Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் ‘மாயப் புறா’ - ஓர் அன்பின் தொடர்கதை! #01

Published on 18/01/2022 | Edited on 20/01/2022

 

 

Maaya Pura - part 01

 


காலச்சக்கரம் இல்லாமலே நினைவுச் சக்கரத்தை சுற்ற விட்டு, 1985 ஆம் வருடத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறேன். வாருங்கள் வாசகர்களே. 


 ‘அலையென விரியும் நீர் போல்  நினைவுகளும்  வட்டப் பாதையில் சுழல்கிறது’

 
மெட்டுக்கட்ட இளையராஜாக்கள் இல்லாமலே, பறவைகள் பாடிய இசையைக் கேட்டபடியே, அந்த கிராமம் மாலை  வெயிலை போர்த்தியிருந்தது. அது பாரதிராஜா படங்களில் வருவது போன்ற அழகிய கிராமம்.  வீடுகள் எல்லாம் தோரணம் கட்டியது போல், வரிசைக் கட்டி நின்றன.  மூன்றாம் பிறைகளை ஒன்றின் மேல் ஒன்றாய்  அடுக்கியது போல், சிறு சிறு ஓடுகள் வேய்ந்த வீடுகள் கண்களை கவர்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே பூத்துக் குலுங்கிச் சிதறிய பவள மல்லியும், பாரிஜாதமும் விண்மீன் சிதறலாய் பளபளத்து, சாலையோரங்களில் கம்பளம் விரித்துத் தென்றலை வரவேற்றன. வீட்டு வாசல்கள் தோறும், சாணம் மெழுகிய மழமழ தரையில் கோலப் பூக்கள் மலர்ந்திருக்க, அவற்றை வண்டுகள் மொய்த்து ஏமாந்து பறந்துகொண்டிருந்தன. வாடிவாசல் திறந்தவுடன் சீறிப் பாய்வது போல,  மேய்ச்சலை முடித்து தண்ணீருக்கு  காத்திருந்த மாடுகள், தாகத்துடன் வீடு தேடிப் புழுதி பறக்க சீறிப் பாய, புழுதியில் விளையாடிய குழந்தைகள் அவற்றைப் பார்த்து, அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். இதை வீட்டுத் திண்ணையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு மீசைக்கார பெருசு, "எவன்டா அவன்... காளையை கயிறு இல்லாம ஓட்டறது”ன்னு சத்தம் கொடுத்தார். 


"ஏ பெருசு, சும்மா கூவாத. காளைகள் பின்னாலேயே ஆளு வர்ரோம்ல்ல." என்று காளைகளுக்குச் சொந்தக்காரர் பதில் கொடுத்தார்.  அப்போது ஆற்றில் கலக்கும் கால்வாய் போல், ஒரு சந்திலிருந்து வாத்து கூட்டம் ஒன்று வெளிப்பட்டு, ‘குவாக்... குவாக்’ என்று கோரஸ் பாடியபடியே, பிரதான தெருவில் அன்ன நடை போட்டு அணிவகுத்தது. அவை தெரு நாயைக் கண்டு, மூலைக்கு ஒன்றாக பிரிந்து ஓட, வாத்துக்கு சொந்தக்காரி... அங்கிட்டும், இங்கிட்டும் வேகமாக ஓடி வாத்தை மடக்கி அணைகட்டிக் கொண்டிருந்தாள்.

 

இவ்வளவு களேபரத்துக்கும் நடுவில் "பீங்..பீங்.." என்ற  ஹாரன் சத்தத்தோடு அந்த அம்பாசிடர் வந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பெட்டி வண்டியை இரும்பால் செய்து நான்கு சக்கரங்கள் வைத்த மாதிரி அது பரிதாபமாகக் காட்சி தந்தது. எப்படியோ சாமர்த்தியமாக காளைகளுக்கும், வாத்துகளுக்கும் இடையில் காரை ஓட்டினார் டிரைவர். ஏற்கனவே இவர் கிராமத்தில் கட்டவண்டி ஓட்டியிருப்பாரோ என்று காருக்குள் இருந்த செல்வம் நினைத்தார். அவர்தான் காரின் சொந்தக்காரர். அவருடன் பின் இருக்கையில் அவருடைய திருமதியான தங்கமும் அமர்த்தலாக அமர்ந்திருந்தாள்.

