Skip to main content

"மீண்டும் மனங்களை வென்றுவிட்டார்" - நடராஜனின் செயலால் நெகிழும் ரசிகர்கள்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

NATARAJAN

 

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணியும், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில், இரண்டாம் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. காயங்கள், இனவெறித் தாக்குதல் எனப் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இந்திய அணி பெற்ற இந்தச் சாதனை வெற்றியை இந்திய ரசிகர்கள் அப்போது சிறப்பாகக் கொண்டாடினார்கள். வெற்றியோடு ஊர் திரும்பிய இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஐந்து கோடி பரிசு அறிவித்தது. 

 

இந்தியத் தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், சுப்மான் கில், நடராஜன், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகிய ஆறு இளம் வீரர்களுக்கு காரை பரிசளிக்கப்போவதாக அறிவித்தார். மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான மஹிந்திரா தார் காரை, தனது சொந்தப் பணத்திலிருந்து வழங்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். 

 

ஆனந்த் மஹிந்திரா கூறியவாறே, இளம் வீரர்களுக்கு சமீபத்தில் கார் பரிசளிக்கப்பட்டது. இந்த நிலையில் நடராஜன் அந்த காரை, அவரது இந்திய அணி கனவு நிஜமாவதில் முக்கியப் பங்காற்றிய அவரது பயிற்சியாளரும், வழிகாட்டியுமான ஜெயப்ரகாஷ்க்கு பரிசளித்துள்ளார். இதனை ஜெயப்ரகாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடராஜன் மீண்டும் ஒருமுறை மனங்களை வென்றுவிட்டதாக ரசிகர்கள், அவரை புகழ்ந்து வருகின்றனர்.