2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால், கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில் ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்திக்கொள்வதற்காக பிசிசிஐ, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு முறையே 100 கோடி ரூபாயும், 50 கோடி ரூபாயும் அளித்ததாகவும், மீண்டும் அவ்வளவு பெரிய தொகையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு அளிக்க பிசிசிஐ விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் தற்போது அணியின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கவுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று மைதானங்கள் மட்டுமே இருப்பதால், அதிகமான போட்டிகளை நடத்தக் கடினமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. இந்தக் காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த விரும்பாத பிசிசிஐ, ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் தென்னாப்பிரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து பிசிசிஐ இன்று ஐபிஎல் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இன்றைய கூட்டத்தில், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.