Skip to main content

ரஷீத்கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்! - வியந்து பாராட்டிய சேவாக்

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
Rashid

 

 

 

இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத்கானின் கிரிக்கெட் திறமையை உலகமே வியந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் என்ற பின்தங்கிய நாட்டில் இருந்து வந்து, உலகையே தன் பவுலிங்கால் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.  இந்த முறை பேட்டிங்கிலும் தான் ஒரு கில்லி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். 
 

துபாயில் நடைபெற்று வரும் டி10 லீக் போட்டியில், மராத்தா அரேபியன்ஸ் மற்றும் பக்தூன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியின் சார்பில் பேட்டிங் செய்த ரஷீத்கான், பக்தூன்ஸ் அணியின் இர்ஃபான் வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டார். ரஷீத்தின் பேட்டிலிருந்து தெறித்துப் பறந்த பந்து, மைதானத்தை விட்டு வெளியேறியது. இதைக் கண்ட சகவீரர்கள் அசந்துபோக, இந்திய கிரிக்கெட் வீரரும் மராத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனுமான விரேந்தர் சேவாக் எழுந்துநின்று பாராட்டினார். 
 

பலரும் இதைப் புகழ்ந்து பாராட்ட, ரஷீத்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டதோடு, அதைக் கண்டுபிடித்த மகேந்திர சிங் தோனியின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். என்னதான் இருந்தாலும் இந்தப் போட்டியில் பக்தூன்ஸ் அணியே வெற்றிபெற்றது. தற்போதைய நிலையில் புள்ளிப்பட்டியலில் அந்த அணியே முதலிடத்தில் உள்ளது.  

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.