இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், இந்திய அணியில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே கழட்டிவிடப்பட்டாலும் ஓய்வை அறிவிக்காமல் இருந்து வந்தார். அதேநேரத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும் விளையாடி வந்தார்.
இந்தநிலையில் ஹர்பஜன் சிங், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரும். வாழ்க்கையில் எனக்கு அனைத்தையும் அளித்த விளையாட்டில் இருந்து இன்று நான் விடைபெறுகிறேன். இந்த 23 ஆண்டுகால பயணத்தை அழகாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனது மனமார்ந்த நன்றி" என பதிவிட்டுள்ளார்.
ஹர்பஜன் சிங் விரைவில், ஒரு ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியிருந்தது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, ஹர்பஜன் சிங்குடன் இருக்கும் புகைப்படத்தை, "படத்தில் சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ளன. பாஜி என்ற ஒளிரும் நட்சத்திரத்துடன்" என்ற தலைப்போடு தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டிருந்தார். இதனால் ஹர்பஜன் சிங், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் பஞ்சாப் காங்கிரஸில் இணைவார் எனவும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.