Skip to main content

படிப்பதெல்லாம் இயல்பாக யாரிடம் ஒட்டிக்கொள்கிறது? ஒரு பேப்பர்.. ஒரு பேனா.. கொஞ்சம் சிந்தனை!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020

 

To whom does everything you study naturally stick? Businessman sharing his thoughts

 

பெண்களுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர், அனுபவரீதியாக தனது சிந்தனையில் உதித்தவற்றை, நக்கீரன் இணையத்தள வாசகர்களிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவரது கருத்துகளைக் கவனிப்போம்! 


“அவன் சொன்னான்; இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும், அதை உனது சுயபுத்தியால், ஏன், எதற்கு என்று சிந்தித்துப் பார்..”- தீர்க்கமாக இப்படிச் சொன்னார், தத்துவமேதை என்று உலகமே போற்றும் சாக்ரடீஸ். 


எது கடினமான வேலை?


இமயமலை போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? கடும்பாலைவனத்தில் அதிக பாரத்தோடு வெறும் காலோடு நடப்பதா? வெறும் கோடரி கொண்டு பெரிய காட்டு மரத்தை வெட்டிக் கீழே சாய்ப்பதா? போர்க்களத்தில் உயிரைப் பணயமாக வைத்துப் போரிடுவதா? 

 

இவைகள் எல்லாம் சிரமமான வேலையா?  கிடையாது... கிடையவே கிடையாது! 

 

நம்மில் நிறைய பேருக்கு இவை எல்லாவற்றையும் விட மிகச் சிரமமாகத் தோன்றும் வேலை ஒன்று உண்டு.

 

அதுதான் சிந்திப்பது! மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது?  சிந்திப்பது!  ஆம்... அதுவேதான்.


மனிதனின் பலம் எது?


குதிரைகளைப் போல் ஓட முடியுமா? பறவைகளைப் போல் பறக்க முடியுமா? யானையைகளைப் போல் மரங்களைச் சாய்க்க முடியுமா? சிங்கத்தைப் போல் வேட்டையாட முடியுமா? மாடுகளுக்கு உள்ளது போன்ற உறுதியான கொம்புகளால் எதிரிகளை முட்டிச்சாய்க்க முடியுமா?

 

நம்மால் ஒரு நாயை அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ, கையினாலோ அடித்துவிட முடியாது. அதற்குக்கூட ஒரு கம்பின் துணை வேண்டும்..!

 

மனித உடல்தான் எவ்வளவு மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் காலணியின் துணை தேவைப்படுகிறது. இத்தனை பலவீனமான உடலைக்கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்?  எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான்?

 

அப்படியென்றால் மனிதனின் பலம் எது? அதுதான் சிந்திக்கும் அறிவு!


தலை வாலாக மாறலாமா?


நம்மில் பலரும், நமக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவான, மனிதனின் மிகச்சிறந்த பலமான இந்த அறிவைப் பயன்படுத்துகிறோமா? 

 

இந்த அறிவு தேவையே இல்லை என்று, மனதளவில் மூட்டை கட்டிப் பரணில் போட்டு விட்டவர்கள் பலர். பலரும் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த அறிவை எடுத்துச்செல்வதே இல்லை.

 

எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால்,  தலை,  தலையாக இல்லை. தலை, வாலாக மாறிவிட்டது! எது ஆடுகிறதோ, அது வால்! எது சிந்திக்கிறதோ அது தலை!


சிந்திக்கும் பழக்கம் இல்லை; அது தேவையும் இல்லை!


நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்?  இல்லை..  ஏன் சிந்திக்கத் தயங்குகிறோம்?

 

அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க! ஏதோ நடக்குதா, அது போதும். எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப்போகும் என்று சொல்லி, போகிற போக்கை மாற்ற, புதிய வழியைக் காண பலருக்கும் தயக்கமோ, தயக்கம்! 

 

ஆறுகள் கூட, தான் போகும் வழியில் தடங்கல் ஏற்பட்டால் தங்கள் போக்கை மாற்றிவிடுகின்றன. ஆனால், மனிதர்களில் பலரும் தங்களின் போக்கை மாற்ற விரும்புவதில்லை.

 

மாறுபட்டுச் சிந்திக்க, வேறுபட்டுச் செயல்பட, ஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வு, நம்மை மாறுபட்டு சிந்திக்க, நாம் சில விதிகளைத் தாண்டி வர அனுமதிப்பதில்லை. 


உலகை மாற்றியமைப்பவர்கள் யார்?


ஒரு தொடர் வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின், ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது.  அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள், இந்த உலகை மாற்றியமைப்பவர்கள், இந்த உலகை உருவாக்குபவர்கள் யாரென்றால்- சிந்திக்கும் சில மனிதர்களே!

 

இப்படிச் சிந்திப்பவர்கள், அறிவியல் அறிஞர்களாகவும், ஆன்மிக அறிஞர்களாகவும், பெரிய தலைவர்களாகவும், சிறந்த ஆளுமைகளாகவும் விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற சிற்பத்தைச் செதுக்கும் சிற்பிகள் இவர்களே!


எது சிந்தனை?


நம்மில் பலருக்கும் எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால்,  அதை மனதில் இடையறாது நினைத்து கவலைப்படுவதையே சிந்தனை எனத்  தவறாக நினைக்கிறார்கள்.

 

இது போலவே,  இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, நடந்து முடிந்த மனதுக்குப் பிடித்த நிகழ்வு, இவைகளை நினைத்து கற்பனையில் இருப்பார்கள்.  இதுவும் சிந்தனை இல்லை!

