ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து 12 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளதோடு, அந்த அணிகளை வாங்குவதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது. அணிகளை வாங்குவதற்கான டெண்டர் தொகையை சமர்ப்பிக்க முதலில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த அவகாசம் அக்டோபர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டாவது தடவையாக கால அவகாசத்தை நீட்டித்த பிசிசிஐ, டெண்டர் தொகையை சமர்பிக்க அக்டோபர் 20ம் தேதியே கடைசிநாள் என அறிவித்தது.
இந்தநிலையில், உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான கிளாசர் குடும்பம், ஐபிஎல் அணி ஒன்றை வாங்க ஆர்வம் கட்டியதாகவும், அதன்பொருட்டே டெண்டரை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரத்தில் அணிகளை வாங்குவதற்கான டெண்டர் தொகையை சமர்ப்பிக்கும் கடைசி தேதி நேற்றே முடிவடைந்துவிட்ட நிலையில்,கிளாசர் குடும்பம் டெண்டர் தொகையை சமர்பித்ததாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதானி குழுமம், டோரண்ட் பார்மா, அரபிந்தோ பார்மா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, ஜிண்டால் ஸ்டீல் ஆகிய பல்வேறு நிறுவனங்கள் புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.