"ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள்தான் தொழிலில் எனக்குப் போட்டியாளர்கள். அவர்களது வழக்கமான சமையலைவிட ஒருபடி சிறந்த சமையலை என்னுடைய நிறுவனத் தயாரிப்பு பொருட்கள் உறுதிசெய்தால் நான் வென்றுவிட்டதாக அர்த்தம்" என்கிறார் ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக். ஆச்சி மசாலா... கடந்த 20 ஆண்டுகளாக தமிழர்களின் சமையலறையில் கோலோச்சிவரும் ஒரு நிறுவனம். ஆச்சி குழம்பு மிளகாய்த்தூள் என்ற ஒரு தயாரிப்பு பொருளோடு நிறுவனத்தைத் தொடங்கி தன்னுடைய அசாத்தியமான உழைப்பாலும் தொழில்முனைவு நுட்பத்தினாலும் 250க்கும் மேற்பட்ட நிறுவனத் தயாரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆச்சி சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தியிருக்கிறார், பத்மசிங் ஐசக். இது ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. ஆரம்பக்கட்ட நிராகரிப்பு, பொருளாதார நெருக்கடி என வழக்கமான தொழில்முனைவு நிறுவனம் எதிர்கொள்ளும் சிக்கல்களை எதிர்கொண்டு, தனக்கென வடிவமைத்துக்கொண்ட பாணியினாலும் யுக்தியினாலும் அவற்றையெல்லாம் கடந்து, 60க்கும் மேற்பட்ட நாடுகளின் சமையல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இன்று உருமாறி நிற்கிறது ஆச்சி நிறுவனம்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் எனும் ஊரில் எளிமையான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பத்மசிங் ஐசக். குடும்பத்தில் மொத்தம் 6 குழந்தைகள். பத்மசிங் ஐசக்கிற்கு இளம்வயதாக இருக்கும்போதே அவரது தந்தை எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். பள்ளிக்கல்வியை சொந்த ஊரிலேயே நிறைவு செய்த பத்மசிங் ஐசக், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் படிக்கிறார். மேற்படிப்பு படிப்பதற்கான வசதி இல்லாத காரணத்தினால் கோத்ரேஜ் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிக்குச் சேர்கிறார். அங்கு, படிப்படியான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுடன் 10 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். ஒருகட்டத்தில், இந்த நிறுவனத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல தனக்கு வழியில்லை என்பது பத்மசிங் ஐசக்கிற்குப் புரியவருகிறது. அந்த நொடியே வேலையைவிட முடிவெடுத்த பத்மசிங் ஐசக், ஆச்சி என்ற நிறுவனத்தைத் தொடங்கி சொந்தத்தொழிலில் கால் பதித்தார்.
"எனக்கு இளம்வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்ட காரணத்தால் அம்மாதான் தனியாளாக நின்று எங்களை வளர்த்து ஆளாக்கினார். அம்மாவின் சமையல் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவர் சமையல் செய்வதை அருகிலிருந்தே பார்த்துக்கொண்டிருப்பேன். அம்மா சமைப்பதற்கு முன்பு மசால் பொருட்களை அம்மியில் வைத்து அரைப்பார். அடிப்படையிலேயே என் அம்மா மிகவும் சிவப்பாக இருப்பார். அவர் அம்மியில் அரைத்து முடித்த பிறகு அவர் உள்ளங்கையைப் பார்த்தால் ரத்த நிறத்தில் செஞ்சிவப்பாக இருக்கும். இது சிறு வயதிலேயே என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின்னாட்களில் பெண்களின் சமையலை எளிமைப்படுத்தும் விதமான ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்".
நம் அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் சொந்தமாகத் தொழில்தொடங்க வேண்டும் என்று யோசித்திருப்போம். ஏதேனும் ஒரு தொழிலதிபரின் வசதியான வாழ்க்கை முறையைப் பார்க்கும்போது அந்த யோசனை ஆசையாக வெளிப்பட்டிருக்கும்; நம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான மெல்லிய கோட்டளவிலான வேறுபாட்டின் உண்மை முகத்தைக் காண நேரும்போது அந்த யோசனை எண்ணமாக வெளிப்பட்டிருக்கும். ஆனால், அந்த ஆசைக்கோ, எண்ணத்திற்கோ செயல்வடிவம் கொடுப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. பெயர் சூட்டல், நிதி மூலதனத்திரட்டல், நிர்வாகக் கட்டமைப்பு, குறுகிய மற்றும் தொலைதூர இலக்குத் திட்டமிடல், அதனை நோக்கி நகருவதற்கான செயல்முறை எனக் கடப்பதற்குச் சவால்கள் நிறைந்த உலகம், தொழில்முனைவு உலகம். பல தொழில்முனைவு கனவுகளின் கருக்கள், பெயர் சூட்டலில் செய்த தவறினால் ஆரம்பக்கட்டத்திலேயே கலைந்துவிடுகின்றன. பெயர் சூட்டல் என்ற ஆரம்பக்கட்டச் சவாலை நுட்பமாகக் கடந்த தொழில்முனைவு கனவுகளின் கருக்களே, பின்னாட்களில் உலக இயல்பினாலும், மக்களின் வழக்கமான நடைமுறையினாலும் வார்த்தெடுக்கப்பட்டு, மிகப்பெரும் சாம்ராஜ்யமாக வடிவம் கொள்கின்றன.
