Skip to main content

கிம் ஜோங்-உன் 32 அடி பாய்ந்தார்! கொரியாவின் கதை #28

Published on 20/01/2019 | Edited on 29/01/2019

 

kk

 

வடகொரியாவின் அதிபர்களாக இருந்த தனது தாத்தா கிம் இல்-சுங், தந்தை கிம் ஜோங்-இல் ஆகியோரை விழுங்கி ஏப்பம் விட்டார் கிம் ஜோங்-உன். தனது தாத்தாவிடமும் தந்தையிடமும் இல்லாத தொழில்நுட்ப அறிவும், நவீனத்துவமும் கிம் ஜோங்-உன்னிடம் இருந்தது.

 


அவர்கள் போட்டு வைத்திருந்த அணு ஆயுத திட்டம், ஆயுத தயாரிப்பு ஆகியவற்றில் கூடுதலாக தீவிரம் காட்டினார் கிம் ஜோங்-உன். தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான போர்ப் பதற்றமே வடகொரியாவின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது. தென்கொரியவில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க ராணுவம்தான் இருநாடுகளையும் பிரித்து வைக்கும் சுவர் என்பதையும், அந்த ராணுவத்தை வெளியேற்றினால் இரண்டு நாடுகளும் சுமுகமான உறவுடன் வாழமுடியும் என்று கிம் ஜோங்-உன் நம்பினார்.

 


அமெரிக்காவின் தடைகளுக்கு எதிராக, விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் தனது அணு ஆயுத திட்டங்களில் தீவிரமாக ஈடுபாடு காட்டினார். இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை மிகவும் ஆத்திரமூட்டியது. வடகொரியா மீது தடைகளை அதிகப்படுத்தினார் ட்ரம்ப். இந்தத் தடைகளை ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்தன. இந்தத் தடைகள் வடகொரியா மக்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்று அவை எச்சரித்தன.

 

kk

 


ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை விடுத்தார் கிம். கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை, அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டுகளை தயாரித்து வெற்றிகரமாக சோதனைகளை நிறைவேற்றினார்.

 

அமெரிக்கா நினைத்தால் நொடியில் வடகொரியாவை காணாமல் செய்துவிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். 

 


வடகொரியாவை தாக்க அமெரிக்கா நினைத்தால் அந்த நாட்டின் தலைநகர் வாஷிங்டனை தரைமட்டமாக்கி விடுவேன் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங்-உன் பதிலுக்கு எச்சரித்தார். அதுமட்டுமின்றி, லிபியாவின் கதியே வடகொரியாவுக்கு ஏற்படும் என்று மிரட்டினார். அதாவது, லிபியா அதிபர் கடாஃபி கொல்லப்பட்டதைப் போல வடகொரியா அதிபரும் கொல்லப்படுவார் என்பதை மறைமுகமாக தெரிவித்தார்.

 

இதற்கு பதிலளித்த கிம் ஜோங் உன், ட்ரம் மனநிலை சரியில்லாதவர், வயதாகிவிட்டதால் மனச்சோர்வு அடைந்துவிட்டார். குரைக்கும் நாய் கடிக்காது என்றெல்லாம் பதிலளித்திருந்தார். இதையடுத்து உலக நாடுகள் மத்தியில் பதற்றம் உருவானது.

 

kk

 

கிம் ஜோங் ட்வீட் செய்திருந்ததற்கு பதிலளித்த ட்ரம்ப், கிம் ஜோங் ஒரு பைத்தியம் என்றும், குள்ளப் பன்றி என்றும் கிண்டல் செய்தார். அதுமட்டுமின்றி, தனது நாட்டு மக்களை பட்டினியால் சாகடிக்கப் போகிறார் என்றும் கூறியிருந்தார். இந்த வார்த்தைப் போருக்கு இடையே, தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தனது நாடு சார்பில் இரண்டு அணிகளை அனுப்பியிருந்தார் கிம். அத்துடன் தனது சகோதரி கிம் யோ-ஜோங், வடகொரியா நாடாளுமன்ற சபாநாயகர் கிம் யோங்-நாம் ஆகியோரை நல்லெண்ணக் குழுவினராக அனுப்பியிருந்தார். தென்கொரியா ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்து கிம் ஜோங்-உன் அனுப்பியிருந்த அழைப்பிதழை அவர்கள் கொடுத்தார்கள். அன்று இரவு தென்கொரியா ஜனாதிபதி கொடுத்த விருந்தில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுக்கு விருந்தினர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். ஆனால், சபாநாயகர் கிம் யோங்-நாமிடம் கைகுலுக்க மைக் மறுத்து வெளியேறினார். இதைமீறி, அடுத்தநாள் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டு கொரியாக்களின் தடகள வீரர்கள் இணைந்து அணிவகுத்து ஆச்சரியப்படுத்தினர்.

