இந்தியா - நியூசிலாந்து இடையேயேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து, நிதானமாக விளையாட தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில்லும், புஜாராவும் நிலைத்து நின்று ஆடினர்.
நன்றாக விளையாடிய கில், அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 26 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்புவதுபோல் இருந்தாலும் முதல் டெஸ்டில் விளையாடும் ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்தநிலையில், இந்திய அணி 258 ரன்கள் எடுத்திருந்தபோது முதலாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இரண்டாவது நாள் ஆட்டம் இன்று (26.11.2021) தொடங்கியது. இதில் அரைசதம் அடித்திருந்த ஜடேஜா விரைவிலேயே ஆட்டமிழந்தார். இருப்பினும் சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்து ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் இப்போட்டியில் சதமடித்ததன் மூலம், அறிமுக டெஸ்டில் சதமடித்த மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது இந்திய அணி 300 ரன்களைக் கடந்து விளையாடிவருகிறது.