Skip to main content

"எந்த ஒரு பாகுபாடும் சகித்துக்கொள்ளப்படாது" - கே. கே.ஆர் அறிவிப்பு; சிக்கலில் மோர்கன்- மெக்கல்லம்!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

mccullum and morgan

 

நியூசிலாந்து இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்காக ஒல்லி ராபின்சன் என்ற வேகப்பந்து வீச்சாளர் அறிமுகமானதோடு, சிறப்பாகவும் பந்து வீசினார். அதேநேரத்தில், அவர் கடந்த 2012-13 ஆண்டுகளில் பதிவிட்டிருந்த இனவெறியைத் தூண்டும் வகையிலான ட்வீட்களும், பாலியல் ரீதியான ட்வீட்களும் வெளிச்சத்திற்கு வந்தன.இது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து தனது ட்வீட்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அவரை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.

 

அதனைதொடர்ந்து, மேலும் சில இங்கிலாந்து வீரர்களின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்தவரிசையில், ஜோஸ் பட்லர், இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், முன்னாள் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் ஆகியோரின் சில ட்விட்டர் பதிவுகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன. அந்தக் குறிப்பிட்ட ட்விட்டர் பதிவுகள், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதைக் கேலி செய்வது போல் இருப்பதாக சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து பட்லர், மோர்கன் ஆகியோரது ட்வீட் குறித்தும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இயான் மோர்கன் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். மெக்கல்லம் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதனையடுத்து இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சை தொடர்பாக கொல்கத்தா அணி விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி, "இந்த நேரத்தில் இதுகுறித்து கருத்து தெரிவிக்குமளவுக்கு எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, அனைத்து உண்மைகளும் வெளிவரும்வரை காத்திருப்போம். நைட் ரைடர்ஸ் அமைப்பில் எந்தவொரு பாகுபாட்டையும் சகித்துக்கொள்ளாது" என தெரிவித்துள்ளார். இதனால் மோர்கன் மற்றும் மெக்கல்லம் இந்திய ரசிகர்களை கேலி செய்தது நிரூபணமானால், அவர்கள் இருவர் மீதும் கொல்கத்தா அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என கருதப்படுகிறது. இது மோர்கன் மற்றும் மெக்கலத்திற்கு சிக்கலை உருவாக்கியுள்ளது. 

 

 

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

ஒரு ஆட்டம், இவ்வளவு சாதனைகளா? கலக்கிய கொல்கத்தா அணி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
dc vs kkr record break victory for kolkata

ஐபிஎல் 2024இன் 16ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன் பேட்டிங்கின் அதிரடியால் டெல்லி அணி நிலை குலைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் விண்ணைப் பார்த்தபடியே இருந்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கொல்கத்தாவின் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின.

2023 இல் நரைன் துவக்க ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ஆனால், மூன்று போட்டிகளிலும் சொதப்ப, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இந்த முறை கம்பிரின் துணிவான முடிவால் மீண்டும் நரைன் மீது நம்பிக்கை வைத்து துவக்க வீரராக களமிறங்க வைத்தார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இருந்தாலும் மீண்டும் நம்பிக்கை வைத்து அவரையே களமிறக்க முடிவு செய்தார் காம்பிர். அந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் முத்தாய்ப்பாக 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் இமாலய ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு துணையாக ரகுவன்சி 27 பந்துகளில் 54 ரன்களும், ரசல் 41 ரன்கள், ரிங்குவின் 26 ரன்கள் என அதிரடி கூட்டணியின் அசர வைத்த பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர், 273 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன்ரேட் தாறுமாறாக எகிறி +2.518 என முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 272 பதிவாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 18 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக டி20 வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 14 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா சார்பில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற ரசலை சமன் செய்துள்ளார்.