Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #02

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

maayapuraa series part 2

 

'வருசம் முழுதும் வெள்ளாமை செய்து, விளைந்த  வயலை வெள்ளாடு மேய்ந்த கதையாக.' ஊருக்குப் போகலாம் என்று கிளம்பிய தனது குடும்பத்திற்கு,  இப்படி ஒரு சோதனை வரும் என்று அலமேலு எதிர்பார்க்கவில்லை. ஊருக்கு போகவேண்டும் என்று சொல்லும் போதே "முன்னாடி நீவேணும்னா சங்கவியோட போறியா? நான் பின்னால வர்றேன்" என்று பெருமாள் அரைமனதுடன் தான்  சம்மதித்தார். 

“இல்லைங்க. செல்வத்தண்ணன் உங்களத்தான் அதிகமா எதிர்பார்க்கும்.  நாம சேர்ந்தே போகலாம்களே” என்று படாதபாடு பட்டு பெருமாளைச் சம்மதிக்க வைத்திருந்தாள் அலமேலு. தேரு நிலையைவிட்டு கிளம்பினால் போதும் என்ற நினைப்பில் கிளம்பிய அவளுக்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அலமேலு நினைக்கவில்லை. 

 

வீட்டைப் பூட்டிக் கொண்டு எல்லோரும் வாசலில் இறங்கிய போது, மஞ்சள் பையை இடுப்பில் சொருகிக் கொண்டு, தலையில் சிறு மூட்டையைச் சுமந்தபடி, திருவாரூர் தேராட்டம் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தார் அலமேலுவின் மாமியார் பவுனு. தெருவோர ஒற்றை பனைமரம் முறிந்து தலையில் விழுந்தது போல அதிர்ச்சியில் உறைந்தார் அலமேலு. 

 

பெருமாளைப் பார்த்ததும், "என்னை பெத்த ராசா, உன்னை பாக்காம  சோறு தண்ணி இறங்கலை ராசா. ஆத்தாளைப் பாரு, செக்கு உலைக்கையா மழமழன்னு இருந்தவ, ஈர்க்குச்சியா இளைச்சு வந்திருக்கேன்"- என்று  முந்தானைத் தலைப்பை மூக்கில் வைத்து உறிஞ்சினாள். 

"வாம்பா,  எனக்கும், நீ தம்பி வூட்டுக்குப் போன பத்து நாளா உன் நெனப்பாகவே இருந்துச்சு " என்று பாசத்தோடு தபேலா வாசித்தார் பெருமாள்.

’பாவி மவளே, உன் நெனப்புல ஈர வெறகை வச்சு எரிக்க. எங்க அண்ணன் வீட்டுக்குப் போற நேரத்துல வந்து, காவலுக்கு நின்னுட்டியே’ என்று மனதிற்குள் மாமியாரைத் திட்டிக் கொண்டே,

"வாங்க அத்தை, நல்லாருக்கீங்களா?" என்று ஒப்புக்கு கேட்டு வைத்தாள் அலமேலு. 

" நீ கேட்கலைன்னு குறை தான்.. " என்று இழுத்தாள் பவுனு.

" பாட்டி" என்று பவுனின் கையை ஆதரவாக வந்து  பிடித்துக் கொண்டாள் சங்கவி. மறுபடியும் பூட்டப்பட்ட வீடு திறக்கப்பட்டது.

’கிழவிய விட்டுட்டும் போகமுடியாது. இழுத்துக்கிட்டும் போகமுடியாது’ என்று மனதிற்குள் முனகினாள் அலமேலு. பயணம் நின்றது.

 

வீட்டிற்குள் அனைவரும் வந்து பேசினர். மறுநாள் காலை அலமேலுவும் சங்கவியும் முன்னதாகக் கிளம்புவதென்றும், பெருமாள் திருமண நாள் அன்று வருவதாகவும், முடிவு செய்தனர்.

"தரையில் சுற்றும்  பம்பரமாக இருந்தாலும், வானத்தில் பறக்கற பட்டமாக இருந்தாலும் ஆட்டம் ஒருநாள் அடங்கி தான் ஆகணும்" இது புரியாத அலமேலு, அண்ணன் வீட்டிற்கு போவதில் தலைகால் புரியாமல் பரபரத்துக் கொண்டிருந்தாள். கணவருக்கு  சமைத்துப் போடுவதற்கு மாமியார்  இருக்கிறாள் என்ற தைரியத்தில்  ஊருக்கு கிளம்ப தயாரானாள் அலமேலு.

 

மறுநாள் அதிகாலையிலேயே  எழுந்த அலமேலு, வாசல் தெளித்து அரிசி மாவில்  கோலம் போட்டார்.

