2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால், கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில் ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் இன்று பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.
இந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மும்பை ஆகிய இடங்களில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் மும்பையில் ஐபிஎல் தொடரை முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வான்கடே மைதானம், கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (சிசிஐ) மைதானம், டிஒய் பாட்டீல் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும் எனவும், மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஐபிஎல் தொடரை மார்ச் 27 ஆ தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள பிசிசிஐ வட்டாரங்கள், தொடரை மகாராஷ்ட்ராவில் நடத்துவது குறித்த இறுதி முடிவு, அம்மாநிலத்தில் நிலவும் கரோனா சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி எடுக்கப்படும் என பிசிசிஐ அணி உரிமையாளர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. முன்னதாக ஐபிஎல் தொடரை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த கூட்டத்தில், ஐபிஎல் ஏலம், திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் எனவும் பிசிசிஐ அணி உரிமையாளர்களிடம் தெரிவித்ததாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.