Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #19

Published on 13/09/2021 | Edited on 14/09/2021

 

marana muhurtham part 19

 

அத்தியாயம்-19

 

கவியும், அவள் அப்பாவும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் நம்பாமல். 

 

கவி காரில்  செல்லும் போதே, ஒரு பேப்பரை எடுத்து, டிரைவர் மணியிடம் கொடுத்தாள். அதில் கார் எந்தெந்த இடத்துக்குப் போகவேண்டும் என்று ஒரு மேப்பையே குறித்திருந்தாள்.

"என்னம்மா இது "- என்றார் முதல் அத்தியாயத்திற்குப் பின், கதையில் தலைகாட்டாத மணி. 

"நீங்க  எங்கெங்கே போகனும்னு இதில் விபரம் இருக்கு அண்ணா" 

"ஏம்மா உங்க கூடத்தானே நான் இருக்கப் போறேன். நீங்க அங்கே போ இங்கே போன்னு சொன்னால், நான்  போகப் போறேன்?”என்றார் அப்பாவியாக.

"போகப் போகப் புரியும் அண்ணா"

 

கார் கிளம்பி ஐந்து நிமிடம் இருக்கும். கவியின் அப்பா எஸ்.கே.எஸ்., தன் செல்லில் இருக்கும் ஜி.பி.எஸ். மூலம் கவியின் கார் எங்கே போகிறது என்று  கவனித்தார். வேளச்சேரி டெர்மினஸைக் கடந்து அது செல்வதை அது காட்டியது.

’அங்கே எங்கே போகிறாள்? சரி வெய்ட் பண்ணிப் பார்க்கலாம்’ என்று  அமைதியானார்.

 

சந்தேகம் என்பது குரங்கு கையில் கிடைத்த  பூ மாலை மாதிரி. அதைப் போட்டுக் கசக்கினால் கடைசியில் நாருதான் மிச்சமாகும்.

 

’தியா விவகாரத்தை இன்னும் கவி கைவிடவில்லை போலிருக்கே. நமது பள்ளியில் ஏதாவது தகாத சம்பவங்கள்  நடப்பது போல் வெளியில் தெரிந்தால், பள்ளிக்கு தானே அசிங்கம்’ என்று கைபிசைந்தார்.

 

கவிக்கு பதில் வேறு யாராவது  இப்படிச் செய்திருந்தால், எஸ்.கே.எஸ்.ஸின் அணுகுமுறையே வேறாக இருந்திருக்கும். கவி, மகள் என்பதால் மனதிற்குள் ரொம்பவே திணறினார்..

 

வேளச்சேரி சிக்னல் தாண்டியதும், 

"மணி அண்ணா, காரை  ஓரமா, டிராஃபிக்குக்கு இடைஞ்சல் இல்லாம நிறுத்துங்க” என்றாள். 

 

சிக்னலில் கார் நின்றது. கவி காரிலிருந்து இறங்கி நடைமேடையில் ஏறி நடந்தாள். டாக்டர் லேகாவுக்கு ஃபோன் பண்ணினாள்.

"குட்மார்னிங் லேகா மேம்."

"குட்மார்னிங்  கவி."

"மேம் நான் ஹாஸ்பிட்டல் வந்தது, அப்பாவுக்கு தெரிஞ்சிடுச்சி.”

"என்ன கவி இப்படிச் சொல்றீங்க? ஜாக்கிரதையாக நடந்துக்கோங்க. உங்க லட்சியப் பயணத்தில் நானும் சேர்ந்துக்கறேன். உங்களுக்குத்  துணை வர்றேன். காரணம், என் அக்கா மகளும் உங்களுடைய அந்தப் பள்ளியில்தான் ஆறாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கும் எப்பவோ ஒரு நாள், மேல்  வகுப்பில் இப்படியொரு பிரச்சனை வந்துடக் கூடாதில்லையா? பொது நலத்திலும் ஒரு சுயநலம்தான் கவி" என்று நம்பிக்கையுடன் பேசினாள் லேகா.

" ரொம்ப மகிழ்ச்சி மேம். உங்க சப்போர்ட் என் முயற்சியில் என்னை ஜெயிக்க வைக்கும். டாக்டர் ராஜேஷ்  உதவி இல்லாமல், தியா பத்தின ரகசியங்களைத் தெரிஞ்சிக்க முடியாதா? அவள் அங்கே என்ன சொன்னாள்ன்னு  கண்டுபிடிக்க  முடியாதா?" என்றார் பரிதவிப்பாக. 

