இந்திய அணியில் தோனி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் இத்தொடருக்காகத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி, சர்வதேசப் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர், அவரது ஓய்வு அறிவிப்பிற்குப் பின், இந்திய அணி சந்திக்க இருக்கும் முதல் சர்வதேசத் தொடராகும். இதனால், இனி தோனியின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர் யாராக இருப்பார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணியின் பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல் காணொளி வாயிலாக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்துப் பேசுகையில், "தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனின் வேலை எப்படி முழுமையடைய வேண்டும் என்பதை அவர் எங்களுக்குக் காட்டியுள்ளார். ஆகையால், அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுள்ளோம். நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் நான் விக்கெட் கீப்பிங் பணி செய்தேன். நான் அதை முழுமையாக அனுபவித்தேன். போட்டியைக் கணிப்பது மற்றும் பவுலர்கள், கேப்டனுக்குக் கருத்துகள் வழங்குவதில் என்னை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.