2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மெகா ஏலத்தையொட்டி, புதிதாக கலந்துகொள்ளும் இரு அணிகளும் ஏலத்திற்கு வரும் வீரர்களில் மூவரை, ஏலத்திற்கு முன்பாகவே வாங்க முடியும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் அணி நிர்வாகம், பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறுமாறு கேஎல் ராகுலை லக்னோ அணி நிர்வாகம் தூண்டுவதாக பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகமும், சன்ரைசர்ஸ் அணியில் இருந்து ரஷித் கானை வெளியேறுமாறு லக்னோ அணி நிர்வாகம் தூண்டுவதாக பிசிசிஐயிடம் புகாரளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதுதொடர்பாக பிசிசிஐ விசாரித்து வருவதாகவும், இது உண்மையென நிரூபிக்கப்பட்டால் கேஎல் ராகுல், ரஷித் கான் இருவருக்கும் ஐபிஎல்-லில் பங்கேற்க ஒருவருடம் தடை விதிக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் அணியில் இருக்கும்போதே வேறு அணிக்கு மாற பேச்சுவார்த்தை நடத்திய ஜடேஜாவுக்கு ஐபிஎல் தொடரிலிருந்து ஒருவருடம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.