Skip to main content

"கடினமான காலகட்டத்தில் இதனை ரசிகர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்" - மும்பை இந்தியன்ஸ்அறிக்கை!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

mumbai indians

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளும் நெருங்கி வருகின்றன. ஐ.பி.எல் போட்டிகள் வரும் 9 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், டெல்லி அணி வீரர் அக்ஸர் படேல், பெங்களூர் அணி வீரர் தேவதத் படிக்கல் ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மேலும் சென்னை சூப்பர்கிங்ஸ் நிர்வாகி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இவர்களை தவிர்த்து மும்பை மைதான ஆடுகளப் பராமரிப்பாளர்கள் 8 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக் குழுவில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட்-கீப்பிங் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக இருக்கும் கிரண் மோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கிரண் மோருக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லையென்றும், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் மும்பை இந்தியன்ஸ் அணி அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கிரண் மோரும் தாங்களும் பின்பற்றுவதாகக் கூறியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த கடினமான காலகட்டத்தில், எங்களது ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்கவும், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவுபடுத்தவும் விரும்புகிறோம்" எனக் கூறியுள்ளது.