இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்தநிலையில், மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹலால் இறைச்சியை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என வீரர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
வீரர்களை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும், தேவையற்ற உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கவும் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டாலும், இந்த தகவல் சமூக வலைதளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குக் கடும் கண்டனம் எழுந்தது.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால், வீரர்களுக்கு அவ்வாறான கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “வீரர்களின் உணவுத் திட்டம் குறித்து ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை. அது அமல்படுத்தவும்படாது. இந்த முடிவு எப்போது எடுக்கப்பட்டது அல்லது இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, உணவுத் திட்டம் தொடர்பான எந்த வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்கவில்லை. உணவுப் பழக்கம் என்பது வீரர்களின் தனிப்பட்ட விருப்பம். இதில் பிசிசிஐக்கு எந்தப் பங்கும் இல்லை.
எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என பிசிசிஐ எந்தவொரு வீரரையும் அறிவுறுத்தியதில்லை. தங்களது உணவை தேர்ந்தெடுத்துக்கொள்ள வீரர்களுக்கு சுதந்திரம் உள்ளது. அவர்கள் சைவமாக இருக்க வேண்டுமென விரும்பினால், அது அவர்களது விருப்பம். அவர்கள் அசைவமாக இருக்க வேண்டுமென விரும்பினால் அதுவும் அவர்களது விருப்பம்.”
இவ்வாறு அருண் துமால் கூறியுள்ளார்.