 


மனரீதியாக இரண்டு கொரியாக்களும் இணைய தயாராகி விட்டதையே இது காட்டியது. இத்தகைய நல்லெண்ணப் பயணத்துக்கு இடையே இருநாட்டு பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

 


2018 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி வடகொரியாவுக்கு தென்கொரியா சிறப்புத் தூதுக்குழு வந்தது. அப்போது, இரண்டு கொரியாக்களின் பிரதிநிதிகளும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதி இருநாட்டுக்கும் பொதுவான எல்லையில் உள்ள அமைதி இல்லத்தில் சந்தித்துப் பேச அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை வடகொரியா ஏற்றுக்கொண்டது. இந்தச் சந்திப்பு தொடர்பான அறிவிப்பு வெளிவந்த நிலையில், வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள், அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படும்வரை நீடிக்கும் என்று அமெரிக்க வெள்ளைமாளிகை அறிவித்தது.

 


இரண்டு கொரியாக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டிருப்பது தொடர்பாக ஆலோசனைகளைப் பெறுவதற்காக சீனா மற்றும் ரஷ்யா தலைவர்களை இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்தனர். கொரியாவை அணு ஆயுதமற்ற தீபகற்பமாக மாற்றுவதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் வழிகாட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 


வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணை சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றால், 5 நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடகொரியா அறிவித்தது.

 

1.கொரியா தீபகற்ப எல்லைக்குள் அமெரிக்காவோ, தென்கொரியாவோ அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது.
 

2.அமெரிக்கா-வடகொரியா கூட்டு ராணுவப் பயிற்சியில் அணு ஆயுதங்களை தயாரிப்பதையோ, செயல்படுத்துவதையோ தடுத்து நிறுத்த வேண்டும்.
 

3.வடகொரியா மீது சாதாரண மற்றும் அணு ஆயுத தாக்குதல் இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 

4.1953 ஆம் ஆண்டு இரண்டு கொரியாக்களுக்கும் இடையே கையெழுத்தான சண்டை நிறுத்த உடன்படிக்கையை அமைதி உடன்படிக்கையாக மாற்ற வேண்டும்.
 


5.வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அரசுப்பூர்வ உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.
 

வடகொரியாவின் இந்த நிபந்தனைகள் வெளியான நிலையில் 2018 ஏப்ரல் 27 ஆம் தேதி இருநாடுகளின் பொது எல்லையில் உள்ள அமைதி இல்லத்தில் பேச்சு நடைபெற்றது. இதில் இரண்டு கொரியாக்களுக்கு இடையிலான சண்டை நிறுத்த உடன்பாட்டை அமைதி உடன்பாடாக மாற்ற ஒப்புக்கொள்ளப்பட்டது. மே 10 தேதி அமெரிக்க பிரதிநிதிகளும் வடகொரியா பிரதிநிதிகளும் நடத்திய பேச்சில் வடகொரியாவின் பிடியில் இருந்த 3 அமெரிக்கர்களை விடுவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

 


கிம் ஜோங்கின் இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு பிறகும் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பதற்றம் குறையவில்லை. 3 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவுடன் அமைதி உடன்பாடு ஏற்படுத்த தவறினால் லிபியாவுக்கு ஏற்பட்ட கதிதான் வடகொரியாவுக்கு ஏற்படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் வாயை விட்டார். உடனே, வடகொரியா வெளியுறவு அமைச்சர் சோயெ சொன்-ஹுய் மைக் பென்ஸுக்கு பதிலடி கொடுத்தார். அவருடைய கூற்று அறிவிலித்தனமானது. முட்டாள்தனமானது. அணு ஆயுத போருக்கு வழிவகுக்கக் கூடியது என்று எச்சரித்தார். இதையடுத்து 2018 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பை ட்ரம்ப் ரத்து செய்தார்.

 


ட்ரம்ப்பின் முடிவு தென்கொரியா ஜனாதிபதி மூனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுதத் திட்டங்களை கைவிடுவதில் வடகொரியா உளப்பூர்வமாக விருப்பத்துடன் இருக்கிறது என்று கொரியா பேச்சுவார்த்தைக்குழு பொறுப்பாளர் அறிவித்தார்.

 

ட்ரம்ப் தனது சந்திப்பை ரத்துசெய்து அறிவித்த அன்று வடகொரியா, புங்யேரி என்ற இடத்தில் உள்ள தனது அணு ஆயுத சோதனைக்களத்தை சர்வதேச பத்திரிகையாளர் முன்னிலையில் தகர்த்தது. இந்த நிகழ்வையடுத்து, வடகொரியா தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு துணைத்தலவரான கிம் யோங்-சோல் அமெரிக்கா வந்து வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவை சந்தித்தார். மறுநாளும் அவர்களுடைய பேச்சு நீடித்தது. முடிவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மைக் தெரிவித்தார்.

