இந்தியாவை வளப்படுத்திய புரட்சிகள் பல உண்டு. வெண்மைப் புரட்சி பால்வளத்தையும், நீலப் புரட்சி கடல் வளத்தையும், வெள்ளி புரட்சி என்பது முட்டை உற்பத்தியில் தன்னிறைவையும் உருவாக்கியது. இவற்றை நினைவுபடுத்தும் வகையில் 'சிவப்பு புரட்சி' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது ஆச்சி நிறுவனம். 'ரெட் சில்லி ரெவல்யூஷன்' எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாய முறையின் மூலம் மிளகாய் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் இயற்கை முறையில் விளைவித்த மிளகாயை ‘ஆச்சி’ மசாலா நிறுவனம் நல்ல விலைகொடுத்து விவசாயிகளிடம் இருந்து வாங்கி, அதன் உலர்தன்மையை நவீன முறையில் பரிசோதித்து, அரைத்து 'பேக்கிங்' செய்து, கடைகள் வழியாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.
ஆச்சி மசாலாவின் இந்த புதிய முயற்சியை ‘ஆச்சி' உணவுக் குழுமத்தின் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக்கும், இயற்கை விவசாய ஆர்வலரான ‘நல்லக்கீரை’ ஜெகனும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
"மக்களின் ஆரோக்கியத்தின் மீது கொண்ட அக்கறையால், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினேன். மக்களின் நம்பிக்கையைப் பெற்று, பத்து வருடங்களுக்கு முன்பே அதில் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தேன். பின்பு நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கும் 'உணவே மருந்து' என்ற கொள்கைத் திட்டத்தை செயல்படுத்தினோம். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள சிறந்த விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் விளைவித்த மிளகாய், தனியா, மஞ்சள் போன்ற விளைபொருட்களைத் தரம் பார்த்து வாங்கி மசாலா பொருட்களைத் தயாரித்து, மக்களுக்கு வழங்கி இந்த தொழிலில் தனித்துவம் பெற்றோம். தொடர் வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாக, நாட்டையே 'சிவப்பு புரட்சி' திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
அதற்கு செயல்வடிவம் கொடுத்து எங்களோடு இணைந்து செயல்படுகிறார், நல்லக் கீரை ஜெகன், திருவள்ளூர் மாவட்டம் மேலப்பேடு பகுதியைச் சேர்ந்த இவர் பி.காம். பட்டதாரி. தனித்துவமான பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதற்காக ஒரு கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நல்லக்கீரை ஜெகன், சுமார் பத்தாண்டு காலம் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நமது விவசாய முறைகளை பல்வேறு கோணங்களில் ஆய்வுசெய்துவிட்டு, 2011-ம் ஆண்டு இயற்கை வேளாண்முறையில் கீரை வகைகளைச் சாகுபடி செய்யத் தொடங்கினார். 45 வகையான கீரைகளை விளைவித்து விற்பனை செய்வதோடு, 'நல்லக்கீரை' என்ற பிராண்டையும் உருவாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் இணைந்து தமிழகத்தில் சிவப்பு புரட்சியை உருவாக்கியுள்ளோம். அது அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகுந்த பலனை அளித்துக் கொண்டிருக்கிறது” என்று பெருமிதமாகக் குறிப்பிடுகிறார், 'ஆச்சி மசாலா' தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக்.
இந்த புதிய முன்னெடுப்பு குறித்து நல்லக்கீரை ஜெகன் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். பத்திரிகையாளர்களின் கேள்விகளும் அதற்கு நல்லக் கீரை ஜெகன் அளித்த பதில்களும் வருமாறு:
மிளகாய் உற்பத்தியில் தமிழகம் முன்பு பெற்றிருந்த சிறப்புகளையும், பிற்காலத்தில் அதில் நிகழ்ந்த மாற்றங்களையும் சொல்லுங்கள்?
