், கவியின் எண்ணம் தலை நிமிர்ந்தது.
டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் வரும் போது கவி கார் எங்கே என்று அதன் ஜி.பி.எஸ்-ஐ பார்த்தார் எஸ்.கே.எஸ்.அது அவர் வீட்டு லொகேஷனைக் காட்டியது. கவி வீட்டில் இருக்கிறாள் என்பதை உறுதி செய்துகொண்டு பிஸினஸ் மீட்டிங்கில் கலந்து கொள்வதற்கு நிம்மதியாகச் சென்றார்.
டாக்டர் லேகா அந்த மருத்துவமனையில் இருந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் மேனை அழைத்து, கெஞ்சாத குறையாகக் கெஞ்சி, அந்த சர்வர் செய்த மக்கரை சரிசெய்ய வைத்தாள். பரபரப்பாக, தியாவின் கேஸ் டைரியைத் தேடிப்பிடித்தாள்.
தியா, டாக்டர் ராஜேஷிடம் சொன்ன விசயங்கள் அனைத்தும் அப்படியே ஃபோல்டரில் சேவ் ஆகியிருந்தது. இதிலாவது கவிக்கு தேவையான செய்திகள் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அதை பென் டிரைவில் ஏற்றிக்கொண்டாள். பின்னர், உற்சாகமாக கவிக்கு ஃபோன் பண்ணினாள் லேகா.
ஃபோனை எடுத்தவுடன் கவி, "மேம், டாக்டர் எப்படி இருக்கார்?" என்று அக்கறையாக விசாரித்தாள்.
"அவருக்கென்ன ஓகே. பெரிதாக ஒன்றும் இல்லை, ரெண்டு மூன்று நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். அதுதான் எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்" என்று சொன்னபடியே சிரித்தாள்.
"ரொம்ப தேங்க்ஸ் மேம், நீங்க மட்டும் டாக்டர் எந்த நேரம் ரவுண்ட்ஸ் வருவாரு, எந்த ஃபுளோர் வழியா வருவான்னு, சந்தேகம் வராம எப்படி செய்யனும்னு ஐடியா கொடுக்கலைன்னா... சம்பவம் சொதப்பலாகி மாட்டியிருப்போம்” என்று நன்றியைச் சற்று தழுத்த குரலில் சொன்னாள் கவி,
"எனக்கெதுக்கு நன்றியெல்லாம் உன்னுடைய செயலைப் பார்க்கும் போது, நானெல்லாம் சாம்பாரில் கரைத்த பெருங்காயம் மாதிரி. உன் மனதின் பெருங்காயம் மாறினால் மகிழ்ச்சி கவி" என்றாள் லேகா.
"மேம், மனநல மருத்துவருக்கே, மனநலம் சரியில்லையோ? இலக்கியத் தமிழில் பேசறீங்களே" என்று உரிமையுடன் சற்று கிண்டல் செய்தாள் கவி.
"என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை. டாக்டர் தமிழில் பேசினாலே மனநலம் பாதிச்சுடுச்சுன்னு அர்த்தமா? தமிழ்த்தாயே, என்னையும் உன்னையும் தமிழர்கள்ட்ட இருந்து காப்பாத்து...” என்று சிரித்தாள் லேகா. பின்னர் அவளே...
”சரி கவி, பென்டிரைவ் ரெடியாயிடுச்சி. எப்படி எப்ப வாங்கிக்கற?"என்று கேட்க... ’நாம வீட்டில் இருக்கிறோமே, அப்பாவிற்கு தெரியாமல் எப்படி வெளியில் போவது?’ என்று யோசித்தாள் கவி. ’காலாற நடப்பது போல் வெளியே போய் ஆட்டோ பிடிக்கலாமா?’ என்று அவள் யோசிக்கும் போதே..
எஸ்.கே. எஸ்.சின். கார், வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்தது...
(திக் திக் தொடரும்)
சாம்பவிசங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #21