கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தோனி தலைமையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் பட்டம் வென்றுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியால உலகம் முழுதும் உள்ள தோனி ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை பலரும் சென்னை அணியை வாழ்த்தி ட்வீட்களைப் பதிவிட்டனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி ஸ்கூபா டைவர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள temple adventure எனும் ஆழ்கடல் பயிற்சி பள்ளியை நடத்திவரும் அரவிந்த் தலைமையிலான குழு, நூதன முறையில் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் சி.எஸ்.கே. உடை அணிந்து ஆழ்கடல் மணலில் ஸ்டம்ப் வைத்து கிரிக்கெட் விளையாடி தங்களின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். சென்னை காரப்பாக்கத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர் அரவிந்த், தன் சக நீச்சல் வீரர்களுடன் சேர்ந்து நீலாங்கரை கடலில் 12 மீட்டர் ஆழத்தில் 20 நிமிடங்கள் கிரிக்கெட் விளையாடி வாழ்த்து தெரிவித்தார். நள்ளிரவில், நடுக்கடலில் நடைபெற்ற இந்தக் கிரிக்கெட், பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்க்சின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கடலுக்குள் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.