Skip to main content

நரேந்திர மோடி மைதானத்தின் மேல் புகாரளிக்க இங்கிலாந்து ஆலோசனை!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021
ENGLAND HEAD COACH

 

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கடந்த 24 ஆம் தேதி தொடங்கி, இரண்டே நாட்களில் முடிவடைந்தது. பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், சுழற்பந்து வீச்சுக்கு மைதானம் நன்றாக ஒத்துழைத்ததால், இரு அணி வீரர்களுமே பேட்டிங் செய்ய சிரமப்பட்டனர். இந்திய வீரர்கள் ஓரளவிற்கு சமாளித்தாலும், அஸ்வின் - அக்ஸர் படேல் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுருண்டது. இந்தியா அபார வெற்றி பெற்றது.

 

இந்தநிலையில் இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தின் பிட்ச்சை, இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், பிட்ச் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். இந்தநிலையில், பிட்ச் குறித்து புகாரளிக்க இங்கிலாந்து அணி ஆலோசித்து வருகிறது.

 

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர், "நாங்கள் திரைக்குப் பின்னால் சில விஷயங்களைப் பற்றி பேசுவோம்" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் "மூன்று நாட்கள் கிரிக்கெட் எஞ்சியிருக்கும்போது நாங்கள் இங்கே அமர்ந்திருப்பதில் ஏமாற்றமடைகிறோம். ஒரு சில பார்வையாளர்களும் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.நாங்கள் ஜவகல் ஸ்ரீநாத்துடன் பேசினோம், ஆனால் அது பிட்ச் பற்றி அல்ல. ஜோ ரூட்டும், நானும் உட்கார்ந்து, உரையாட வேண்டும். உரையாடல் எங்களை எங்கே கொண்டுசெல்கிறது என பார்க்கவேண்டும்" என கூறியுள்ளார்.

 

மேலும் அவர், "இந்த பிட்ச்களில் நாங்கள் சிறந்து விளங்க வேண்டும், மேலும் நாங்கள் மேம்படுத்தக்கூடிய இடங்கள் கிடைத்தது. அதனை நாங்கள் ஏற்க வேண்டும். முதல் இன்னிங்சைப் பாருங்கள் [74 க்கு இரண்டு முதல் 112 ஆல் அவுட்டானது]. அதிக ரன்கள் எடுக்க எங்களுக்கு அங்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அடுத்த முறை அதைத் செய்வோம். பிட்ச் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும், இந்தியா இறுதியில் அந்த பிட்சில் எங்களை விட சிறப்பாக விளையாடியது" என கூறியுள்ளார்.

 

இங்கிலாந்து அணி புகாரை ஏற்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தால், மைதானத்திற்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்படும். இந்திய அணிக்கு எந்த புள்ளிகளும் குறைக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.