 

கணிதத்திற்கு விடைகாண முயலும்போதும், புதிர்களுக்கு விடை தேடும்போதும்தான்,  நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். பிரச்சனைகளை அலசி ஆராய்தல், கணக்கிடல், திட்டமிடல், புதிய வழிகாணல் இவைகளே சிந்தனை எனப்படும்.

 

ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைத்திறனுக்கு வேலை கொடுக்க வந்தவையாகும். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சிந்திக்கப் பழக வேண்டும்.

 

இதுபோன்று நாம் சிந்திக்க முயற்சிக்கும்போது, மனம் அங்கும் இங்குமாக அலைபாயும், தடம் மாறிப் போகும். ஆகவே தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என விரும்பினால் ஒரு பேப்பர், ஒரு பேனா, கொஞ்சம் மூளை.. அதாவது மூளைத்திறனைப் பயன்படுத்துவது. இவற்றோடு, ஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால்,  எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம்.


யார் அறிவாளி? யார் பலசாலி!


நிறைய புத்தகங்களைப் படித்தவர்கள் அறிவாளிகளா? நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? 

 

எவர் நல்ல உணவுகளையும் உண்டு, கடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ, அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ, அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது. 

 

அது போலவே,  நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால், அறிவாளிகள் ஆக முடியுமா? படிப்பானது, நல்ல தகவல்களை அளித்து, நமது சிந்தனையைத்  தூண்ட உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன்?


சிந்தனைத்திறன் உள்ளவன் காட்டும் வழியே சிறந்தது!


எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோ, எவரிடம் சிந்தனைத்திறன் இருக்கிறதோ, அவர் படிப்பதெல்லாம் அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது படிக்கும் படிப்புகள், அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. சிந்தனைத்திறன் இல்லாமல் படிக்கும் படிப்பினால் எந்த பிரயோஜனமும் இல்லை.

 

http://onelink.to/nknapp

 

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் புதிய வழிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஆராய்ச்சி பகுதி என ஒன்று செயல்படுகிறது. பெரிய நிறுவனங்கள் இந்தப் பகுதிக்கென்றே பெரும்செலவு செய்கின்றன.  இந்த (R & D – Research and Development) சிந்தனைப்பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ச்சியடைகிறது.  

 

இதுபோலவே,  எந்த மனிதன் சிந்திக்கிறானோ, அவனே இச்சமுதாயம் செல்லும் பாதையில் தடங்கல்கள் ஏற்படும் போது,  மாற்றுப்பாதையை ஏற்படுத்தியும், புதிய பாதைகளை அடையாளம் காட்டியும், சமுதாயம் பயணிக்க புதிய வழிகளைக் காண்பிக்கிறான். அவ்வாறு சிந்தனைத்திறன் கொண்ட மனிதன் காட்டும் வழியைப் பின்பற்றும் சமுதாயம் விரைவாக உயர்கிறது. 

 

முந்தைய பகுதி: குறிவைக்கப்படும் அன்பிற்குரியோரின் கரும்பக்கங்கள்! -தொழிலதிபர் ஒருவரின் அனுபவப் பகிர்வு!  

 

அனுபவத் தெறிப்புகள் தொடரும்…

 

 

Next Story

"உ.பி. மக்கள் இப்போது பயப்படத் தேவையில்லை.." - யோகி ஆதித்யநாத்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

uttarprdesh cm yogi aditya nath talks about state law and order issue

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மற்றும் ஹர்டோய் மாவட்டங்களில் பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் புதிதாக பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று (19.04.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

 

அப்போது அவர் பேசுகையில், "உத்தரப்பிரதேசத்தில் தற்போது ரவுடி, மாபியா கும்பல் மற்றும்  குற்றவாளிகள் யாரும் செல்போன் மூலம் தொடர்புகொண்டு தொழிலதிபர்களை மிரட்ட முடியாது. ஒரு காலத்தில் உத்தரப்பிரதேசம் வன்முறைகளுக்கு பெயர்போன இடமாக திகழ்ந்தது. சில மாவட்டங்களின் பெயர்களை கேட்டாலே மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். ஆனால் இப்போது பயப்படத் தேவையில்லை. உத்தரப்பிரதேசத்தில் இப்போது சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

 

2012 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட கலவரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் 2017 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ஒரு ஊரடங்கு உத்தரவு கூட பிறப்பிக்கப்படவில்லை. அதற்கான சூழ்நிலைகளும் ஏற்படவில்லை. அதனால் உத்தரப்பிரதேசத்தில் தொழில்கள் தொடங்கி முதலீடுகள் செய்வதற்கு சாதகமான வாய்ப்புகள், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு உத்தரப்பிரதேசம் உத்தரவாதம் அளிக்கிறது" எனப் பேசினார். 

 

 

Next Story

வங்கிக் கடன் மோசடி - குஜராத் தொழிலதிபர் கைது

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Bank Loan Fraud - Gujarat Businessman Arrested!

 

வங்கிகளில் சுமார் 3,300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

குஜராத் மாநிலம், சூரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் ABG Shipyard Limited. இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு வேண்டுமென்றே, திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

 

கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் 2017- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிஷி கமலேஸ் அகர்வாலும், அவரது கூட்டாளிகளும் குற்றச்சதி, மோசடி அரசுப் பதவிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. 

 

மேலும் வங்கிக் கடனை சில குறிப்பிட்ட, நோக்கத்திற்காக பெற்றுக் கொண்டு பிற வழிகளில் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பான, புகாரில் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

 

இவரது வங்கிக் கடன், 2016- ஆம் ஆண்டு ஜூலை 2019- ஆம் ஆண்டுக்கு இடையே வாரா கடனாக அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்ஷி போன்றோரின் வரிசையில் ரிஷி கமலேஷ் அகர்வாலும் இணைந்திருப்பது தெரிய வந்தது.