 

உஜாலாவுக்கு மாறியிருந்த வேட்டியும், சட்டையும் செல்வத்துக்கு கம்பீரத்தைக் கொடுத்தது. சற்று பருத்த தேகம். அடர்ந்த மீசை. ஏர்க் கலப்பையில் உழுத நிலத்தின்கோடுகள் போல, முகத்தின் ரேகைகள் அவர் ஒரு நிலக்கிழார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தன.  வளைத்துப் போட்ட கொண்டையில், வளைத்து வைத்த மல்லிகைச் சரத்துடன், கல் வைத்த லட்டு கம்மல், எட்டுக் கல் பேசரி, மூக்குத்தி, இரட்டை வடம்  சங்கிலி என  தங்கம் தங்கமாய் பளபளவென்று ஜொலித்தார்.  உம்மென்று இருந்த தங்கம், மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்...

 

"வீட்டில் துணி ஊற வச்சிருக்கேன். காராமணி பய மாட்டுக்குத் தண்ணி காட்டுவானான்னு தெரியலை. இதுல என்னய வேற இழுத்துக்கிட்டு அலையறீங்க. உங்க தங்கச்சிக்கு நீங்க மட்டும் போய் பத்திரிக்கை வச்சா ஆகாதா? அப்படியே பாசமலர் சிவாஜியும்  சாவித்ரியும்  பாருங்க. ஒன்னுவிட்ட தங்கச்சி தானே? தபால்ல கூட பத்திரிக்கைய அனுப்பியிருக்கலாம். ஏகப்பட்ட வேலை கெடக்குது” என்று பக்கவாத்தியம் இல்லாமல் ராகம் பாடினாள். 30 வருடங்களாகக் கேட்கும்  பல்லவி என்பதால், செல்வத்தின் காதுகள், அலட்டிக்கொள்ளாமல் மெளத்தையே எதிரொலித்தது. 

 

தம்பதிகள், அவர்களின் மகன் சந்திரனின் திருமணத்திற்குப் பத்திரிக்கைக் கொடுப்பதற்காக மானூர் என்னும் அழகிய கிராமத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தனர். போகும் போதே பக்கத்து டவுனில் சில பர்சேஸிங்கையும் முடித்துக்கொண்டு, மானூரை  நெருங்கும் போது, பொழுது சாயத் தொடங்கியிருந்தது. மானூரில்தான் செல்வத்தின் தங்கை அலமேலு வீடு இருக்கிறது. கிராமத்துப் புழுதி, சாம்பிராணி போட அதையெல்லாம் அனாயசமாகக் கடந்து கார் போய்க்கொண்டே இருந்தது. மானூர் என்ற பெயரை, ஊர் எல்லையில் சுமந்து நின்ற கல் பலகையைப் பார்த்ததும் கார் நிதானித்தது.  “ஏம்மா, வெத்தல பாக்கு பழமெல்லாம் எடுத்து வச்சிருகீல்ல?” என்று உஷாராகக் கேட்டுக்கொண்டார் செல்வம். “ம்” 

 

அந்த திண்ணை வைத்த ஓட்டு வீட்டி முன் கார் நின்றது. வீடு மெளனத் தவம் பூண்டிருந்தது. கார் சத்தம் கேட்டதும் எதிர் வீட்டு சன்னல் திறந்து, ஆர்வமாக கவனித்தது.  வீட்டு வாசலில் யாரும் இல்லை. ஆனால் கதவு திறந்தே இருந்தது. படியேறிச் சென்ற செல்வம்... கதவருகே சென்று "அலமேலு... அலமேலு...அம்மாடி... " என்று குரல் கொடுத்தார். 