"அதிகாலையில் கோலம் போடும் போதே பெண்கள்  மனநிலையை தெரிந்துகொள்ளலாம். கோலம் நல்லா ஜாங்கிரி மாதிரி சுற்றி சுற்றி போட்டார்கள்  என்றால்  அவர்கள் தெளிவான மனநிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதையே தெருவை அடைத்து பூக்கோலம் போட்டார்கள் என்றால் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார்கள் என்று பொருள். இரண்டு கோடு இழுத்து நட்சத்திரம் போட்டார்கள் என்றால்   சோகமா இருக்கிறார்கள் என்றும், வாசலைப் பெருக்கிப் பக்கத்து வீட்டு வாசல்ல தள்ளினார்கள் என்றால் , கோபமாக சண்டை போடுற மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் நம்மைப் போன்ற உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

 

அலமேலு போட்ட கோலம் ஜாங்கிரி ஜாங்கிரியாய் அவள் மன மகிழ்வை எடுத்துக்காட்டியது. அடுத்து அலமேலு, அடுப்பை மெழுகிப் பளிச்சென்று பூக்கோலம் போட்டு அவசரமாகப் போய், நன்கு உயரமா இருக்கும் பித்தளைப் பால் பாத்திரத்தில்  நுரை பொங்கப் பொங்க, பாலைக் கரந்து அடுப்பில் வைத்துவிட்டு சங்கவியை எழுப்பினாள்.

"சூரியன் சுள்ளுனு முகத்துல அறையறது கூட தெரியாம, பொட்டைப் புள்ளைக்கு  இவ்வளவு நேரம் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு" என அவள் சுப்ரபாதத்தை ஆரம்பித்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டே மாட்டுத் தொழுவத்தில் சாணம் அள்ளிப்போட்டு பெருக்கிக் கொண்டிருந்த மாமியார் பவுனு "தங்கத்தில் தொட்டில் கட்டி, வைர கெண்டியில பால் குடிச்சு , வானத்து நிலாவுல ஓடிப்பிடிச்சு  விளையாடிய,  எட்டு ஊரு  சீமையில இல்லாத  உடம்பொறப்பைப் பார்க்கப் போறாப் பாரு. ஒன்னு விட்ட அண்ணனுக்கே இந்த ஆட்டம் போடுறாளே. ஒரே ரத்தத்தில் பொறந்தவளா இருந்தா என்ன பண்ணுவா?" என்று மாமியார்க்காரி பவுனு சொன்னது அலமேலுவின் காதில் விழுந்தது.

"ஒட்டுத் திண்ணையில் ஒன்னா கை பிடிச்சு  வாழ்ந்த ஒத்துமையான குடும்பம் எங்களது. ஓட்டைப் பானை சட்டிய தூக்கிகிட்டு,  ஊரு ஊரா குடும்பம் பண்ணவங்களுக்கு  தெரியுமா பங்காளி பாசம்?" என்று பதிலுக்கு  சொடுக்கெடுத்தாள் அலமேலு.

 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி "அம்மா.. காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா மகாபாரதத்தை. பாட்டி  நீயும் உன் ஓட்டை வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்ட. போய் யாராச்சும் சுடுதண்ணி போடுங்க. குளிக்கணும்” சங்கவி சொன்னதும், கொல்லைப்புரத்தில் இருக்கும் கல் அடுப்பை மூட்டி, வேலங்கட்டையையும், கம்பந் தட்டையும் வைத்து எரிய வைத்து, தண்ணீரைச் சூடு பண்ணிக் கொண்டே, "அம்மா... சங்கவி, நீச்ச தண்ணி கொஞ்சம் எடுத்தாம்மா" என்று குரல் கொடுத்தாள் பவுனு.

 

இந்தக் கோரிக்கைக் குரல், பேத்தி  சங்கவிக்கு இல்லை. மருமகள் அலமேலுவுக்கு  என்று மாமியாருக்கும் மருமகளுக்கும் தெரியும். 

"பாட்டி, இந்த காலங்காத்தால நீச்ச தண்ணி எதுக்கு?  அம்மா கறந்த பாலை இழைய  காய்ச்சி, மதுராந்தகம் லட்சுமி கபேயில் வறுத்து அரைத்த காபி கொட்டையில் மணக்க மணக்க பில்டர் காபி போடுறாங்க. அதைக் குடிங்க" என்று சொல்லும்போதே நாவில் காபியின் சுவையை உணர்த்தினாள் சங்கவி.

"உங்க அம்மா இதோ எனக்கு காபி கொண்டு வர்றா பாரு" என்று பவுனு சொல்லும் போதே, அலமேலு டம்ளரில் டபாராவை  கவிழ்த்து மூடிய காபியைக் கொண்டுவந்து வைத்தாள்.

