தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாததும்; அதற்கு நம்மை நாம் தகவமைத்து கொள்ள வேண்டிய தேவையும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அன்றாடம் பயன்படுத்துகிற தொழில்நுட்பம், அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அது நம்மையே ஆட்கொண்டு அடிமைப்படுத்தி இயல்பு வாழ்க்கையைப் பாதிப்படைய வைக்கும் அளவிற்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
செல்போன், தொழில்நுட்ப வளர்ச்சியில் அசுர வளர்ச்சி அடைந்து தொலைத்தொடர்பு சாதனமாக இன்றைய காலகட்டங்களில் அனைவரின் கைகளில் இருக்கும் மின்னணு சாதனம். வெறும் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே ஆரம்பத்திலிருந்து வந்த செல்போன், போகப்போக பல்வேறு பயன்பாட்டிற்கும் தேவைப்பட ஆரம்பித்தது; ஆண்டிராய்டு போன் எனப்படும் தொடுதிரை (டச்) போன்கள் வருகைக்குப் பிறகு செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மாற்றங்கள் ஆரம்பித்து விட்டது
பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த செல்போன் குழந்தைகள் கைகளுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் தெரிந்திருக்கும்; பெரியவர்களின் பயன்படுத்தாத நேரங்களில் வீடியோ கேம் விளையாடுவதற்குத் தான் போனை எடுத்துப் பயன்படுத்தினார்கள்; கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கினால் வீட்டில் முடங்கியிருந்த குழந்தைகளுக்குப் பள்ளிகள் இணையவழிக் கல்விக்குப் போட்ட அஸ்திவாரம் தான் குழந்தைகளுக்கென்று தனியாக போன் வாங்கிக் குடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள்
கேம் விளையாடாத என்று போனை பிடுங்கிய பெற்றோர்களே அதே போனை கையில் குடுத்து ‘ஆன் லைன் கிளாஸ் அட்டன் பண்ணு’ என்று சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
"ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா" என்கிற பாரதியின் பாடலை எந்நேரமும் செல்போன் கையுமாகவே திரிகிற குழந்தைக்கு ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது; காலையில் படிப்பு, மாலையில் விளையாட்டு என்று பழக்கப்படுத்தப் பட வேண்டியவர்கள் காலையில் ஆன்லைன் கிளாஸ், மாலையில் ஆன்லைன் கேம் என்று மாறிப்போனார்கள்
ஊரெல்லாம் கரோனா பரவி வருகிறது இந்த காலகட்டத்தில் யாரோடும் சேர்ந்து விளையாட முடியாத சூழலில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் ‘வெறும் வீடியோ கேம் தானே இதில் என்ன ஆகிவிடப் போகிறது’ என்று கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
ஒவ்வொரு வயதின் காலகட்டத்திற்கேற்ப உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றம் ஏற்படும்; இந்த செல்போன் பயன்பாடு வளர்வதற்குள்ளேயே அதில் பாதிப்பு ஏற்பட வைக்கிறது ; அதிக நேரம் கண்கள் ஸ்கிரீனைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் பார்வை கோளாறு, ஹெட்போன் பயன்படுத்துவதால் காதுகளின் கேட்கும் தன்மை குறைவது, ஞாபக சக்தி குறைபாடு போன்றவையும், ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் அமர்வதால் அதிக உடல்பருமனும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பப்ஜி போன்ற விளையாட்டுகளை விளையாடுகிற குழந்தைகளின் மனநிலை மென்மையான போக்கிலிருந்து வன்முறையை மிகச்சாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனநிலைக்கு வருகிறார்கள்; ஒருவரை சுட்டுக் கொல்வதையும், அவரை வீழ்த்துவதையும் சாகசமாக நினைக்கிற குழந்தை யதார்த்த வாழ்விலும் அதை நடைமுறைப்படுத்தும் தூரம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படலாம்.
ப்ளூவேல் கேம் விளையாண்ட சிறுவர்கள் அதன் வழிகாட்டுதலைத் தொடர்ச்சியாகக் கையாண்டு கொண்டே வருகிறார்கள்; ஒருகட்டத்தில் வெளி உலகத்தினை மறந்து கற்பனை உலகத்திற்குள் பயணப்பட ஆரம்பித்து விளையாட்டின் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் என்பதற்காக அதன் வழிகாட்டுதலின் படி மாடியிலிருந்து குதித்து இறந்து போன சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. அந்த அளவிற்கு வீடியோ கேம் விளையாட்டின் மூலம் மூளைச்சலவையாகிப் பகுத்தறியாமல் இறந்து போயிருக்கிறார்கள்
அரசு இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் பப்ஜி, ப்ளூவேல் போன்ற கேம்களை தடை செய்தது; ஆனாலும் ஒரு கேம் தடை செய்யப்பட்டால் உடனடியாக அதே போல் பெயரை மாற்றி புதிய கேம்கள் சந்தைக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது; இப்போது பெற்றோர்கள் தான் முழுக்க முழுக்க குழந்தையைக் கவனிக்க வேண்டிய முழுப்பொறுப்புக்கு ஆளாகிறார்கள்.
