இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமான ஐம்பதாவதுவது ஆண்டு இது. சச்சினுக்குப் பிறகு இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாய் இன்று விராட் கோலி இருப்பதுபோல், சச்சினுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்தவர் கவாஸ்கர். சச்சின் டெண்டுல்கருக்கு ரோல் மாடலும் இவரே.
கவாஸ்கர் கிரிக்கெட்டிற்கு வந்த 50வது ஆண்டையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் சச்சின், அவரால் கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாகவும், இன்றும் கவாஸ்கர்தான் தனது ரோல் மாடலாக தொடருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் அவர் கிரிக்கெட் உலகில் புயலாக நுழைந்தார். அவர் தனது முதல் தொடரில் 774 ரன்கள் எடுத்தார். அப்போது வளர்ந்து வந்த எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹீரோ கிடைத்தார். மேற்கிந்தியத் தீவுகளிலும் பின்னர் இங்கிலாந்திலும் இந்தியா தொடரை வென்றது. திடீரென்று இந்தியாவில் (கிரிக்கெட்) விளையாட்டுக்கு ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது. ஒரு சிறுவனாக, நான் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள ஒருவர் இருக்கிறார் என தெரிந்துகொண்டதோடு, அவரை போல் இருக்க முயற்சி செய்தேன். அது எப்போதும் மாறவே இல்லை. இப்போதும் அவர்தான் எனது ஹீரோ. சர்வதேச கிரிக்கெட்டில் உங்களின் 50வது ஆண்டிற்கு வாழ்த்துக்கள் கவாஸ்கர்" எனத் தெரிவித்துள்ளார்.
1971 அணியில் இடம்பெற்றவர்களுக்கும், இது சர்வதேச கிரிக்கெட்டில் 50வது ஆண்டு ஆகும். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின், 1971 அணியிலிருந்த அனைவருக்கும் 50வது ஆண்டிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் எங்களை பெருமைப்படுத்தியதோடு, வெளிச்சத்தையும் காட்டினீர்கள்" எனக் கூறியுள்ளார்.