"நானும்  இரவெல்லாம் இதைப் பற்றி தான் யோசித்தேன். அப்புறம்தான் திடீரென்று ஒரு ஐடியா வந்தது. நாங்க எப்பவும்  பேஷன்ட்டோட  மன அழுத்தத்திற்கான காரணத்தைப் பேச வைப்போம். அப்ப அவங்களை அரை மயக்கத்துக்குக் கொண்டுபோய் பேச வைக்கிறதும் உண்டு. அப்ப அவங்க சொல்றதை அப்படியே  அவங்க கேஸ் ஹிஸ்டரியில், அதான் கம்யூட்டரில் அவங்களுக்கான பக்கத்தில்  பதிவு பண்ணிடுவோம். பேஷன்டின் முழு ஜாதகமும் அதில் இருக்கும். அதே மாதிரி தியாவுக்கும் ஒரு கேஸ் ஹிஸ்டரி இருக்கும். அதை பென் டிரைவ்வில் காப்பி பண்ணி உனக்குத் தர்ரேன். ஹாஸ்பிட்டல் வந்து வாங்கிக்கோங்க கவி",என்று லேகா சொல்ல வெளிச்சமாய் நிமிர்ந்தாள் கவி.

“தேங்க் காட், என்னால அங்க நேர்ல வரமுடியாதுங்க மேம். அந்த பிளாட் மண்டையன் டாக்டர் ராஜேஷ், அப்பாக்கிட்ட வத்தி வச்சிடுவார். அதனால நான் என் தோழியை  அனுப்பறேன்."  என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

 

பர்தா பெண்ணுக்கு கவி கால் பண்ணினாள்.

"ஹலோ சொல்லு கவி" என்று குரல் கூவியது.

"நீங்க இப்ப வேளச்சேரி ராகவ் ஆஸ்பிட்டலுக்கு போய்,டாக்டர் லேகாவைப் பாருங்க. அவங்க ஒரு பென் டிரைவ் தருவாங்க.  கலெக்ட் பண்ணிடுங்க:” என்றாள்.

"கவி, நான் இப்ப முக்கியமான வேலைல இருக்கேனே? எப்படி போவது?" என்று தயங்கினாள் பர்தா. 

"பிளீஸ்ங்க...  நிலைமையின் அவசரத்தைப்  புரிஞ்சிக்கோங்க" என்று கவி கெஞ்சிய பிறகு ஒத்துக்கொண்டார் பர்தா பெண்.

 

எல்லாரிடமும் பேசி முடித்து மூச்சுவிடலாம் என நினைக்கையில் மீண்டும் ஃபோன். இந்த முறை மூச்சைத் திணறவைத்தவர் அவள் அப்பா.

 

ரிங் போய்க்கொண்டிருந்தது. கவி மறைத்து வைத்திருந்த பட்டன் ஃபோனை எடுத்து, மணி அண்ணனுக்கு கால் பண்ணினாள்.

" மணி அண்ணா, இப்ப மிகச் சரியாக எங்க இருக்கீங்க" என்று கேட்டாள்.

"காமாட்சி ஆஸ்பிட்டல் கிட்ட. டிராபிக்ல...5 நிமிசமா.." என்றவரிடம் "சரிங்க அண்ணா" என்று சொல்லி ஃபோனை  கட் பண்ணினாள்.  

 

ஃபோனை ஆன் பண்ணி “சொல்லுங்க டாடி"என்றாள்.

 

எஸ்.கே.எஸ்.  ஜி.பி.எஸ்.சில் கூகுள் மேப் பார்த்துக் கொண்டே , "கவி, இப்ப எங்க இருக்க டா" என்றார். 

"டாடி காமாட்சி ஹாஸ்பிட்டல் கிட்ட... போய்க்கிட்டிருக்கேன். அங்க ஒரு பிரண்டை பிக் அப் பண்ணிகிட்டு தியா  வீட்டிற்குப் போறேன்” என்று இயல்பாகச் சொன்னாள்.

" என்ன டாடி.. சொல்லுங்க?” 

"ஒன்னும் இல்லைம்மா... வெயில் அதிகமா இருக்கு. அடிக்கடி இளநீர் ஜூஸுனு  வழியில் குடிச்சிக்க. இதைச் சொல்லத்தான் கால் பண்ணேன்” என்று தடுமாறினார். 

 

கவி, ’டாடி, நீங்க என்னை வேவு பார்க்கத்தான் கால் பண்ணீங்கன்னு எனக்குத் தெரியும், நீங்க ஜி.பி.எஸ் காட்ற ரூட்டும் நான் சொல்ற இடமும் மேட்ச் ஆகுதான்னு பார்க்கத்தான்... இந்த தவி தவிக்கறீங்க. பாவம் டாடி நீங்க’ என தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

 

வழியில் ஒரு செப்பல் கடையில்  நுழைந்தாள். 

"லேகாவின் காலுக்காக  காத்திருந்தவள், செப்பல்களின் விலையை விசாரித்து நேரம் போக்கினாள். எதிர்பார்த்தபடியே லேகாவிடமிருந்து கால் வந்தது. அதிர்ச்சியூட்டும் அணுகுண்டு போல்....

 

( திக் திக் தொடரும்..)
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #18