Skip to main content

"இது நல்லதான்னு தெரியல" - மூன்றாவது டெஸ்ட் குறித்து யுவராஜ்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

YUVRAJ SINGH

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கடந்த 24 ஆம் தேதி தொடங்கி, இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்திய வீரர்கள் ஓரளவிற்கு சமாளித்தாலும், அஸ்வின் - அக்ஸர் படேல் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுருண்டது. இப்போட்டியில், அக்ஸர் படேல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை அள்ளினார். அஸ்வின் தனது 400வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். இஷாந்த் சர்மாவுக்கு இது 100வது டெஸ்ட் போட்டியாகும்.

 

இந்தநிலையில் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பிட்ச் குறித்து, இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டி நிறைவடைந்தது குறித்து, கிரிக்கெட் ஆர்வலர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வீரர் யுவராஜ் சிங், ‘இரண்டு நாட்களில் போட்டி நிறைவடைந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதா எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "(மூன்றாவது டெஸ்ட்) இரண்டே நாட்களில் முடிவடைந்துவிட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு நல்லதா எனத் தெரியவில்லை. அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங், இந்த மாதிரியான விக்கெட்டுகளில் பந்து வீசியிருந்தால் 1,800 விக்கெட்டுகளில் இருந்திருப்பார்கள்? எனினும் வாழ்த்துக்கள் இந்தியா. அக்சர் படேல் என்ன ஒரு பந்துவீச்சு! வாழ்த்துகள் அஸ்வின், இஷாந்த்" எனத் தெரிவித்துள்ளார்.