இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, சென்னையில் நடைபெற்றது. கரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில்தான் ரசிகர்களுக்கு அனுமதி (50 சதவீதம்) வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் நாளிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டியில் அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்ததோடு, இரண்டு இன்னிங்க்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டிக்குப் பிறகு பேசிய இந்தியக் கேப்டன் விராட் கோலி, போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களைப் புகழ்ந்து தள்ளினார்.
இதுதொடர்பாக அவர், "முதல் ஆட்டத்தில், பார்வையாளர்கள் இல்லாமல் சொந்த மண்ணில் விளையாடுவது சற்று வித்தியாசமாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் முதல் இரண்டு நாட்கள், என்னையும் சேர்த்து, சோர்வாக இருந்தோம். யாரும் எனர்ஜியோடு இல்லை. முதல் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இருந்து நாங்கள் எங்கள் ஆட்டத்தை விளையாடினோம். உடல்மொழியிலும், நாங்கள் களத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் சரியாக இருந்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில், ரசிகர் கூட்டம் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது என நான் நினைக்கிறேன். ரசிகர்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கும்போது, நீங்கள் ஒரு அணியாக அதிகமாக உந்தப்படுவீர்கள். இந்த ஆட்டம் நாங்கள் வெளிப்படுத்தும் மன உறுதிக்குச் சான்றாகும். நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். அதில் ரசிகர்களின் ஆதரவுக்குப் பெரும் பங்குண்டு" எனக் கூறினார்.
மேலும் விராட் கோலி, “சென்னை ரசிகர்கள் புத்திசாலிகள். அவர்கள் எங்கள் கிரிக்கெட்டை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். பந்து வீச்சாளருக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும் 15 - 20 நிமிட காலகட்டத்தில், அனைவரையும் அதில் ஈடுபடுத்துவது எனது பொறுப்பு. இந்த வெப்பத்தில் நான் பந்துவீச ஓடினால், என்னை ஊக்குவிக்க மக்கள் தேவை. இது எங்களுக்கு சரியான ஆட்டமாக அமைந்தது” எனவும் தெரிவித்தார்.