“உலகமே மிளகாயின் தேவைக்கு இந்தியாவைத்தான் நம்பி இருக்கிறது. சீனாவுக்குக்கூட இந்தியாவில் இருந்துதான் மிளகாய் செல்கிறது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் மிளகாய் உற்பத்தியில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற ஊர்கள் இந்திய அளவில் சிறந்து விளங்கின. வட இந்திய வியாபாரிகள் எல்லாம் தமிழகத்திற்கு வந்துதான் மிளகாய் கொள்முதல் செய்தார்கள். அந்த அளவுக்கு இங்கு அதிகமாக விளைந்தது. இப்போது மிளகாய் உற்பத்தி தேசிய சராசரியில் தமிழகம் 0.2' என்ற சதவீதத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறது. அதாவது ஒரு சதவீதம்கூட இல்லை. அதே நேரம் தெலுங்கானா மாநிலம் தேசிய சராசரியில் 35 சதவீத பங்களிப்பைச் செய்கிறது.
தமிழகத்தில் சராசரியாக ஒரு ஏக்கரில் 400 கிலோ மிளகாய்தான் கிடைக்கிறது. தெலுங்கானாவில் ஒரு ஏக்கரில் 4500 கிலோ மிளகாயை அறுவடை செய்து விடுகிறார்கள். அவர்கள் உயர் ரக விதைகளைப் பயன் படுத்தி அதிக விளைச்சலைப் பெறுகிறார்கள். தமிழகத்தில் மண் வளமும், சீதோஷ்ணநிலையும் மிளகாய் சாகுபடிக்கு மிக ஏற்றதாக இருக்கிறது. அவைகளை பயன்படுத்தி தமிழகத்தில் மீண்டும் மிளகாய் உற்பத்தியைப் பெருக்கி, இழந்த பெருமையை மீட்க இந்த 'சிவப்பு புரட்சியை முன்னெடுத்திருக்கிறோம்"
நெல் மாவட்டம் என்று வர்ணிக்கப்படும் திருவள்ளூரை, உங்கள் சிவப்பு புரட்சிக்கு முதல் மாவட்டமாக தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
"நெல் பயிரிட்டு, அதிலிருந்து ஒரு கிலோ அரிசி வீட்டிற்கு வருவதற்கு 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனாலும் நெல் விலை குறைவு. ஒரு ஏக்கரில் நெல் பயிரிட்டால் அதிகபட்சம் விவசாயிக்கு பத்தாயிரம் ரூபாய் தான் லாபம் கிடைக்கும். ஆனால் அதே ஒரு ஏக்கரில் மிளகாய் பயிரிட்டால், அதனை இரண்டு முதல் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து, அதில் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். அதனால்தான் நெல்லில் இருந்து மிளகாய் பயிருக்கு விவசாயிகளை மாற்றி, இயற்கை வழி வேளாண்மையை நடைமுறைப்படுத்தினோம்"
ரசாயன உரத்தை நம்பியிருந்த விவசாயிகளை இயற்கை வேளாண் முறைக்கு மாற்றி, நீங்கள் வெற்றிகண்டது எப்படி?
சரியாகத் திட்டமிட்டு கடுமையாக உழைத்ததால் தான் இதில் வெற்றிகாண முடிந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் 240 பஞ்சாயத்துக்கள் உள்ளன. அதில் பெரும்பாலான பஞ்சாயத்துக்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளை பொது இடத்தில் ஒன்றுதிரட்டிப் பேசினோம்.
அவர்களது வாழ்வாதாரமாக இருக்கும் மண், ரசாயன உரத்தால் வளமின்றி மலட்டுத்தன்மை ஆனதை ஆதாரத்தோடு எடுத்துரைத்தோம். அதனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, ஆரோக்கிய சீர்கேடு போன்றவற்றைச் சொன்னோம். அனைத்தையும் விஞ்ஞான ரீதியாக விளக்கியதும் விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க 'ஆச்சி' மசாலா நிறுவனமும் பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகிறது.
அது விவசாயிகளுக்குக் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்த, அவர்கள் இயற்கை விவசாய சாகுபடியில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்கள். விவசாயிகளின் மனப்பூர்வமான முழு ஒத்துழைப்புதான் எங்களது சிவப்பு புரட்சியின் வெற்றிக்குக் காரணம்"
சிவப்பு புரட்சி திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகளுக்கு நீங்களும், ஆச்சி மசாலா நிறுவனமும் எத்தகைய உதவி மற்றும் வழிகாட்டல்களைச் செய்கிறீர்கள்?
விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்ய விரும்பும் இடத்தின் மண்ணை ஆராய்ந்து, அதன் உயிர்த்தன்மையை பெருக்க வழிகாட்டுகிறோம். உரம், பூச்சி, நீர் மேலாண்மையைக் கற்றுக்கொடுத்து செலவினத்தைக் குறைக்கிறோம். சிறந்த மிளகாய் நாற்றுகளை ரக வழங்குகிறோம். செடியின் வளர்ச்சியை அவ்வப்போது நேரடியாகக் கண்காணித்து அதிக மகசூலுக்கு ஆலோசனை தருகிறோம். தொடர்ச்சியாக ஆலோசனை வழங்க சிறந்த வேளாண் நிபுணர் குழு எங்களிடம் உள்ளது. அதோடு குறைந்தபட்ச கொள்முதல் விலையை ‘ஆச்சி' நிறுவனம் முதலிலே நிர்ணயம் செய்துவிடுகிறது. அறுவடையின்போது மிளகாய் விலை அதிகரித்தால் சந்தை விலைக்கே உயர்த்தி கொள்முதல் செய்கிறார்கள். விவசாயிகள் பயிரிடும் காலத்தில் கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முதலிலேயே ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு கிராம வங்கி மூலம் கடன் கிடைக்கவும் வழிகாட்டுகிறோம். இப்படிப்பட்ட ஏராளமான பலன்கள் இருப்பதால், தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் இந்த சிவப்பு புரட்சி திட்டத்தில் ஏராளமாக இணைந்து கொண்டே இருக்கிறார்கள். ஆச்சி நிறுவனத்திற்கே இன்னும் பல நூறு டன் மிளகாய் தேவைப்படுகிறது"
தற்போது தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் உங்கள் சிவப்பு புரட்சி திட்டம் நடைமுறையில் உள்ளது?
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கருக்கு இலக்கு நிர்ணயித்து, வெற்றிகரமாக அதைச் செயல்படுத்தி வருகிறோம். பலமுறை அறுவடை நடந்துவிட்டது. ஆடிப்பட்டத்தில் மீண்டும் கோடிக்கணக்கான நாற்றுகள் நடுவதற்கு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நெல்லை போன்ற மாவட்டங்களிலும் ஏராளமான விவசாயிகள் இவ்வாண்டு இந்த திட்டத்தில் இணைந்து வேளாண் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகளும், அதிகாரிகளும் எங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருகிறார்கள். தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையும், வேளாண்மை மையமும் தேவையான உதவிகளைச் செய்கிறது.
சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் மிளகாய் மட்டுமின்றி இயற்கை வேளாண்மையில் மஞ்சள் சாகுபடி செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.
ஆச்சி நிறுவனத்தோடு இணைந்து நாங்கள் செயல்படுத்தும் இந்த புரட்சிகரமான திட்டத்தால் சிக்கிம் மாநிலம் போன்று தமிழகமும் முழுமையாக இயற்கை வேளாண்மைக்கு மாறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மிளகாய் விவசாயத்தில் தமிழகத்தை இந்த திட்டத்தின் மூலம் மீட்டெடுப்போம்." என்றார்.
இந்த புதிய திட்டத்தின் மூலம், ஆச்சி மசாலா நிறுவனத்திற்குத் தேவையான விளைபொருட்களின் 100 சதவீதத்தையும் 2025ம் ஆண்டிற்குள் இயற்கை வேளாண்மை மூலம் பெற இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகின்றனர் ஆச்சி நிறுவனத்தினர். மேலும், இத்திட்டத்தின்மூலம் தமிழகத்தில் குறைந்தபட்சம் 1 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை வேளாண்மை நடைபெறும் எனவும், அதன்மூலம் நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாகப் பல லட்சம் பேருக்கும் பணி கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் எனவும் தெரிவிக்கின்றனர் இத்திட்டத்தை மேற்கொள்ளும் குழுவினர்.