இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 338 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 312 ரன்கள் குவித்து டிக்ளர் செய்து, இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்தியா, நல்ல தொடக்கத்தைக் கண்டது. ரோகித் அரைசதமடித்தார். கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானே விரைவில் ஆட்டமிழந்தாலும், புஜாராவும், ரிஷப் பந்தும் இணைந்து ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி, 118 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய புஜாரா 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் அடுத்து ஆடுவதற்கு பேட்ஸ்மேன்கள் இல்லாததால் இந்திய அணி, போட்டியை சமன் செய்வதற்காக ஆடத் தொடங்கியது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட விஹாரியும், அஸ்வினும் மிகவும் நிதானமாக ஆடினர். 161 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, 23 ரன்களையும், 128 பந்துகளை எதிர்கொண்ட அஸ்வின், 39 ரன்களையும் எடுத்தனர். இந்த இருவரையும் ஆஸ்திரேலியா அணியால் பிரிக்கமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து இப்போட்டி ட்ராவில் முடிந்தது.