ஆச்சி என்ற பெயரைத் தன்னுடைய நிறுவனத்திற்கு தேர்ந்தெடுத்தது குறித்து ஒரு பேட்டியில் கூறிய பத்மசிங் ஐசக், "எங்கள் பகுதியில் அம்மாவின் அம்மாவை ஆச்சி என்றுதான் அழைப்போம். ஆச்சி என்ற சொல் ஆட்சி என்பதிலிருந்துதான் வந்தது என்பார்கள். சமையல் முதல் அனைத்திலும் வீட்டை ஆட்சி செய்யக்கூடியவர் என்ற பொருளில்தான் அவர்களை ஆச்சி என்றழைக்கிறோம். அதனால்தான் எங்கள் நிறுவனத்திற்கு ஆச்சி எனப் பெயர் சூட்டினோம். அதைத் தவிர்த்து சாப்டாச்சி, வந்தாச்சி, போயாச்சி உட்பட ஆச்சி என்று முடியும் பல வார்த்தைகளை நாம் அதிகம் பயன்படுத்துவோம். ஆகையால், மக்களை எளிதில் சென்றைடையவும், மக்கள் அடிக்கடி உச்சரிக்கும்படியான பெயராக இருக்கவேண்டுமெனவும் முடிவெடுத்து ஆச்சி எனப் பெயர் சூட்டினோம்" என்றார். இதுதான் மேலே கூறிய உலக இயல்பினாலும், மக்களின் வழக்கமான நடைமுறையினாலும் வார்த்தெடுக்கப்படுதல் ஆகும்.
பெரிய அளவில் முதலீடு இல்லாமல் புதிய தொழில் தொடங்குபவர்கள், வாய்வழி விளம்பரம் மூலமாகவே நிறைய மக்களைச் சென்றடைய வேண்டுமென நினைப்பார்கள். ஆங்கிலத்தில் இதனை WORD OF MOUTH என்பார்கள். அதாவது, ஒரு பொருளின் சிறப்புத்தன்மையைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் கூறுவது. ஆனால், பத்மசிங் ஐசக்கோ தன்னுடைய நிறுவனத்தின் பெயர் சூட்டலில் எடுத்த சமயோஜித புத்திசாலித்தனமான முடிவால் ஆச்சி நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்தாதவர்களும் ஆச்சி நிறுவனத்திற்காகத் தன்னையே அறியாமல் வாய்வழி விளம்பரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நிராகரிப்புகளும் தோல்விகளும் பயணப்பாதையில் மாற்றம் செய்வதற்கான திசைகாட்டிகளேயொழிய தடைக்கற்கள் அல்ல. பத்மசிங் ஐசக்கிடம் இருந்து இந்தப்படிப்பினையையும் நாம் கற்றுக்கொள்ளலாம். அவர் சந்தித்த நிராகரிப்பு குறித்து ஒருமுறை அவர் கூறுகையில், ஆரம்பத்தில் என்னுடைய தயாரிப்பு பொருட்களை எந்தக் கடைக்காரரும் வாங்கவில்லை. "அண்ணாச்சி... குறைவான அளவில் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறியும் அவர்கள் வாங்கத் தயாராக இல்லை. உடனே, கோவில் திருவிழாக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைபோட்டு எங்கள் தயாரிப்பு பொருட்கள் வாங்கினால் டம்ளர் இலவசம் என விளம்பரம் செய்து விற்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஒர் ஆண்டிற்கு இந்த வியாபார யுக்தியைத்தான் பின்பற்றினேன். எங்கள் தயாரிப்பின் சுவை பிடித்துப்போன மக்கள், அதன்பிறகு கடைகளில் எங்கள் பொருட்களைத் தேட ஆரம்பித்தனர்" என்றார். சம யோஜித முடிவுகள், வித்தியாசமான நகர்வுகள் மற்றும் புதுமையான செயல்கள் வெற்றி வேரினை எந்த அளவிற்கு ஆழமாகப் பதிக்கும் என்பதற்கு பத்மசிங் ஐசக்கின் வாழ்க்கை ஆகச்சிறந்த உதாரணம்.
கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...
"என்னை விரக்தியிலிருந்து மீட்ட அந்த வாசகம்..." ராகுல் டிராவிட்டின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #36