Skip to main content

வயாகரா... 20 ஆண்டுகள்! சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #1

Published on 21/07/2018 | Edited on 30/07/2018
romance



ஒரு வசந்த காலத்தின் மாலைப்பொழுது. மேன்டிஸ் என்னும் கும்பிடும் பூச்சி இனத்தில் பெண் மேன்டிஸ் தன்னுடைய இனப்பெருக்க காலத்தை ஒரு வித திரவத்தின் மூலம் ஆண் மேன்டிஸுக்கு தெரியப்படுத்தும். காற்றில் பரவுகின்ற திரவத்தின் வாசனையைத் தெரிந்து கொள்கிற ஆண் மேன்டிஸ் பெண் மேன்டிஸ் இருக்கிற இடத்துக்குக் கிளம்பும். பெண் மேன்டிஸின் பின் பக்கமாக வந்து ஆண் மேன்டிஸ் உறவுகொள்ளும். உச்சநிலையில் ஆண் மேன்டிஸ் தன்னுடைய உயிரணுவை பெண் மேன்டிஸுக்குள் செலுத்தும். அதுவரை அமைதியாக இருந்த பெண் மேன்டிஸ் உச்சநிலையில் ஆண் மேன்டிஸை கடித்து தின்றுவிடும். புணர்ச்சியுடனேயே ஆண் மேன்டிஸ் கதை முடிந்துவிடும். இது தான் சுகத்தைக் கொடுத்து உயிரைப் பறித்த கதை. இதே போன்ற நிகழ்வு மனிதர்களின் உறவிலும் நடந்தால் எப்படி இருக்கும். அதாவது உறவுக் கொள்ளும் நிலையிலேயே ஆண் இறந்துவிடுவது. இந்த காரியத்தை சப்தமில்லாமல் செய்து வருகிறது வயாகரா எனப்படும் சில்டெனபில் சிட்ரேட் மாத்திரை.

 

mantis



அவர் தமிழ் சினிமாவின் பிரபலமான டைரக்டர். சில வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பல புதுமுக நாயகன், நாயகிகளை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. புதிய படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வந்தது. அன்றைய படப்பிடிப்பை உற்சாகமாக முடித்தார் டைரக்டர். அன்றிரவு பத்து மணிவரை துணை இயக்குநர்களுடன்  அடுத்த நாளுக்கான படக்காட்சிகள் பற்றி விவாதித்தார். பின்னர் வயாகரா மாத்திரை போட்டுக்கொண்டு காத்திருந்தார். இரவு 11 மணி படத்தின் கதாநாயகி கதவை தட்டினார். உள்ளே அனுமதித்த டைரக்டர் அடுத்த நாள் எடுக்கப்போகும் பாடல் காட்சியை விளக்கினார். பாடல் முழுவதும் முதல் இரவு காட்சியாக இருக்கும் என்பதை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

 

 


கையோடு அந்தக் காட்சிக்கான ஒத்திகை பார்க்க நடிகையிடம் கேட்க, தயங்கியபடியே நடித்துக் காட்டிய கதாநாயகிக்கு மெல்ல புரிந்தது டைரக்டரின் நோக்கம். வேறு வழியில்லை அறிமுகப்படுத்தியவர் என்பதால்  ஒத்துழைத்தார். கேமிராவும் வெளிச்சமும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தினார் டைரக்டர். மலையாள படங்களில் பாதியிலேயே வயதான கணவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு எழுவது போல எழுந்தார் டைரக்டர். முடியாமல் விழுந்தவர் எழுந்திருக்கவில்லை. அப்பாவியான கதாநாயகி பாடல் காட்சியின் முடிவில் இப்படி நடக்கும் போல இருக்கிறது என டைரக்டரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். எழுந்திருக்காததை கண்டு பயந்துவிட்டார். டைரக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.

 

 

viagara



இந்தக் கதை இப்படி இருக்க சென்னையில் பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் இளம் தம்பதிகள் தேனிலவுக்காக ஏற்காடு சென்றனர். லேடிஸ் சீட், பகோடா பாயிண்ட் எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தனர். இரண்டு வயாகரா மாத்திரையை திருட்டுத்தனமாக முழுங்கி விட்டு முதலிரவு காட்சியை அதிரடியாகத் தொடங்கினார் சாப்ட்வேர் இன்ஜினியர். துணைவியின்  வற்புறுத்தலுக்காக இடைவேளை விட்டார். ஆனால் வயாகராவின் கோரப்பிடி அவரை விடவில்லை. இடைவேளைக்கு பின்னரான காட்சி குளியலறையில் தொடங்கியது. வென்னீர் குளியலில்  கிளைமாக்ஸ் நெருங்கியது. அப்போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலைகுலைந்து போனார். ஹிட்ச்காகின் சைக்கோ திரைப்பட குளியலறை காட்சி போல கிளைமாக்ஸ் முடிந்துவிட்டது.

