
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா என்கிற கொடிய நோய், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இவற்றுள், குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 2% மக்கள் ஏராளமான பின்விளைவுகளைச் சந்தித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பாக தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) வழங்கிய தரவுகளின் படி, கரோனாவிலிருந்து மீண்டவர்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு ஐந்து வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு லேசானது முதல் கடுமையான கரோனா நோயின் (போஸ்ட் கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் இருந்துள்ளன.
ஓஎன்எஸ் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், 10 பேரில் ஒருவருக்கு கரோனா நோயின் (போஸ்ட் கோவிட் -19 சின்ட்ரோம்) அறிகுறிகள் 12 வாரங்கள் அல்லது அதற்கு மேல் இருந்துள்ளன.
இதுகுறித்து சமீபத்திய ஆய்வில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளினிக்கல் எக்ஸலன்ஸ் (நைஸ்) நிறுவனம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் சந்திக்கும் 28 உடல் உபாதைகளைக் கண்டறிந்து வெளியிட்டது. அவை 7 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1. சுவாச பிரச்சனைகள்: வறட்டு இருமல், மூச்சுத் திணறல் ஏற்படும்.
2. இருதய அறிகுறிகள்: நெஞ்சு வலி, படபடப்பு, மார்பில் இறுக்கம் ஏற்படும்.
3. நரம்பியல் அறிகுறிகள்: வலி, தூக்கமின்மை, தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், போன்றவை.
4. இரைப்பை குடல் அறிகுறிகள்: குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வயிற்று வலி, தசைக்கூட்டு அறிகுறிகள், மூட்டு வலி, தசை வலி உள்ளிட்டவை.
5. உளவியல் / மனநல அறிகுறிகள்: மனச்சோர்வு, கவலை போன்றவை.
6. ENT தொடர்பான அறிகுறிகள்: வாசனை மற்றும் சுவையின்மை, தொண்டை வலி, காதிரைச்சல் (டின்னிடஸ்), காது வலி, தலைச்சுற்றல் உள்ளிட்டவை.
7. தோல் அறிகுறிகள்: சில தடிப்புகள் தோன்றலாம். இவற்றைத் தவிர்த்து, உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவையும் முக்கியமானவை.
கரோனா நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதேபோன்று, இந்தியாவிலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்து தற்போது, படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது. இதுபோன்ற சூழலில், கரோனாவின் புதிய வடிவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனித இனம் மீண்டெழும் என்ற நம்பிக்கையோடு மக்கள் காத்திருக்கின்றனர்.