உடல் பருமன் என்பது உலகெங்கிலும் உள்ள முக்கிய ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். அதிக உடல் எடை அல்லது பருமனாக இருப்பது நமது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, நமது பாலியல் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.
பாலியல் உறவு என்பது ஆண் - பெண் இருபாலருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடு ஆகும். அன்பை உருவாக்குவது மிகவும் தீவிரமான உடல் செயல்பாடாகும். பாலியல் உறவு இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. இப்படியான மன பாதுகாப்பின்மைக்கு ஒருவகை காரணமாக உடல் எடையும் அமைந்துள்ளது என்பது அனைவராலும் மறுக்கமுடியாத உண்மை.
உங்கள் உடல் பருமன் பாலியல் வாழ்க்கையை (sexual life) எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி முதலில் அறிந்துகொள்வோம்.
உடல் பருமன் ஆண்களில் விறைப்புத்தன்மை மற்றும் பெண்களில் பாலியல் செயலிழப்பு உள்ளிட்ட அபாயங்களை அதிகரிக்கிறது. இது முக்கியமாக, உடலில் அதிக கொழுப்பு மற்றும் உடல் பருமனால் ஏற்படும் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக ஏற்படுகிறது. உடல் பருமனான சில ஆண்கள், ஆண்குறி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிப்படைகின்றனர். பெண்களின் அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), பாலியல் பிரச்சனைகளுடன் தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது. சில ஆய்வாளர்கள் இவை பிறப்புறுப்பு பகுதியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள். உடலுறவில் சிரமம், அதிருப்தி ஆகியவற்றுக்கு உடல் பருமன் முக்கிய காரணமாக அமைகிறது.
ஆண்களைப் போலவே, அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பெண்களின் கிளிட்டோரிஸில் அடைப்பை உருவாக்கும். இது பெண்ணுறுப்புக்குச் (vagina) செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம். இதனால் நெருக்கமான பாலியல் உறவின்போது அதிக இன்பம் மற்றும் உச்சத்தை அடைவது மிகவும் கடினமாக மாறலாம்.
நெருக்கமான உடலுறவு உங்கள் துணையுடன் இணைந்திருப்பதை உணர உதவுகிறது மற்றும் உங்களுக்குத் திருப்திகரமான அனுபவத்தை அளிக்கிறது. இருப்பினும், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடலுறவின்போது தங்கள் துணைக்கு ஏற்றார் போல் அவ்வளவு வளைந்து கொடுக்க முடியாதபோது, படுக்கையறையில் ஏமாற்றம் ஏற்பட்டுவிடுகிற அபாயம் உள்ளது.
குறிப்பாக, பாலியல் ஹார்மோன்களான டி.எச்.இ.ஏ, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற சில ஹார்மோன்கள் உடல் எடை அதிகரிப்போடு தொடர்புடையன. மேலும், PCOS போன்ற ஹார்மோன் பிரச்சனைகளின் தற்செயலான தொடக்கமாகவும் கூட பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்.
ஆண், பெண் இருவரது உடலிலும் சேமித்துவைக்கப்படும் அதிக கொழுப்பு குறைந்த பாலியல் உந்துதலுக்குப் பங்களிக்கக்கூடும். அதிக எடை மற்றும் உடல் பருமன் உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், இது எல்லோருக்கும் பொருந்தாது. ஒருவேளை, உடல்பருமன் நேரடியாக ஒருவரின் பாலியல் வாழ்க்கையைப் பாதிக்கும்போது, அதற்கான சரியான மருத்துவரை அணுகுதல் சிறந்தது.
அதே சமயம், உங்கள் துணையுடன் நீங்கள் பாலியல் செயல்பாடுகளில் நெருக்கமாக இருக்கும்போது உங்கள் உடல் எடையைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையும். ஒருவேளை உங்களைப் பற்றி நீங்கள் அதிக நம்பிக்கையுடனும், கவர்ச்சியுடனும் உணரும்போது, உங்கள் பாலியல் வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாக அமையும்.