எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற முத்திரை தமிழர்கள் மீது விழுந்தது எப்படி என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரதா பாய் தலைமையில் தாராவியில் ஊர்வலம் சென்றது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அப்படிச் செல்லும்போது வழிநெடுக இருந்த கடைகளையும் மாடுங்கா ஸ்டேஷனையும் அடித்து நொறுக்கியது குறித்தும் கூறியிருந்தேன். ஆசாத் மைதானத்திற்குச் செல்வதற்காக வரதா பாய் தனி ரயிலையே புக்கிங் செய்திருந்தார். அந்த ரயிலில் ஏறுவதற்காக மாடுங்கா ஸ்டேஷனில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அங்கு திரண்டிருந்த ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்து முதலில் வந்த சில ரயில்கள் நிற்காமல் சென்றுவிட்டன. சிறிது நேரம் கழித்து வரதா பாய் புக் செய்த ரயில் வந்தது. அதில் நம் ஆட்கள் ஏறிக்கொண்டார்கள். ஆயிரக்கணக்கானோர் ரயிலில் ஏறாமல் வெளியே நின்றபோதிலும், ரயிலுக்குள் கடுமையான நெரிசல். இவ்வளவு ஆட்களை ஏற்றிக்கொண்டு ரயில் சென்றுகொண்டிருக்கையில், வழியிலேயே ரயிலை நிறுத்திவிடுகின்றனர். வழக்கமாக அந்த இடத்தில் ரயில் நிறுத்தம் கிடையாது. என்னவென்று எட்டிப்பார்த்தால், 500 போலீஸ் அதிகாரிகள் கையில் லத்தியுடன் நின்றுகொண்டிருந்தனர். வழியில் இருந்த கடைகளை உடைத்த குற்றத்திற்காக அங்கிருந்தவர்களை நோக்கி லத்தி சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். ரயிலில் இருந்த ஆட்களை இழுத்துபோட்டு போலீசார் அடிக்க ஆரம்பிக்க, அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். நல்லவேளை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று நினைத்து நாங்கள் ஆறுதல்பட்டுக்கொண்டோம். 10க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்விற்குப் பிறகு, வரதா பாய் மீது தாராவி தமிழர்களுக்குப் பெரிய அளவில் வெறுப்பு வந்துவிட்டது. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைவராக வேண்டும் என வரதா பாய் நினைத்தார். அது கடைசிவரை நடக்காமல் போனதற்கு இந்தச் சம்பவம்தான் முக்கிய காரணம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், தாராவி தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று அங்கிருந்த பிற மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.
தாராவி தமிழர்கள் பெயரைச் சொல்லி பலபேர் தலைவராக நினைத்தார்கள். தமிழர் பேரவை ஆம்புலன்ஸ் என்று அங்கு ஓர் ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுக்கொண்டிருந்தது. அது, அங்கு மிகவும் பிரபலமான ஆம்புலன்ஸ். ஒருமுறை குஜராத்தில் இருந்து பேரல் பேரலாக அதில் சாராயம் கடத்தி போலீஸில் மாட்டிக்கொண்டார்கள். அத்தோடு அந்த ஆம்புலன்ஸுக்கு இருந்த நல்ல பெயரும் அடிபட்டுப்போனது. அதுபோக நிறைய சிறிய தலைவர்கள் இருந்தனர். அதில், மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆரோக்கியமான சிந்தனை உடையவர்கள் மட்டுமே மக்களின் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர். மராட்டிய மாநில தமிழ் கவிஞர் மன்றம், மராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம், திராவிடம், கம்யூனிசம் சார்ந்த இலக்கிய மன்றம் என நிறைய இலக்கிய அமைப்புகள் இருந்தன. ஆனால், உழைக்கும் மக்கள் இதில் பெருமளவில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை.
வாரம் முழுக்க உழைக்கும் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும்தான் விடுமுறை இருக்கும். அன்று வீட்டில் கறி சமைத்து ரம்மி விளையாடி நன்றாக ஓய்வவெடுக்கவே விரும்பினார்கள். அதுபோக மெண்டிகோட் என ஒரு சீட்டு விளையாட்டு அங்கு பிரபலமாக இருந்தது. அதில் விளையாடியும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் மனைவி மக்களுடன் இருக்க வேண்டும் என்பதே தாராவி தமிழர்களின் எண்ணமாக இருந்தது. தமிழ்நாட்டில்தான் நாம் பெண் விடுதலை அது இது என்று பேசிக்கொண்டிருக்கிறோம். தாராவியில் இருந்த ஆண்கள் எல்லாவிதமான வீட்டு வேலைகளிலும் பெண்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.
ஒருமுறை இலக்கிய கூட்டத்திற்கு வந்த வரதா பாய், ‘ஏன் பள்ளிகளில் வாடகை கொடுத்து இது மாதிரியான கூட்டங்களை நடத்துகிறீர்கள்... தனியாக கட்டடம் கட்டி அங்கு இந்தக் கூட்டங்களை நடத்தலாமே’ என்றார். ‘ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் செய்கிறேன்’ என்றும் கூறினார். ஆனால், அந்த இலக்கிய அமைப்பினர் அதை மறுத்துவிட்டனர். இன்று அவரிடம் உதவி வாங்கிவிட்டால் அவர் யாரையாவது கூறினால் அவர்களைப் பேசவைக்கவேண்டும்... அவரிடம் கைகட்டி நிற்க வேண்டும்... இதுவெல்லாம் தேவையா என நினைத்து முன்கூட்டியே அதை மறுத்துவிட்டனர். அங்கிருந்தவர்கள் இது மாதிரியான விஷயங்களில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.