சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொள்ளவந்த பாகிஸ்தான் வீரர்கள், போட்டிகளில் பங்கேற்காமல் அதிரடியாக பாகிஸ்தான் திரும்பியிருப்பது இந்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சர்வதேச 44-வது சதுரங்க போட்டிகளை மிக பிரமாண்டமாக நடத்துகிறது தமிழக அரசு. இந்த போட்டிகளை நேற்று (28-ந்தேதி) இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்த துவக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள நிலையில், சதுரங்க போட்டிகளின் முதல் சுற்று இன்று சென்னை மாமல்லபுரத்தில் துவங்கியிருக்கிறது. இந்த போட்டிகளில் 168 நாடுகளைச் சேர்ந்த 2,000-த்திற்கும் அதிகமான சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
மிக பிரமாண்டமாகவும் விமர்சியாகவும் நடக்கும் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள பாகிஸ்தானில் இருந்து 16 வீரர்கள் சென்னைக்கு வந்தனர். சென்னையில் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு தரப்பட்டது. இவர்களின் பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து மாமல்லபுரம் சென்றனர் பாகிஸ்தான் வீரர்கள். மதிய உணவும் உண்டு மகிழ்ந்தனர். அப்போது, பாகிஸ்தானிலிருந்து அவர்களுக்கு ஃபோன் வந்துள்ளது. ஃபோனில் பேசிய பாகிஸ்தான் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி, “இன்னும் 24 மணி நேரத்திற்குள் நீங்கள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.
பதட்டமான வீரர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விபரத்தைச் சொல்ல, தமிழக அரசின் உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விசயத்தை கொண்டு சென்றனர். அதிகாரிகள் உடனே அவர்களுக்கான டிக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
விமான நிலையத்தில் பேசிய பாகிஸ்தான் வீரர்கள், “இந்த போட்டிகளில் விளையாட மகிழ்ச்சியாக நாங்கள் வந்தோம். ஆனால், விளையாடக் கூடாது; உடனே நாடு திரும்புங்கள் என எங்கள் அரசாங்கம் (பாகிஸ்தான்) எச்சரிக்கை செய்ததால் உடனே தாயகம் திரும்புகிறோம். எங்கள் அரசாங்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திரும்புகிறோம். இது மனதளவில் எங்களை வருத்தமடைய வைத்துள்ளது. ஆனால், டெல்லியில் நாங்கள் இருந்த போதும், சென்னைக்கு நாங்கள் வந்த போதும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும், பத்திரிகையாளர்களும் எங்களுக்கு கொடுத்த வரவேற்பும் உற்சாகமும் மன நிறைவைத் தந்தது. அதனை எப்போதும் மறக்கமாட்டோம். எங்கள் நினைவுகளிலிருந்து சென்னையையும் மாமல்லபுரத்தையும் பிரிக்க முடியாது” என்று உணர்ச்சி மேலிட பேசினார்கள்.
பாகிஸ்தான் வீரர்கள் திரும்பிச் சென்ற சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரையும் சோகமாக்கியது.
இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் ஏர்போர்ட் பாலசுப்பிரமணியம், “பாகிஸ்தான் அரசு விளையாட்டிலும் அரசியல் செய்கிறது. அவர்களின் விளையாட்டு அரசியல் இந்தியாவைச் சிறுமைப்படுத்துகிறது. ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் செஸ் ஒலிம்பியாட் குழுவினரும் பாகிஸ்தான் வீரர்களை பத்திரமாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானில் இருந்து மொத்தம் 16 வீரர்கள் சென்னை வந்தனர். இவர்களுக்கான விசா நடைமுறைகளை மூன்று மாதங்களுக்கு முன்பே துவக்கிவிட்டது இந்திய அரசு. முறையாக இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு விசாவும் வழங்கப்பட்டது. இது, பாகிஸ்தான் அரசுக்குத் தெரியும். சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளட்டும் என்றுதான் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது பாகிஸ்தான்.
வீரர்களும் சென்னை வந்து மாமல்லபுரத்தில் தங்கினர். அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக அரசு கவனித்துக் கொண்டது. போட்டிகள் துவங்க 12 மணி நேரமே இருந்த நிலையில், திடீரென்று தமது வீரர்களை நாடு திரும்ப நிர்ப்பந்தம் செய்திருக்கிறது பாகிஸ்தான். அவர்களும் சோகத்துடன் பாகிஸ்தான் திரும்பினர். இந்தியாவில் நடக்கும் சதுரங்க போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்க விருப்பமில்லையெனில், ‘இந்த போட்டிகளில் எங்கள் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள்’ என்று ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அரசு சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் யாருக்கும் வருத்தமோ கோபமோ வந்திருக்காது.
ஆனால், எல்லாம் நடந்து போட்டிகள் துவங்க சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், தங்களின் வீரர்களை திரும்பி வருமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டிருப்பது அந்த நாட்டின் வக்கிரத்தைக் காட்டுகிறது. இந்தியாவை சிறுமைப்படுத்தவே பாகிஸ்தான் இதனை செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் செயலால் சிறுமைப்பட்டிருப்பது இந்தியா அல்ல; பாகிஸ்தான் அரசு தான்” என்கிறார் மிக அழுத்தமாக.