இந்தியா- இங்கிலாந்து இடையேயான இருபது ஓவர் தொடர், கடந்த சனிக்கிழமையோடு நிறைவுற்றது. இந்த தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் பட்லருக்கும் - விராட் கோலிக்கும் வார்த்தை மோதல் நடந்தது. ஆட்டமிழந்த பட்லர் எதோ கூற, விராட் கோலியும் அவருக்குப் பதிலளித்தார்.
இந்தநிலையில், போட்டிக்குப் பிறகு, விராட் கோலி - பட்லர் இடையேயான மோதல் குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இதுபோன்ற இறுக்கமான போட்டிகளில், மோதல்கள் ஏற்படுவது வழக்கமானது எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "எனக்கு உண்மையாகவே (நடந்தது குறித்து) தெரியாது. விராட் விளையாடும்போது உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார். விளையாட்டில் ஒரு பெரிய பாத்திரத்தை அவர் வகிக்கிறார். அவர் விளையாட்டின் உணர்ச்சிகளை நகர்த்திச் செல்கிறார். சில நேரங்களில் இறுக்கமான போட்டிகளில், மோதல்கள் ஏற்படும்தான். அது ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. இது அதற்கான ஒரு உதாரணம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.