உலகம் முழுவதும் பிரபலமான ஐபிஎல் தொடர், தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் போட்டிகள் தேவையா, இல்லையா என விவாதங்கள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமின்றி சில வெளிநாட்டு வீரர்கள் கரோனா சூழ்நிலையை காரணம் கட்டி ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளனர். இருப்பினும் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ராஜஸ்தான் அணி, வெளிநாட்டு வீரர்கள் இன்றி தவித்து வருகிறது. தற்போது அந்த அணியில் மொத்தம் நான்கு வெளிநாட்டு வீரர்களே உள்ளனர். அந்த அணியின் முக்கிய வெளிநாட்டு வீரர்களான ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினர்.
மேலும் ஆஸ்திரேலியா வீரர் ஆண்ட்ரூ டை, இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினர். இந்தநிலையில் ராஜஸ்தான் அணி, வீரர்களை கடன் கேட்டு மற்ற அணிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஐபிஎல் தொடரை பொறுத்தவரை, இரண்டு போட்டிகளுக்கு குறைவாக விளையாடியவர்களை மற்ற அணிகள் கடனாக வாங்கிக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் தங்களது சொந்த அணிக்கு எதிராக விளையாட முடியாது. இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில், இந்த நடைமுறை திங்கட்கிழமையிலிருந்து தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.