2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதனைத் தவிர, பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69) இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகனே யமாகுச்சியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தநிலையில், இன்று (31.07.2021) நடைபெற்ற மகளிர் ஹாக்கியில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவை 4 - 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்காக ஒரு வீராங்கனை ஹாட்ரிக் கோல் அடிப்பது இதுவே முதல்முறையாகும். தென்னாப்பிரிக்காவுடனான இந்த வெற்றி, இதுவரை ஐந்து லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும்.
இந்தப் போட்டியில் வென்றிருந்தாலும், இந்தியா காலிறுதிக்கு முன்னேறுவது இன்னும் உறுதியாகவில்லை. அயர்லாந்து - பிரிட்டன் அணிகளுக்கிடையே நடைபெறும் போட்டியில், பிரிட்டன் வென்றால் மட்டுமே இந்தியா காலிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.