Skip to main content

"தமிழர்கள் கடைசிவரை கூலித்தொழிலாளியாக இருந்ததற்கு இதுதான் காரணம்..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! #8

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவி தமிழர்கள் பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாராவிக்கு மனிதநேயமிக்க முகம் ஒன்று உள்ளது. அங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதால் யார்யார் வீட்டில் சமையல் நடக்கிறது; அடுப்பு எரிகிறது என்பதெல்லாம் தெரிந்துவிடும். தொடர்ந்து இரு நாட்கள் ஒரு வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து காரணம் கேட்பார்கள். கையில் பணமில்லை என்பதற்காக ஒருவர் சமைக்காமல் பட்டினியாகக் கிடக்கிறார் என்றால் மற்றவர்கள் கோபப்படுவார்கள். 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. வா இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடலாம்' என்று கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இந்தப் பழக்கம் அங்கு வசித்த எல்லா மொழி பேசும் மக்களிடமும் இருந்தது. தாராவி என்ற பெயர் எதற்காக வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து நிறையத் தேடிப்பார்த்தோம். எந்த இடத்திலும் அதற்கான சரியான பதில் இல்லை. மும்பை என்ற பெயர் வந்ததற்குக் காரணம் அங்கு மும்பாதேவி கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. அது மீனவ மக்களுக்கான கோவில். மும்பா என்பது ஆங்கிலேயர்களால் பம்பா என உச்சரிக்கப்பட்டு பின்பு பம்பாய் என்றானதாகக் கூறுவார்கள். பின்பு, அது மும்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

விஜயகாந்த், கமல், ரஜினி என தமிழ்நாட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த அனைவருக்கும் தாராவியில் ரசிகர்மன்றம் இருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். பல ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் இந்த நடிகர் படத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை அங்கு இல்லை. அனைவருமே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். சாதி, மதம் கடந்து அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் பிற இனத்தவர்கள் நம்மை இந்த இடத்திலிருந்து விரட்டிவிடுவார்களோ என்ற எண்ணம்தான். மும்பையில் ஆளுநராகத் தமிழர் ஒருவர் இருந்தபோது தாராவியில் தமிழர்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து அவரிடம் முறையிட்டதற்கு, 'பிழைக்க வந்த இடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதானே' என்றார். இது மாதிரியான விஷயங்கள் எல்லாம்தான் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. 

 

மராட்டியப் பெண்களும் தமிழ்ப்பெண்கள் போலவேதான் இருப்பார்கள். அவர்கள் நம் பெண்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. மராட்டியக் கிராமப்புறங்களுக்குள் சென்றால் நம்முடைய அம்மா, அத்தையைப் பார்ப்பதுபோல இருக்கும். அவர்களுடைய விருந்தோம்பல் பண்பும் சிறப்பாக இருக்கும். ஆரம்பக்கட்டத்தில், தாராவி மக்கள் என்றால் தவறானவர்கள் என்ற எண்ணம் அங்கிருந்தவர்கள் மத்தியில் இருந்தது. நான் அங்கிருந்த காலகட்டத்திலேயே அந்த எண்ணத்தை உடைக்க இலக்கியவாதிகள், இளைஞர்கள் எனப் பலர் வேலை செய்தனர். உண்மையில் தாராவிக்காரர்கள் தவறானவர்கள் அல்ல; கொஞ்சம் கோபக்காரர்கள். ஒருமுறை ஓனர் திட்டினார் என்பதற்காக நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, நீங்களே ஒட்டிட்டுப்போங்கடா என நம்முடைய ஆட்கள் எட்டு பேர் வேலையை விட்டுவிட்டு வந்தார்கள். தாராவி தமிழர்களை வேலைக்கு வைத்தால் இந்த மாதிரியான முரட்டுத்தனமான செயல்களைச் செய்வார்கள் என்ற பயம் அங்கிருந்த முதலாளிகளுக்கு இருந்தாலும் இதுவரை எந்த முதலாளியும் தாராவி தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறியதில்லை. 

 

அங்கிருந்த சாதாரண மக்களுக்கு மராட்டிய அரசோ காவல்துறையோ ஒருபோதும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தாராவிக்குள் ஒளிந்திருக்கிறார் என்றால் போலீஸ் வருவார்கள். மற்றபடி வேறெந்த காரணத்திற்காகவும் போலீஸ் உள்ளே வரமாட்டார்கள். இன்றைக்கு வட இந்தியர்களைப் பார்த்து நாம் கூறுகிறோமே அதுபோல இந்த தமிழனுங்க வந்துதான் நமக்கெல்லாம் வேலை கிடைக்காம போயிருச்சு என்று சில மராட்டியர்கள் பேசுவார்கள். இது மாதிரியான பேச்சு சாதாரண மக்கள் மத்தியில் இருந்தாலும் அரசியல்வாதிகளிடமோ அதிகாரிகளிடமோ இருக்காது. கம்யூனிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து முன்னரே கைது செய்து போலீஸ் நிலையத்தில் எங்களை இருக்க வைப்பார்கள். மறுநாள் வெளியே விட்டுவிடுவார்கள். எந்தவொரு போலீஸ் அதிகாரியும் நீங்கள் எதுக்கு போராட்டம் செய்றீங்க என்றெல்லாம் எங்களைப் பார்த்துக் கேட்டதில்லை. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை மட்டுமே அவர்கள் செய்வார்கள். 

 

குஜராத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் வருகிறான் என்றால் அவன் நண்பர்கள் அனைவரும் நகைக்கடை வைப்பார்கள். இங்கு தமிழ்நாட்டில் இருந்து நாடார் ஒருவர் போகிறார் என்றால் அங்கு சென்று மளிகைக்கடைதான் வைப்பார். தாராவி தமிழர்களோ மாடுங்கா தமிழர்களோ தொழில்ரீதியாக அங்கு செல்லவில்லை. மாதச்சம்பளத்தை நோக்கித்தான் ஆரம்பத்திலிருந்தே சென்றுகொண்டிருந்தார். குஜராத்தியர்கள், பார்சியினரெல்லாம் தொழில் செய்யவேண்டும் என்ற முடிவோடுதான் அங்கு வந்தார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்களிடம் கூலிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. தாராவிக்கு சென்ற தமிழர்களின் அதிகபட்ச ஆசை டாக்சி, ஆட்டோ வாங்கவேண்டும் என்பதாகவே இருந்தது. இதுதான் தமிழர்கள் அங்கு பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது.