இன்றைய நவீன உலகம் ஆன்லைன் என்று ஆன பிறகு, நம் பிள்ளைகளை அவற்றின் பயன்பாடு இல்லாமல் வளர்ப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. கடந்த 12 மாதங்களில் கரோனா என்கின்ற கொடிய நோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, நம்மில் பெரும்பாலோர் முன்பை விட அதிக நேரம் ஆன்லைனில் செலவிட்டு வருகிறோம். மொத்தத்தில் இன்றைய உலகில் இணையம் ஒரு உயிர் நாடியாக இருந்து வருகிறது.
கரோனா நோய்த்தொற்று உலகின் பல துறைகளிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. இந்த 2021 ஆண்டு கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், ஆன்லைன் வகுப்புகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கியுள்ளனர். இன்றைய காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கி நிறுவனங்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு ஃபோன், லேப்டாப் வழியே கூகுள் ஹேங்அவுட் (Google Hangouts), கூகுள் மீட் (Google Meet) போன்ற வீடியோ மீட்டிங் ஆப்களின் மூலம் தங்கள் பணிகளைத் தொடர்கின்றனர். அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் கல்வி சார்ந்த கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டாலும் இதனைப் பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிப்பது அவசியம். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தில், ஆன்லைன் பயன்பாட்டை எப்படிக் கையாள வேண்டும் என்பது பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தம் பிள்ளைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள், அவற்றில் கொட்டிக் கிடக்கும், நல்லவை மற்றும் தீயவைகளில் எவற்றைப் பார்ப்பதற்கும், அறிந்துகொள்வதற்கும் தங்கள் பிள்ளைகள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், இதுபோன்ற சில விஷயங்களைப் பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
ஏனெனில், மூன்றில் ஒரு குழந்தை ஆன்லைன் மோசடி நபர்களிடம் மாட்டிக்கொள்கின்றன. அதேபோன்று, நான்கில் ஒரு குழந்தை அதனுடைய 12 வயதில் பாலியல் சார்ந்த ஆபாச வீடியோக்களை ஆன்லைனில் பார்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக விரோதிகளால் மார்ஃபிங் செய்யப்படுகின்றன. இன்றைய இளம் வயதினர் வெர்ச்சுவல் காதல், வெர்ச்சுவல் சாட்டிங் என்ற பெயரில் நேரத்தை அதிகளவில் வீணாக்குவதோடு, இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கும் ஆளாகிறார்கள்.
எனவே, பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க தேவையான முக்கிய நான்கு உதவிக்குறிப்புகளைப் பார்ப்போம்.
குழந்தைகளுடன் டிஜிட்டல் யுகத்தில் ஈடுபடுங்கள்:
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுடன் ஆன்லைனில் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் குழந்தைகள் வீடியோ கேம்களை அதிக நேரம் விளையாட விரும்பினால், அவர்கள் விளையாடும்போது அவர்கள் அருகில் உட்கார்ந்து கவனித்துக்கொள்ளுங்கள். தங்கள் பிள்ளைகள் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்தால், அவர்களுடன் நட்புகொள்வது அல்லது பின்தொடர்வது பற்றி விவாதிக்கவும். அவர்கள் யாருடன் நண்பர்களாக இருக்கிறார்கள், எந்த மாதிரியான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் ஒரு நண்பர் போல அடிக்கடி பேசுங்கள்.
பெற்றோர்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தவும்:
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றில் மக்கள் எவற்றை பகிர்ந்துகொள்கின்றனர், யாருடன் பகிர்ந்து கொள்கின்றனர், எதைப் பார்க்கின்றனர், யார் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் என்பனவற்றில் கட்டுப்பாட்டைக் கொடுக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் பல சிறுவர்களும் இணைகிறார்கள். இன்றைய குழந்தைகள் பெரும்பாலும், தங்கள் பெற்றோர்களின் செல்ஃபோன்களை பயன்படுத்துகின்றன. எனவே, பெற்றோர்கள் தங்கள் செல்போனில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
குடும்ப விதிகளை அமைக்கவும்:
சாதனங்களைப் பயன்படுத்துதல், இணையம் மற்றும் சமூக ஊடகங்களை அணுகுவதற்கான விதிகளில் ஒரு குடும்பமாக உடன்படுங்கள் மற்றும் இந்த விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெளிவாக பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். உங்கள் குழந்தைகளின் வயதைப் பொருத்து, சம்மந்தமில்லாத நெருக்கமான படங்கள் போன்ற சில வகையான புகைப்படங்களைப் பகிர்வதால் ஏற்படும், கடுமையான விளைவுகளை (சட்ட விளைவுகள் போன்றவை) பற்றி நீங்கள் பேசலாம்.
எடுத்துக்காட்டாக:
‘இரவு 8 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி பார்க்கக் கூடாது' அல்லது ‘படுக்கையறையில் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது.’ இதுபோன்ற விதிகளை உங்களது வீட்டில் அமைத்து, அவற்றை நீங்களும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்:
இன்றைய தொழில்நுட்பம் அதிக வளர்ச்சியைக் கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் இவற்றை வேகமாகப் பின்பற்றுபவர்கள். உங்கள் குழந்தைகள் புதிய ஆப் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது உங்கள் குழந்தையுடன் நீங்கள் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கும், ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி உரையாடுவதற்கும் ஒரு வாய்ப்பாகும். மேலும், புதிய ஆப் பயன்பாட்டின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நீங்கள் தனியே தெரிந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலும் ஆன்லைனில் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பது போன்ற சில வழிமுறைகள் ஃபேஸ்புக் பெற்றோர் போர்டல் (facebook.com/safety/parents) மற்றும் இன்ஸ்டாகிராம் பெற்றோர் போர்டல் (about.instagram.com/community/parents) ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பெற்றோராக இருக்கும்பட்சத்தில், அவற்றைப் பார்த்து, படித்து, தெரிந்துகொண்டு உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.