கரோனா வைரஸை விரட்டும் வகையில் ஒவ்வொருவரும் தங்கள் உடல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நுரையீரல், சுவாசப்பாதைகளை கரோனா வைரஸ் தாக்குகிறது. நமது உடலில் இரும்புச் சத்துக் குறைபாடு இருந்தால், ஆக்சிஜன் அளவு குறையும் ஆபத்து உள்ளது. மேலும், ரத்த சிவப்பணுக்களில் ஆக்சிஜன் குறையும் போது, செயற்கை சுவாசம தேவைப்படுகிறது. சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் கொடுக்காவிட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவது இப்போதைய சூழலில் அவசியம் ஆகும்.
ஆக்சிஜனை அதிகரிக்கும் உணவுகள் சிலவற்றை குறித்துப் பார்ப்போம்!
ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ள மசாலா பொருள் கிராம்பு. தினமும் ஒரு கிராம்பு எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு அவசியம். நமது அன்றாட உணவுகளில் தினமும் சிறிதளவு கிராம்பு சேர்த்துக்கொள்வது நல்லது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியோடு, ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்கும் மஞ்சளை உட்கொள்ளலாம்; அதேபோல, மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிக்கலாம்.
சமையலில் தேவைப்படும் இடங்களில் பட்டை சேர்ப்பது நல்லது.
கறிவேப்பிலை, சீரகம், சோம்பு, பூண்டு, இஞ்சியில் ஆக்சிஜனை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ளது. எனவே உணவில் போடப்படும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று சாப்பிடப் பழக வேண்டும்.
துளசி இலைகளைச் சாப்பிடுவதாலும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம். நாள்தோறும் 10 துளசி இலைகளைப் பறித்து, சுத்தமாகக் கழுவிய பின் சாப்பிடலாம்.
எலுமிச்சை பழத்தை வெட்டி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
பட்டாணி, பீன்ஸ், சோயா, கொண்டைக்கடலை, காராமணி ஆகியவையும் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
பசலை கீரை, தர்பூசணி, முருங்கைக் கீரை, அவித்த வேர்க்கடலை, அன்னாசிப்பழம் ஆகியவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும்.
அதேபோல நார்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.