/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hjk,bhj.jpg)
உடற்பயிற்சி பழக்கவழக்கமானது, சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு அளிக்கிறது. இருப்பினும், இவை தடுப்பூசி போட்டதற்குப் பிறகு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்குமா? என்பது குறித்து ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் ஆரோக்கியம் நிறைந்த சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை, நாம் அனைவரும் பின்பற்ற, தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ள ஆலோசனை வழங்கி வருகின்றனர். அதேசமயம், கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிறந்த வழியாக தற்போது, உலகெங்கிலும் கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஆனால், உடற்பயிற்சி பழக்கவழக்கத்திற்கும், தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கும் சம்பந்தம் உள்ளதா? ஆம். உடற்பயிற்சியானது தடுப்பூசி போட்டதற்குப் பிறகு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இது தொடர்பாகக் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சி முடிவுகளில், தடுப்பூசி போட்ட பின் உடற்பயிற்சி செய்பவர்களிடமும், உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பவர்களிடமும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் திறன் அதிகம் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், முகமூடி அணிவது, கைகளைச் சுத்தமாகக் கழுவுவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கரோனோ பரவல் தடுப்பு வழிமுறை பட்டியலில் உடற்பயிற்சி மேற்கொள்வதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் கரோனா தடுப்பூசி போடுவதற்கு 2-3 மாதங்களுக்கு முன் உடற்பயிற்சி அல்லது ஏதாவதொரு உடல் ரீதியான செயல்பாடுகளிலோ ஈடுபடுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் கேட் எட்வர்ட்ஸ் மற்றும் ராபர்ட் பூய் ஆகியோரின் 2013 ஆய்வறிக்கையில், உடற்பயிற்சி செய்வது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, உடற்பயிற்சி செயல்பாடுகள் காரணமாக வயதானவர்களுக்கு தடுப்பூசிக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டதை உறுதி செய்துள்ளது.
தடுப்பூசிக்கு முன்னர் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொண்ட வெவ்வேறு வயதுடைய நபர்களை உள்ளடக்கிய 20 நபர்களிடம் நடத்திய மற்றொரு சோதனையின் முடிவில், 'கடுமையான' அல்லது 'நாள்பட்ட' உடற்பயிற்சியின் வெளிப்பாடு காரணமாகத் தடுப்பூசி போட்டதற்குப் பிறகு நோயெதிர்ப்பு சக்தி கணிசமாக அதிகரித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அதேபோன்று, 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி பெறுவதற்கு சுமார் ஆறு மணி நேரத்திற்கு முன்னர், இளம் வயது வாலிபர்கள் கொண்ட ஒரு குழு 25 நிமிடங்களுக்கு உடல் பயிற்சிகளை மேற்கொண்டனர். தடுப்பூசிக்கு முன்னர் உடற்பயிற்சி செய்யாத மற்றொரு குழுவோடு ஒப்பிடும்போது, அவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டதற்குப் பிறகு சிறந்த நோயெதிர்ப்பு சக்தி கிடைத்தது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து புதுடெல்லியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் மனோஜ் சர்மா கூறும்போது, "உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமான பழக்கம் போன்ற நல்ல வாழ்க்கை முறை தேர்வுகள் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகின்றன" என்கிறார். அதேபோன்று, "சுறுசுறுப்பாக இல்லாதவர்கள், உட்கார்ந்த இடத்தில் வாழ்க்கையை நடத்துபவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவோர் பலவீனமான நோயெதிர்ப்பு சக்திகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, உடற்பயிற்சி செய்பவர்களின் வலுவான நோயெதிர்ப்பு அமைப்புகள், தடுப்பூசிக்கு சிறந்த முடிவை அளிக்கக்கூடும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ”என்கிறார்.
மேலும், 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வானது, உடற்பயிற்சி செய்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின், மென்மையான வீக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போன்ற குறைவான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக, எச்.பி.வி தடுப்பூசி பெற்ற 116 இளம் பருவத்தினரை இந்த குழு கவனித்தது. தடுப்பூசி போட்டதற்குப் பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குச் சிறிய புண், உடல் வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை எந்தவொரு தடுப்பூசியின் பொதுவான பக்க விளைவுகளாகும் மற்றும் பாராசிட்டமால் போன்ற எளிய மருந்துகள் அதைச் சரிசெய்யக்கூடும் என்பதும் தெரிவித்திருந்தது. இருப்பினும், உடற்பயிற்சி செய்யும் நபர்களின் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இதனைத் தடுக்க வழிவகுக்கும். எனவே, ஒருவரது அன்றாட வாழ்வில் வழக்கமான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவு உட்கொள்வதும் மிகவும் அவசியம். ஏனெனில், ஆரோக்கியமான உணவு ஒருவரின் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தேவையான நோயெதிர்ப்பு செயல்முறைகளில் மாறுபாட்டை ஏற்படுத்தும். இந்த இரண்டுமே ஒருவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை விஷயங்களாகும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)