Skip to main content

இந்திய அணிக்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராகும் ராகுல் ட்ராவிட்?

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

RAHUL DRAVID

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், இம்மாதம் தொடங்கவுள்ள இருபது ஓவர் உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனையடுத்து பிசிசிஐ, அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில், அதிகாரபூர்வமற்ற முறையில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

 

பிசிசிஐ முதலில் ராகுல் டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொன்னதாகவும், ஆனால் டிராவிட் மறுத்துவிட்டதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து பிசிசிஐ, அனில் கும்ப்ளே அல்லது வி.வி.எஸ். லட்சுமணை அடுத்த பயிற்சியாளராக  நியமிக்க ஆலோசித்துவருவதாகவும், இதுதொடர்பாக அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

 

இந்தச் சூழலில், புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க நீண்ட நாட்கள் தேவைப்படும் என பிசிசிஐ கருதுவதால், ராகுல் டிராவிட்டை வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரின்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாகவும், இதுதொடர்பாக அவரிடம் பேசவுள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

பிசிசிஐ கோரிக்கையை ராகுல் ட்ராவிட் ஏற்றுக்கொண்டால், அவர் நியூசிலாந்து தொடருக்கு மட்டும் தலைமை பயிற்சியாளராக செயல்படுவார். இதற்கிடையே தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பங்களைப் பெறுவதற்கான அறிவிப்பை விரைவில் பிசிசிஐ வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல் சில ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள், இந்திய தலைமை பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவதாகவும், ஆனால் பிசிசிஐ ஓர் இந்தியரை அந்தப் பொறுப்பில் நியமிக்க விரும்புவதால், ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களின் விருப்பத்தின் மீது ஆர்வம் காட்டப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்