 

heart attack



கணவர் இறந்துவிட அந்தப் பெண்ணை ஹோட்டல் ஊழியர்கள்  சேலத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். இப்படி வயாகராவின் கோரதாண்டவம் கடந்த இருபது ஆண்டுகளாக உலகமெங்கும் அமைதியாக அரங்கேறி வருகிறது. என்னதான் இந்த மாத்திரையால் இறப்பும் பாதிப்பும் எற்பட்டாலும் கள்ள மார்க்கெட்டில் இதனை வாங்கி திருட்டுத்தனமாக முழுங்கிவிட்டு உறவில் உயிரை பறிக்கொடுத்தவர்கள் அதிகம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் சண்டை காட்சிகளில் பறந்து பறந்து சண்டை போடுவார்கள். ரசிகர்களும் கதாநாயகனை புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்தவர் நடிகரின் டூப்தான் என தெரியவரும் போது சுவாரஸ்யம் போய்விடுகிறது. அது போலதான் வயாகராவை பயன்படுத்துவது. விக்டர் எப்போதும் இல்லாத அளவில் இப்போது உறவில் படுத்தும் பாடு  ஜூலியாவுக்கு புரியாத புதிராக இருந்தது. ஒரு நாள் கண்டுபித்துவிட்டார் கணவரின் அதிரடி ரகசியம் வயாகரா என்று. வந்த ஆத்திரத்தில் தலையில் சுத்தியால் அடித்ததில் விக்டர் இறந்துவிட்டர். இப்படி ஏராளமான கதைகள் உண்டு இந்த மேஜிக் மருந்துக்கு.

 

 


இந்த மாத்திரை விற்பனைக்கு வந்த 1998 வருடத்தில் மட்டும் 522 பேர் இறந்துள்ளனர் என அமெரிக்க இதயநோய் நிபுணர் டாக்டர் சஞ்சய் கௌல் கூறினார். அமெரிக்க தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்படி, 1998 இல் வயாகரா மாத்திரை உட்கொண்டதால் 1473 பேர்  பாதிக்கப்பட்டனர். அதில் 522 பேர் இறந்துவிட்டனர். 517 பேருக்கு நெஞ்சுவலியும் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது என்று தனது மருத்துவ கட்டுரையில் தெரிவித்தார். ஆனால் வயாகரா தயாரிப்பு நிறுவனமான ஃபைசர் இது நாள் வரை தொடர்ந்து மறுத்தே வருகிறது. ஆனால் வயாகரா பயன்படுத்துவதால் தலைவலி, கழுத்து முகம் நெஞ்சு பகுதிகள் சிவந்துபோதல், செரிமானமின்மை அதனுடன் சேர்ந்த வயிற்று வலி, மூக்கடைப்பு, மூக்கில் ஒழுகுதல், முதுகு வலி, தசை வலி, மங்கிய பார்வை உட்பட பார்வைக் குறைபாடு, திடீரென்று கேட்கும் திறன் இழத்தல் அல்லது குறைதல், தலைசுற்றல், அரிப்பு போன்றவை ஏற்படும் என்பதை  ஃபைசர் ஒப்புக்கொள்கிறது.

 

 

viagara romance



இன்னும் மூச்சுத்தினறல்,  பார்க்கின்ற அனைத்தும் நீலநிறம் கொண்டு பூசப்பட்டவையாக (சயானோப்ஸியா) தெரிதல், தொடர்ச்சியான விறைப்பால் ஏற்படும் இரத்த நாளங்களில் பாதிப்பு, தீவிரமான குறைந்த இரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்), மாரடைப்பு, வெண்ட்ரிக்குலர் அரித்திமியாக்கள், பக்கவாதம், உயர் ரத்த அழுத்ததால் மூளையில் ரத்த கசிவு என இவ்வளவு பிரச்சினைகளை ஏற்படுகிறது. தொடர்ந்து இந்த மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு பார்வை இழப்பு, காதுகேட்கும் திறன் இழப்பு, கல்லீரல் குறைபாடு ஏற்படுவது உறுதி என்கிறது கனடா நாட்டு மருத்துவ அறிக்கை ஒன்று. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் சில சமயங்களில் சில்டெனாபில் பார்வைக் குறைபாட்டை உருவாக்குகிறது என்பதை ஒப்புக்கொள்கிறது. இதையே ஃபைசரும் சில சமயங்களில்தான் என சொல்லி தப்பித்து வருகின்றது. இங்கிலாந்து, கனடா நாடுகள் உட்பட பல நாடுகள் வயாகரா மீது சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆனாலும் அமெரிக்கா பிடிவாதமாக இருக்கிறது. ஏனெனில் வயாகரா அமெரிக்காவின் கெளரவம்.

 

 


வயாகரா விறைப்புத்தன்மைக்காக கொடுக்கும் மாத்திரை சரி. ஆனால் தீவிர விறைப்புத்தன்மை குறைப்பாடு இதய நோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. அப்படி என்றால் இருதயப் பிரச்சினை இருப்பவர் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்காக இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வது இன்னும் அதிக பாதிப்பு ஏற்படுத்தாதா? ஆனால் சில சமயம்  இதய நோய்க்கும் புற்றுநோய்க்கும் இந்த வயாகரா நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது என்பதுதான் வேடிக்கை. இன்னும் விரிவாகப் பார்ப்போம். இந்தக்  கட்டுரை தொடங்கும் போது ஒரே கட்டுரையில் முடித்துவிடலாம் என நினைத்தேன். இதுவும் வயாகரா போல மூன்று தொடர் கட்டுரையாகிவிட்டது. அடுத்த பகுதியில் சந்திப்போம்...

அடுத்த பகுதி:

வயாகரா... 20 ஆண்டுகள்! சுகத்தைத் தந்து உயிரைப் பறித்த கதை #2