Skip to main content

காதுக்கு ஆப்பு வைக்கும் பட்ஸ்???  

Published on 13/05/2018 | Edited on 13/05/2018

கோழி இறகை எடுத்து காதில் விட்டு குடைந்தால், ஆஹா என்ன ஒரு சுகம்... இன்றும் கோழி இறகால் காது குடையும் பழக்கம் கிராமங்களில் இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில பல ஆண்டுகளாகவே கோழி இறகைத் தூக்கி எறிந்துவிட்டு 'இயர் பட்ஸ்' (ear buds) எனும் புதிய ஒன்றை வைத்து காது குடைந்து வருகின்றோம். இதன் மூலம் காதின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதாய் நம்பும் நமக்கு அதிர்ச்சி தெரிகிறது இந்தத் தகவல். இந்தியாவில், மக்களை தாக்கும் நோய்கள் என்று  பட்டியலிடும் நேரத்தில் மக்களே தேடிப்போய் ஏற்கும் நோய்களின் பட்டியலை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகிறோம். அப்படி கடந்த பத்து ஆண்டுகளில் 'இது தவறு' என்று தெரியாமலேயே நாம் தேடிப்போய் ஏற்கும் நோய்கள் என்ற வரிசையிலுள்ளது ஒடிடிஸ் எக்ஸ்டெர்னா (otitis externa). 

 

ear buds



அப்படி என்ன இது ஒடிடிஸ்- எக்ஸ்டெர்னா?  நம் உடலில் காது என்ற உறுப்பு ஒலியைக் கேட்க, ஒலியை யூகிக்க மட்டுமே பயன்படுகின்றது என்று நினைத்திருக்கின்றோம். உண்மையில் காது, கேட்க மட்டுமல்ல நமது உடலை சமநிலைபடுத்தும் (balance) ஒரு முக்கிய செயலையும் செய்கிறது. எடுத்துக்கட்டாக நாம் ராட்டினத்தில் சுற்றும் பொழுது தலை சுற்றினாலும் நாம் கீழே விழாமல் நம் உடலை சமநிலை தாங்கி நிற்கும் தன்மை போன்ற செயல்களில் காதின் பங்கும் உள்ளது. இப்படிபட்ட காது மிகவும் மென்மையான, அதே நேரம் சிக்கலான ஒரு உறுப்பும் கூட.

 

 


இப்படிப்பட்ட காதில் பட்ஸ் எனும் பஞ்சு பொருத்தப்பட்ட குச்சியை வைத்து உள்ளே உள்ள அழுக்கை நீக்குகிறோம் என்று கூறி காதை பாதுகாக்கும் செவி மெழுகை வெளியேற்றி நாமே ஒடிடிஎஸ்-எக்ஸ்டெர்னாவை தேடிப்போகிறோம் என்பதுதான் உண்மை. நீர், பலத்தகாற்று, மாசு, பேரிரைச்சல் போன்றவைகளில் இருந்து நம் காதை காப்பாற்றிக்கொள்ள காதிலுள்ள சுரப்பிகள் செவியில் மெழுகு போன்ற திரவத்தை சுரக்கிறது. இந்த திரவமானது வெளியிலிருந்து வரும் மாசு காதினுள் செல்லவிடாமல் தடுக்கும். ஆனால் வெளிப்புற மாசு அந்த மெழுகுடன் சேர்ந்து மஞ்சள் நிறமாகிவிடுகிறது. ஆனால் இதை அழுக்கு என்று பட்ஸ் மூலம் வெளியேற்றி வருகின்றோம். அதை விட முக்கியம் காதில் பட்ஸை வைத்து குடைவதிலுள்ள சுகத்திற்காகவே இதை செய்கிறோம்.

  otitis externa



இந்தக் காது குடையும் பழக்கமானது நாளடைவில் அதிகரித்து அதிக அளவு செவி மெழுகு வெளியேற்றப்பட்டால் ஒடிடிஎஸ் எனும் இந்தத் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதேபோல் இந்த நோயை 'ஸ்விம்மர்ஸ் இயர்' (swimmers ear) என்றும் குறிப்பிடுகின்றனர். காரணம், நீச்சலில் ஈடுபடுவோரின் காதில் நீர்புகுந்து நீரின் வழியே இந்த செவி மெழுகு வெளியேறி இந்தத் தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். காதில் வலி, வீக்கம், சிராய்ப்பு போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி பின்னர் காது முற்றிலும் கேட்கும் திறனை இழக்கும் வாய்ப்பு உண்டாம். அழுக்கு நீரில் நீச்சலடித்தாலும் இந்த நோய் வரும் வாய்ப்பு இருக்கிறதாம்.

 

 


'இயர் பட்ஸ்', 1923-ல் லியோ கோஸ்டெசாங் என்ற அமெரிக்கரால்தான் முதன் முதலில் குழந்தைகளின் காதில் இருக்கும் நீரை எடுக்க பயன்படுத்தப்பட்டது. ஒரு முனையில் பஞ்சு சுற்றிய குச்சியைப் பயன்படுத்தினார். அதற்கு முன் ஆய்வகங்களில் குறைவான அளவு திரவங்கள் ஒட்டிக்கொள்வதைத் துடைக்க மட்டுமே பயன்பட்டுவந்த பஞ்சு சுற்றப்பட்ட இந்தக் குச்சி இன்று முழுவடிவம் பெற்று மருந்துக் கடைகள், மளிகை கடைகள், பெட்டிக் கடைகள் என எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.

  swimming in dirty water



காதிலுள்ள அழுக்கை எடுக்கப்  பயன்படும் பொருளாகப் பார்க்கப்பட்டு வருகின்ற இந்த காது குடையும் பட்ஸ் மூலம் செவி மெழுகு  வெளியேற்றப்படுவதால் ஆபத்து  தேடி வாங்கப்படுகிறது என்பதே உண்மை. நம் வழக்கத்திலிருந்து மாறி, மேற்குலகத்தால் 'சுத்தம்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வழக்கங்கள் நமக்கு தீதுதான் என்று ஒவ்வொன்றாக அறியப்படுகிறது. இப்பொழுதுதான் நமக்கு விழிப்புணர்வு மெல்ல வருகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வை வைத்தும் செக்கு எண்ணெய், ஆர்கானிக் காய்கறி என்று இன்னொரு பக்கம் வியாபாரம் களை கட்டுகிறது என்பதுதான் வேதனை.     

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

தமிழகத்திலும் அதிகரிக்கும் தெருநாய்க் கடி சம்பவங்கள்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஈரோட்டிலும் சிவகங்கையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் தெரு நாய்கள் குழந்தைகளை கடிப்பது, சாலையில் செல்வோரை கடிப்பது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவொற்றியூரின் பரபரப்பான சாலை ஒன்றில் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெரு நாய் கடித்துக் குதறியது. அந்த தெருநாயை அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடித்தே கொலை செய்தனர்.

 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டி பகுதியில் வீட்டில் புகுந்த நாய் ஒன்று 65 வயது மதிக்கத்தக்க பெண்ணை கடித்துக் குதறியது. பின்னர் வெளியே வந்த அந்த நாய், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறியது. இதில் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் உட்பட ஏழு பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிவகங்கையில் காரைக்குடி கல்லூரி சாலையில் வெறிநாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்ததில் பெண் உட்பட ஐந்து பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்படியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தெரு நாய்க் கடி காரணமாக பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.