 
செல்வத்தின் குரலே எக்கோ அடித்ததே தவிர பதில் குரல் வரவில்லை. வேறு வழியில்லாமல் செல்வமும் தங்கமும் தெருத் திண்ணையைத் தாண்டி உள்ளே சென்றனர். வீடு அழகாக சுதமாக இருந்தது. கொல்லைப்புறக் கதவும் திறந்திருப்பது தெரிந்தது. "பூங்கதவே, தாழ் திறவாய்"... என்ற பாடல் மெலிதாக அவர்களை  வரவேற்றது.

 

“இதென்னடி இது வாசலையும் கொல்லைக் கதவையும் திறந்து போட்டுட்டு... கொஞ்சம் கூட பயமில்லாம” என சந்தடி சாக்கில் முனகினாள் தங்கம்.

 

“தே.. சும்மா இரு” என்ற செல்வம் மீண்டும் உரத்த குரலில்... "அலமேலு.... அலமேலு“..என்று அழைத்தார்.

 

கொல்லைப்புறத்தில் டிரான்ஸ் சிஸ்டருடன் பாட்டுக் கேட்டுக் கொண்டே பால் கறந்து கொண்டிருந்த சங்கவி சுதாரித்தாள். சங்கவியின் காதுகளில் லேசாக இவர்கள் அழைத்தது விழுந்தது. அந்தப் பசு பால் கொடுக்கிறதோ இல்லையோ தலையாட்டி பாட்டை ரசித்துக் கொண்டிருந்தது. "யாரது" பதில் குரல் கொடுத்துவிட்டு "பூங்கதவின் தாழ்திறக்க ஆரம்பித்துவிட்டாள்" சங்கவி. 


 
"சங்கவி... செல்வம் மாமா வந்திருக்கேன் மா"- என்று புனல் கட்டாத குறையாய் செல்வம் குரல் உயர்த்த...


 
"வாங்க மாமா, வாங்க அத்தை" என்று ஆரவாரமாய் வரவேற்றபடி கன்றுக்குட்டியாய் துள்ளிக் குதித்து வந்தாள் சங்கவி. அவர்களைப் பார்த்த பூரிப்பில் முதலில் கைகால் ஓடவில்லை. பிறகு ஓடிப்போய் குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். மிக நீண்ட  நாட்களுக்குப் பிறகு இப்போது தான் சங்கவியைப் பாரக்கிறாள் அத்தை. நீல நிறத்தில் பூப் போட்ட  டி.சி.பாவாடை. சிவப்பு நிற  ஜாக்கெட், மஞ்சள் நிறத் தாவணி, நீண்ட கூந்தலில் ஊஞ்சலாடிய மஞ்சள் கனகாம்பரப் பூ, காதில் லேசாக ஆடிய ஜிமிக்கி, ஒற்றைக் கல் மூக்குத்தி, தூக்கிச் சொருகிய பாவாடை என்று ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் முந்தானை முடிச்சி ஊர்வசி போலிருந்தாள். அவள் அழகை தங்கம் ரசித்துப்பார்த்தாள். அவள் பார்வை கண்டு நாணிய சங்கவி "அம்மாவும், அப்பாவும் தோட்டத்துல வெண்டைக்காய் பறிக்கப் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க" என்று மெதுவாகச் சொன்னாள். 


 
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சங்கவியின் அப்பா பெருமாளும், அம்மா அலுமேலுவும் வந்துவிட்டார்கள். அண்ணனைப் பார்த்ததும் அலுமேலுவின் வாய் இரண்டு இன்ச் நீண்டது. "வாங்கண்ணா, வாங்க அண்ணி” என வாஞ்சையாய் வரவேற்றாள், “நல்லாயிருக்கீங்களா அண்ணி"என அலமேலு  படபடவென விசாரித்தாள்.

 

"என்னத்தை நல்லாயிருக்கிறது. கை, காலெல்லாம் வலி உயிர் போகுது. காடு, கழனின்னு ஒரே அலைச்சல்.  இதுல கல்யாண வேலையும் பார்க்கனும், வீட்டு வேலையும் பார்க்கனும்னா... ஒண்டி பொம்பளை என்ன பண்ணுவேன். இந்தக் கூறு கெட்ட மனுசனுக்கு புரியமாட்டேங்குது” என்று எப்படா வாய்ப்பு கிடைக்கும் என்று இராமாயணத்தை ஆரம்பித்தாள் தங்கம்.