 

அடுத்தடுத்த திருப்பங்களுக்குப் பிறகு, ஜூன் 1 ஆம் தேதி ட்ரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். வடகொரியா அதிபருடன் ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். உடனே சந்திப்புக்கான ஏற்பாடுகள் வேகம்பிடித்தன.

 


ஜூன் 3 ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் அரசு பரபரப்பாகியது. இரண்டு முக்கியமான தலைவர்களின் சந்திப்பை நடத்துவதை விருப்பமுடன் ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல, அவர்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முனைப்பாக செய்தது. சிங்கப்பூரில் ட்ரம்ப்பும், கிம் ஜோங்-உன்னும் தங்குகிற ஹோட்டல்கள், அவர்கள் இருவரும் பயணம் செய்யும் விமானங்களுக்கான ஓடு பாதைகளை ஒதுக்கி, பிற விமானங்களை கட்டுப்படுத்துவது என்று சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை மிக நுணுக்கமாக ஏற்பாடு செய்திருந்தது.

 


கிம் ஜோங்-உன் வடகொரியாவிலிருந்து மிகப்பெரிய குழுவை அழைத்து வந்திருந்தார். அவருக்குரிய உணவைச் சமைப்பதற்குக்கூட வடகொரியாவிலிருந்தே சமையல்காரர்கள் வந்திருந்தார்கள். கடைசிவரை அவருடைய விமானம் பயணிக்கும் வழி கூறப்படவில்லை. கடைசியில் அவருடைய விமானம் பெய்ஜிங் போய் சிங்கப்பூர் வந்தடைந்தது.

 

ஜூன் 12 ஆம் தேதி உலக வரலாற்றில் மிக முக்கியமான அந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது. 35 வயது இளைஞனான கிம் ஜோங்-உன் உலக நாட்டாமை என்று கருதப்படும் அமெரிக்காவின் அதிபரை பேச்சுவார்த்தை டேபிளுக்கு இழுந்து வந்தேவிட்டார்.

 

இந்தச் சந்திப்பால் வடகொரியா தன் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு, தென்கொரியா மட்டுமின்றி உலகின் மற்ற பொருளாதார நாடுகளுடன் இயல்பான உறவுகொள்ள வழி ஏற்படும் என்று நம்பிக்கை வெளியிட்டது. அமெரிக்காவோ, உலகின் பல நாடுகளின் பாதுகாப்புக்காக தான் செலவழிக்கும் நிதியை மிச்சம்பிடிக்கும் நடவடிக்கையில் இது முதலாவதாக இருக்கும் என்று அறிவித்தது. இனிமேல் தென்கொரியாவுடன் அமெரிக்கா ராணுவம் கூட்டுப் பயிற்சி நடத்தாது என்றும், விரைவில் அமெரிக்க ராணுவம் திரும்பப்பெறப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

 

kk

 


ஜூன் 12 ஆம் தேதி நடைபெற்ற இரு தலைவர்களின் சந்திப்பு, 2018 டிசம்பர் இறுதிவரை வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க உதவவில்லை. ஆனால், அந்தத் தடைகள் நீக்கப்படுவதோடு, ஜெர்மனியின் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு ஒரே ஜெர்மனி ஆனதைப்போல, வியட்னாம் இணைந்ததைப் போல கொரியா ஒரே நாடாக இணைகிறதோ இல்லையோ, ஓரினத்தைச் சேர்ந்த மக்களாக உறவுகொண்டாடும் நாளை கொரியர்கள் மட்டுமல்ல, உலகின் அமைதி வேண்டும் அனைத்து நாடுகளும் விரும்புகின்றன.

 

முந்தைய பகுதி:

.உலகின் மூன்றாவது பெரிய ராணுவம்! கொரியாவின் கதை #27

 

 

 

 

Next Story

கிம் ஜாங் உன் போட்ட திடீர் உத்தரவு; மீண்டும் பரபரப்பில் வடகொரியா

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kim Jong Un's sudden order; North Korea is in a frenzy again

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கி இருக்கும் நாடு வடகொரியா. அதேபோல் சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். அண்மையில் ஏவுகணைகளை வீசி கொரிய தீபகற்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள வடகொரியாவில் வெளியுலகம் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் வெளி உலகத்திற்கு கசிந்து விடக்கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் வடகொரியா அண்டை நாடுகளான ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி விட்டு பயமுறுத்தி வருகிறது.

இந்நிலையில் போருக்கு எப்போதும் தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்திற்கு கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கிம் ஜாங் உன்-2' என்ற அரசியல் மற்றும் ராணுவத்திற்கான பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து கிம் ஜாங் உன், நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் அரசியல் சூழ்நிலை, நிலையாக இல்லாதது குறித்து பேசியதோடு, இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எப்போதும் இல்லாத அளவிற்கு வடகொரியா ராணுவத்தினர் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 'கிம் ஜாங் உன்-2' பல்கலைக்கழகத்தில் அவர் ஆய்வு செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.