"ரெண்டு பேரும் ஊருக்குத்தான் வெறும் வாயை மெல்றீங்களா? உள்ளுக்குள்ள  பாசமா தான்  நகமும் சதையுமா ஒட்டிக்கிட்டு இருக்கீங்க" என்று ஆச்சரியப்பட்டாள் சங்கவி.

"சங்கவி, மாமியா.. மருமக உறவுங்கறது களத்துல அடிச்சு தூத்தற பதரு, நெல்லு  மாதிரியான உறவில்லை. வயக்காட்டு ஏர்கலப்பைல  மாட்டி சிக்கி தவிச்சாலும், வயலை விட்டு போகாத நண்டு மாதிரியான உறவு" என்று வாழ்வின் எதார்த்தத்தை சொன்னாள் பவுனு. 

"அடியேய்... அங்க என்ன கதை அளந்து கிட்டு.  காலைல 8 மணிக்கு குமரன் பஸ்ஸை பிடிச்சாகணும்.  சீக்கிரமாக கிளம்பு" என்று மகளை விரட்டினாள் அலமேலு.

 

காலைல இட்லியும் வரமிளகாய்ச் சட்னியும் வைத்து, மதியத்திற்கு மொச்சை கருவாட்டு குழம்பு செய்து வைத்திருந்தார் அலமேலு. இந்த குழம்பைச் சுண்ட வச்சு, மாமியாரு நாலுநாள் ஓட்டிடுவாங்கன்னு கணக்குப் போட்டாள். 

 

கிளம்பிய நிலையில், ”கல்யாணத்துக்கு அத்தைக்காரிங்கிற முறையில சீர் செய்யணும்” என்று புருஷனிடம் பணம் கேட்டாள் அலமேலு. பெருமாள், அலமேலுவை ஏற இறங்க பார்த்தார். 

"ஒன்றுவிட்ட அத்தைதானே நீ. இதுக்கே நலுங்கு வைக்கணுமா?" 

"ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு, குலத்துக்கு ஒரு கொடியா பொறந்தவ நான். நலங்கு வைக்காம சிறக்குமா கல்யாணம். எனக்கும் கைல நாலு காசு இருந்தா, நான் ஏன் உங்கக்கிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்கப்போறேன்”- என கண்ணை கசக்கினாள் அலமேலு. 

"சரி சரி அழுது ஆர்பாட்டம் பண்ணாத.” என்றபடி, கூடத்தைத் தாண்டி உள்ளறைக்குள் சென்று, பழைய இரும்புப் பெட்டியை திறந்து, துணிகளுக்கு அடியில் இருந்து "எலி வளையில் காத்திருந்து திருடி வந்தது" போல இருந்த,  ஒரு துண்டை எடுத்தார்.  எட்டாய் மடித்து வைத்த துண்டில் அதைவிட,  எட்டாய் மடித்துச் சொருகி வைத்திருந்த பணத்தை எடுத்து, அதிலிருந்து 200 ரூபாயை கொடுத்து..

"ஒரு கால் காசு வரிசை வெச்சிடு. துணிமணி சீர்செனத்திக்கு, உங்க போக்குவரத்துக்கு மீதி பணத்தை வச்சிகோங்கன்னு" என்று அதற்கு பட்ஜெட்டும் போட்டார்.

 

அந்த பணத்தை வாங்கிக் கொண்டு அடுக்களை வந்த அலமேலு ’கால் காசு வரிசை வச்சா,  அரை பவுனுக்குக் கூட விதி இல்லாத வக்கத்தவன்னு அண்ணிக்காரி சொல்லிக் காட்டுவா. என்ன பண்றது’ ன்னு நினைத்தவள், ஏதோ யோசனை வந்தது போல, பின் வாசல் வழியா வடக்குத்தெரு மாரிசெட்டி வீட்டிற்கு சென்றாள்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முந்தானையில் முடிந்திருந்த " கல்லு வச்ச லட்டுக் கம்மலை செட்டியார் கிட்ட கொடுத்து அடமானம் வச்சு மேலும் 250 ரூபாய் வாங்கிக்கொண்டு, வந்த சுவடு தெரியாமல் வீட்டுக்கு வந்தாள்.

 

அதற்குள்  சங்கவி மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி வைத்திருந்தாள். ” 8 மணி குமரன் பஸ்சை பிடிக்கணும்மா” என்றாள் அவசரமாக.  

 

ஊர் எல்லையில் இருக்கிற ஆலமரத்தடிக்கு அலமேலுவும் சங்கவியும் நடந்தார்கள். அங்குதான் பஸ் நிற்கும். எல்லையில் குடிசை போட்டு இருந்த குறவர்கள்  கூட்டம் ஒன்று, சங்கவியைப் பார்த்ததும் சூழ்ந்துகொண்டது. "ஆத்தா.. மகமாயி..  மவராசி.. முகத்துல கல்யாணக் களை வந்திடுச்சி. சீக்கிரம் நேரம் கை கூடுது” என்று அதில் ஒரு குறப்பெண் குறி சொல்ல ஆரம்பித்தாள்.