 
“நல்லா இருக்கீங்க மப்ள?” என பெருமாள் மகிழ்வோடு செல்வத்தை விசாரித்தார். 

 

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே வறுத்து அரைத்த காபி கொட்டையின் மணத்துடன் பில்டர் காபி சில்வர் டம்ளரில் அனைவரின் கரங்களிலும் நுரைத்துத் ததும்பியது. “பரவாயில்லையே, இவ்வளவு சீக்கிரம் காபி போட்டுட்டியே” என்று தங்கம் பாராட்டினார். 


 
வெற்றிலைப் பாக்கு வைத்து பத்திரிக்கை கொடுத்துவிட்டு செல்வமும் தங்கமும் கனகா குடும்பத்தினரை வரச்சொல்லி அழைத்தனர். "ஏம்மா... அலமேலு அண்ணிக்குத்தான் மேலுக்கு முடியலையே, கல்யாண வேலைக்கு ஒரு பத்து நாள் முன்னாடியே வந்திருந்து ஒத்தாசை பண்ணுமா” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் செல்வம். 

 

"அதுக்கென்ன வெண்டைக்காய் அறுவடை முடிந்ததும் வரேன்"என்று பெருமாளைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் அலமேலு.

 

அலமேலுவின்  குறிப்பை புரிந்து கொண்ட  செல்வம் "மாப்பிள்ளை, தங்கச்சியை அனுப்பி வைங்க"என்று உரிமையுடன் சொன்னார்.

 

"மச்சான் தாராளமாக  அழைச்சிட்டுப் போங்க, நானாவது நிம்மதியா இருப்பேன்" என்று கிண்டலாக சொன்னார் பெருமாள். 

 

"சரி, போற வழியில் இன்னும் சிலருக்கு பத்திரிகை வைக்கனும்.  நாள் குறைவா இருக்கு. நாங்க கிளம்பறோம்” என்று கிளம்பினார் செல்வம். அலமேலு சாப்பிட்டுப் போகச் சொல்லி கட்டாயப்படுத்தியும், வேலை இருக்கிறது என்று கிளம்பிவிட்டனர்.

 
 
வாசல் வரை சென்ற தங்கம், "வரும் போது சங்கவியையும் அழைச்சிட்டு வா." என்று  அலமேலுவிடம் அழுத்திச் சொன்னாள். அவர்கள்  கிளம்பியதும்  சம்மணம்  போட்டு  அமர்ந்து கொண்டு, லாந்தர் , பெரிய விளக்கு, சின்ன விளக்கு என்று எல்லா விளக்கின் சிமினிகளையும் கோலமாவு போட்டு துடைத்துக் கொண்டிருந்தாள் சங்கவி. கொல்லைபுறம் போய் கைகால்களை அலம்பி வந்த அலமேலு,  தன் அண்ணன் பெருமையை "டமாரம்" அடிக்க ஆரம்பித்தாள் அலமேலு. "அம்மா... நானும் கல்யாணத்துக்கு வரனுமா?" என்று தயக்கத்துடன் கேட்டாள் சங்கவி.


  
"ஆமாம். போய்த்தானே ஆகனும்.  கல்யாண வீட்ல கூட மாட நாம நிக்கவேணாமா? அதுவும் இல்லாம ’விளஞ்ச கதிரு’ அறுவடையாகனுமே’ என்று சங்கவிக்குப் புரிகிற மாதிரியும் புரியாத மாதிரியும் சொன்னாள் அலமேலு. திருமணம் நெருங்கிவிட்ட நிலையில், வாங்கி வைத்த சீர் செனத்தி சாமன்களுடன் தங்கம் வீட்டிற்கு சங்கவி சகிதம் அலமேலுவும் பெருமாளும் பயணப்பட்டனர்.  இந்தப் பயணம் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றுவிடப் போகிறது என்பதை அறியாமல். 

 

( சிறகுகள் அசையும் )