கிரிக்கெட்- தனது சுவாரசியத்தால் ரசிகர்களைக் கட்டிப்போடும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் எவ்வளவு சுவாரசியம் இருக்கிறதோ, அதே சுவாரசியம் இந்த விளையாட்டைச் சுற்றியும், இவ்விளையாட்டு வீரர்களைச் சுற்றியும் கொட்டிக் கிடக்கிறது. ஆடுகளத்திற்கு உள்ளே ஆனாலும் சரி, வெளியே ஆனாலும் சரி கிரிக்கெட் உலகில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. அந்த சுவாரசியமான சம்பவங்களை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இந்தத் தொடர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஒரு பண்ணைவீட்டில், இந்திய வீரர்களுக்கு நண்பர்களுடனான புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் கலந்துகொள்வது குறித்து ஷிகர் தவான் மிக உற்சாகமாக இருந்தார். ஆனால், அந்தச் சமயத்தில் வந்த ஒரு தொலைப்பேசி அழைப்பு, அவரது உற்சாகத்திற்கு முழுமையாக வேட்டு வைத்தது. வேறு ஒரு வேலையாக தனது காரில் தவான் சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான போக்குவரத்து நெரிசலில் காரை ஓட்டிக்கொண்டிருந்த தவானுக்கு ஓர் செல்ஃபோன் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் அழைப்பு விடுத்தது தவானுக்குத்தான் என்பதை உறுதிசெய்துகொண்டு, 'மும்பையில் ஒரு விழா இருக்கிறது. அதற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக வரவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
போக்குவரத்து நெரிசலில் தத்தளித்துக்கொண்டிருந்த தவான், விபரங்களை முழுமையாகக் கேட்காமலயே, "சரி சரி.. நீ அப்புறம் கூப்பிடு" என்றுள்ளார். இதன்பிறகு சிறிதுநேரம் கழித்து அவருக்கு விமான டிக்கெட்டும், மற்ற விவரங்களும் மெயிலில் வந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தவான், அந்த நபரை தொடர்புகொண்டு, 'நீங்கள் யார் எனக் கேட்க', 'நான் உங்களிடம் மதியம் பேசினேன். நீங்கள் சரி அப்புறம் கூப்பிடு என்றீர்கள். எனவே நாங்கள் அழைப்பிதழை அச்சடித்துவிட்டோம்' என அவர் பதிலளித்துள்ளார். ஆனால் தவானுக்கோ மதியம் நடந்த உரையாடல் எதுவும் நியாபகம் இல்லை. எனவே மீண்டும் நீங்கள் யார் எனக் கேட்க, அந்த நபர் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். மற்றவர்களாக இருந்திருந்தால், ஒருவேளை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கூட கூறியிருப்பார்கள். ஆனால், தவான் தான் ஒப்புக்கொண்டபடி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தவான் குறித்த இந்தச் சம்பவத்தை ஒரு நேர்காணலில் பகிர்ந்த விராட் கோலி, நாங்கள் எல்லாம் புத்தாண்டு பார்ட்டியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, தவான் தனது நண்பர்கள் யாருமின்றி தன்னந்தனியாக ஒரு நிகழ்ச்சிக்காக மேடையில் அமர்ந்திருந்தார் எனக் கூறி, அடக்கமுடியாமல் சிரித்தார். எது எப்படியோ, தொலைப்பேசியில் மறுபக்கம் இருப்பவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் காதில் வாங்காமல், 'சரி' எனத் தலையை ஆட்டமால் இருப்பது அனைவருக்குமே நல்லது என்பதை இதன்பின் தவான் உணர்ந்திருப்பார், நாமும் உணர்ந்துகொள்வது சிறப்பு.