பெற்றோர்களும் சில சமயங்களில் தவறுகளைச் செய்கிறார்கள்; தங்களது குழந்தைகளின் தனித்திறமையை, அவர்கள் வெள்ளந்தியாக செய்யும் அழகான விசயங்களை வெளி உலகத்திற்குக் காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் பாடுவதையோ, ஆடுவதையோ, பேசுவதையோ வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்; அந்த வீடியோ வைரல் ஆகும்பட்சத்தில் அந்த குழந்தை செலிபிரிட்டியாகி விடுகிறது. பொது இடங்களுக்குப் போகும் போது அந்த குழந்தையுடன் செல்பி எடுத்துக் கொள்ள பேஸ்புக் லைக் விரும்பிகள் ஆசைப்படுகிறார்கள்; இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் போது நாமும் எல்லா குழந்தைகளைப் போலத்தானே என்கிற எண்ணம் மறந்து அந்த குழந்தை தன்னை பற்றிய சிறப்பியல்பு மனப்பான்மைக்கு வந்துவிடுகிறது; கிட்டத்தட்டப் பெரிய குழந்தையாகிவிடுகிறது.
குழந்தை கொண்டாடப்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்கிற எண்ணம் ஆபத்தானது என சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்
குழந்தையின் தனித்தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பொதுவில் பகிர்ந்துகொள்ளப்படுவதால் அவர்களைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அது உதவியாக மாறிவிடலாம் என்றும் அதற்கு அந்த குழந்தைகளின் பெற்றோரும் ஒரு வகையில் காரணமாகி விடுகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், தன்னை அனைவரும் பாராட்டுகிறார்கள் கொண்டாடுகிறார்கள் எனும் போது அந்த குழந்தையும் அதை விரும்புகிறது; டிஜிட்டல் உலகம் ஒரு இடத்தில் தேங்கி இருக்காது ஒவ்வொரு நாளும் புதிய விசயத்தைத் தந்து கொண்டே இருக்கும், புதிய வைரல் விசயத்திற்கு அனைவரும் தாவிவிட்டால் தன்னை கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த குழந்தைகள் எதையாவது புதிதாய் செய்ய முயற்சித்து அது முந்தை செயல் அளவிற்குக் கொண்டாடப்படாமல் போனால் அது தருகிற சோர்வினை தாங்கும் அளவிற்குக் குழந்தையின் மனம் பக்குவப்பட்டிருக்காது; அதை பெருந்தோல்வியாக நினைத்து கொண்டு எதிலும் கவனம் செலுத்தாத குழந்தையாகவும் மாறிப்போய் விட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் குழந்தைகளுக்கான மனநல மருத்துவர்கள்
இந்தியாவைத் தவிர்த்து தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களில் பலமடங்கு முன்னேறிய நாடுகளை எடுத்துக்காட்டாகப் பார்க்கும் போது டிஜிட்டல் உலகத்திற்குள் மூழ்கும் குழந்தைகளை கவனத்தில் கொண்டே அங்கே சட்டங்கள் புதிதாக இயற்றப்படுகிறது; வீடியோ கேம் உலகத்திற்குள் மூழ்கிப்போன குழந்தைகளுக்கு புத்தாக்கப்பயிற்சி முகாம்களை அந்த நாடுகளின் அரசே நடத்துகிறது; மேலும், குழந்தைகள் பொது இடங்களில் போன் பயன்படுத்துவதைப் பார்த்தால் பெற்றோருக்குத் தண்டனை, சமூகவலைதளங்களில் குழந்தைகளின் படங்களைப் பகிர்வதற்குத் தடை போன்ற சட்டங்கள் புதிதாய் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கிறது.
நாம் இன்னும் அந்த அளவிற்குப் போகவில்லை என்றாலும், அந்த நிலையை அடைய மாட்டோம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே குழந்தைகளை வளர்த்தெடுப்பது பெற்றோர்களுக்கு எந்த அளவு பெரும் பொறுப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு அவர்களின் அறிவு வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி அவர்களை செல்போன் உலகத்திற்குள் மூழ்க விடாமல் அந்தந்த பருவத்திற்கே உரிய புத்தம் புதிய விசயங்களை கற்றுத் தெரிந்து கொள்ள வைப்பதும் அவர்கள் கடமையாகும்.