இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி நேற்று (12.03.2021) நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி மோசமான பேட்டிங்கால் தோல்வியைத் தழுவியது. இந்திய கேப்டன் விராட் கோலி டக்-அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இந்தநிலையில் விராட் கோலி டக்அவுட் ஆனதை வைத்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உத்தரகாண்ட் போலீஸார் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த ட்வீட்டில் அவர்கள், "தலைக்கவசம் மட்டும் போதுமானதல்ல. முழு விழிப்புணர்வுடன் வாகனம் ஓட்டுவது அவசியம். இல்லையென்றால் விராட் கோலியை போல் ஜீரோவில் அவுட்டாகி விடுவீர்கள்" எனத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் ட்ராஃபி இறுதிப்போட்டியில் பும்ரா வீசிய நோ-பாலை வைத்து, சாலை விதிமுறைகளை மதிக்குமாறு ஜெய்ப்பூர் போலீஸார் ட்வீட் செய்திருந்தது நினைவுகூறத்தக்கது. அந்த நோ-பாலால் இந்தியா அணி சாம்பியன்ஸ் ட்ராஃபியை இழந்ததாக இன்றுவரை இந்திய ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.