"அட, பொழப்பப் பார்த்துகிட்டு போவியா. காதுல மூக்குல இருக்கறதுதான், ஒத்த சங்கிலி இல்லை கழுத்துக்கு. இதுல கல்யாணக் களையாம் கல்யாணக் களை."என்று விரக்தியாக சொன்னாள் அலமேலு.

"ஆத்தா... ஜக்கம்மா சொல்றா. நான் சொல்லல தாயீ, கல்யாணம் கூடுச்சின்னா எனக்கு ரவிக்கைத் துண்டு குடு  தாயீ" என்றாள் அவள் தீர்மானமாக.

 

அதைக் காதில் வாங்காமல் பஸ் வருகிறதா என்று சங்கவியும் அலமேலுவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

பிளஸ் டூ முடித்துவிட்டு மேல காலேஜுக்கு போகவேண்டும் என்று நினைத்திருந்தாள் சங்கவி. அலமேலுவுக்கோ ’ இந்த வருஷம் சங்கவி படிப்பை முடித்ததும், கட்டிக் கொடுத்துடணும்’ என்ற எண்ணம் இருந்தது. 

 

நாம நினைச்சு  என்ன பண்றது? இருக்கிற நாலு காணிய வெச்சு விவசாயம் பண்ணி, கஞ்சி குடிக்கத்தான் முடிந்ததே தவிர, நகை நட்டு சீர் செனத்தின்னு சேர்த்து வைக்க முடியலை. ஒத்த புள்ளங்கறதால காடு கழனி இருக்குன்னு யாராவது கல்யாணம் பண்ணாத்தான் உண்டு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே தூரத்தில் ஹாரன் சத்தம் கேட்டது.

 

சங்கவி இரண்டு கைகளிலும் இரண்டு பைகளை தூக்கிக்கொண்டாள். அலமேலு தலையில், சின்ன சிப்பத்தில் உளுந்து மூட்டையும் இடுப்பில் ஒரு சின்ன பையில் துவரையும் கட்டி எடுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏற முயன்றாள்.

 

பஸ்ஸின் மேல்மாடி முழுதும் ஹவுஸ் புல்லாக இருந்தது. சென்னையில் ஓடும் கூவம் ஆற்றை விட நாற்றத்துடன் பஸ்ஸில் வியர்வை ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஒன்றின் மீது ஒன்று வைத்து அடுக்கிய வெற்றிலை கட்டுகள் மாதிரி பஸ்ஸினுள் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

 

ஒரு வழியாக எப்படியோ பஸ்ஸில் ஏறி மாம்பாக்கம் வந்து  சேர்ந்தனர். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழித்து சங்கவி மாமன் வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு சுண்ணாம்பு அடிப்பதற்காக வாசலிலேயே, சுண்ணாம்புக்கல் பெரிய பெரிய சாலில் ஊறவைக்கப் பட்டிருந்தது. தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நான்கு பேர் பின்புறம் சுண்ணாம்பு அடித்துக் கொண்டிருந்தனர். 

 

நடுவாசலில் சும்மா ’மதுரைவீரன்’ சிலையாட்டம், சிவப்பு  கலரில்  வாசலை அடைத்துக் கொண்டு "டம டம டம டமா,’ என்று சத்தம் போட்டுத் தெரு நாயை எல்லாம் ஓடவிடுமே, புல்லட் வண்டி. அது நின்றுகொண்டிருந்தது. புல்லட்டைப் பார்த்ததும் பையைத் தரையில் போட்டுவிட்டு, கையை முகவாயில் முட்டுக் கொடுத்துக் கொண்டு அதை "ஆ" என வேடிக்கை பார்த்தாள் சங்கவி.

 

எவ்வளவுதான் படிய வாரினாலும் சீப்புடன் போராடி அடங்க மறுக்கும் சுருட்டை முடி. கன்னத்துப் பளபளப்பை லேசாக மூடி மறைக்கும் தாடி. முழங்கையைத் தாண்டி சுருட்டி விடப்பட்ட வெள்ளாவியில் வெளுத்த சட்டை, என  பார்க்க மட்டுமில்லாமல், பார்த்ததும் கவரும் பளீர் கண்கள் கொண்ட ஒரு உருவம் வீட்டிலிருந்து வெளியே வந்தது. அவர்கள்  நிற்பதைக் கூட கவனிக்காமல்  அது புல்லட்டில்  அநாயசமாக ஏறி கிக்கரை உதைத்தது.

"டேய்.. அசோக்  மதியம் சாப்பிட  வருவியா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை வெளியே வந்தாள்.

 

சிறகுகள் படபடக்கும்....
 

 

சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #01