இந்திய அணியின் மூத்த வீரர் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னால் அறிவித்தார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு அறிவிப்பு அதிர்ச்சி அடங்குவதற்குள் ரெய்னாவும் தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அதனையடுத்து, இருவருக்கும் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரெய்னாவிற்கு ஒரு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்
அதில், "ஆகஸ்ட் 15ம் தேதி உங்கள் வாழ்வில் ஒரு கடினமான முடிவினை எடுத்தீர்கள். ஓய்வு என்ற வார்த்தையை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால் நீங்கள் மிகவும் இளையவர்..." எனத் தொடங்கும் அந்தக் கடிதம் இரண்டு பக்க அளவில் வாழ்த்துக் குறிப்புகளால் நிரம்பியுள்ளது.
ரெய்னா பிரதமரின் வாழ்த்துக் கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டி, "நாட்டிற்காக நாங்கள் விளையாடும் போது ரத்தத்தையும், வேர்வையையும் சிந்துகிறோம். நாட்டு மக்கள் மற்றும் பிரதமரின் அன்பிற்குரியவராக இருப்பதை விட சிறந்த பாராட்டு கிடைத்துவிடாது. உங்களுடைய பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி. நான் மனமுவந்து இதை ஏற்றுக்கொள்கிறேன். ஜெய்ஹிந்த்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி நேற்று தோனிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியதும், அவரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதே போல நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது...