2021ஆம் ஐபிஎல் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தநிலையில், 2022 ஐபிஎல்க்கு முன்னர் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கவுள்ளதால், இந்த மெகா ஏலத்தில் வழக்கத்தைவிட அதிக பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் பிசிசிஐக்கும், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் எனவும், அந்த நான்கு பேரில் அதிகபட்சம் இருவர் வெளிநாட்டு வீரர்களாக இருக்கலாம் எனவும், அதிகபட்சம் மூவர் இந்திய வீரர்களாக இருக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிய அணிகள் வருவதையொட்டி இந்த ஏலத்தில் ஆர்.டி.எம். கிடையாது எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்திய வீரர்களில் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைக்கவுள்ளதாகவும், வெளிநாட்டு வீரர்களில் பிராவோ அல்லது ஃபாப் டு பிளெசிஸை தக்க வைக்கவுள்ளதாவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.