இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய லபூஷனே 108 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இந்தியா, முதல் இன்னங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் (62), தாக்குர் (67) ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 33 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா, மழையினாலும் இந்திய பந்துவீச்சினாலும் தடுமாறியது. இருப்பினும் ஸ்டீவன் ஸ்மித்தின் (55) உதவியோடு 294 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
328 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 5ஆம் நாளான இன்று (19.01.2021), கில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரஹானேவும் விரைவில் வெளியேறினார். பொறுமையாக ஆடிய புஜாரா 211 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் ரிஷப் பந்த், தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை கைவிட்டுவிட்டு நிதானமாக ஆடினார். அதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தொடங்கியது.
இறுதிக்கட்டத்தில் மயங்க் அகர்வால் 9 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரிஷப் பந்த் - வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வெற்றிபெறவைத்தனர். 23 வயதான ரிஷப் பந்த் 138 பந்துகளில் 89 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்ததுடன் ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 32 ஆண்டுகளாக பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை என்ற சாதனைக்கும் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கெதிரான டெஸ்ட் தொடரை, தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.